– மனம் திறந்த இயக்குநர் ஸ்ரீதர்
‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் 1992 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வாழ்வை கல்கி வார இதழில் தொடராக எழுதியவர் பத்திரிகையாளரான எஸ்.சந்திர மௌலி.
நன்றியுடன் அதிலிருந்து ஒரு பகுதி:
“இந்தி நடிகர் ராஜேந்திரகுமார் என் நெருங்கிய நண்பர் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சென்னைக்கு வந்தால், என் வீட்டில் ஒரு வேளையாவது உணவருந்தி, சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் தான் போவார்.
இம்முறை சென்னை வந்திருந்தபோது, என் பிரச்சினைகளை நன்கு அறிந்திருந்த அவர், சித்ராலயாவின் நிலைமை பற்றி விசாரித்தார்.
“பொருளாதார நெருக்கடியை ஓரளவு சமாளிக்க, ஹிந்தி ஹீரோ-72 பெற்ற வெற்றி உதவியது என்றாலும், முழுவதுமாகத் தீரவில்லை’’ என்றேன்.
“தமிழில் ‘ஹீரோ 72’ என்ன ஆயிற்று?’’
“சிவாஜியும், தம்பி ஷண்முகமும் எவ்வளவோ முயன்றும், எனக்குக் கால்ஷீட் அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுக்க முடியவில்லை. படம் தொங்கலில் தான் இருக்கிறது’’
– சிரத்தையுடன் கேட்டுக் கொண்ட ராஜேந்திர குமார், சற்று நேரம் மௌனமாக யோசித்துவிட்டுத் திடீரென்று, “ஏன் ஸ்ரீதர், நீங்க ஏன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்கக்கூடாது?’’ என்று கேட்டார்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், நான் தயங்கித் தடுமாற, அவரே தொடர்ந்து “எனக்கென்னமோ உங்க பிரச்சினை தீர அது தான் வழி என்று தோன்றுகிறது’’ என்றார்.
நான் நிதானமாக “உங்களுக்கு என் மேல் உள்ள அக்கறை எனக்குப் புரிகிறது. ஆனால் உங்கள் ஆலோசனையைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை’’ என்றேன்.
“ஏன், எம்.ஜி.ஆர் உங்களுக்கு கால்ஷீட் தர மாட்டாரா?’’
“அப்படியில்லை. ஏற்கனவே எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்து, சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து எம்.ஜி.ஆரின் ஒத்துழைப்பு கிடைக்காததால், படத்தை அப்படியே நிறுத்த வேண்டியதாகிவிட்டது.
பிறகு நானே அதே கதையில் சில மாற்றங்களைச் செய்து, சிவாஜியை வைத்துப் படம் எடுத்ததும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அப்படியிருக்க…’’
“ஸ்ரீதர்! இப்போ அந்தப் பழைய கதையை நினைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர் ஒத்துழைப்புத் தர மறுப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை’’
“நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் அதிலும் ஒரு தர்ம சங்கடம். இப்போ எம்.ஜி.ஆர் கால்ஷீட் தருவதாக வைத்துக் கொண்டால், சிவாஜி என்ன நினைப்பார்?
“ஓஹோ.. நம்ம படம் பாதியிலேயே நிற்க, எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுக்கப் போய்விட்டாரா ஸ்ரீதர்’’ என்று சிவாஜி தப்பு அர்த்தம் செய்து கொள்ளக்கூடும்.
அல்லது எம்.ஜி.ஆரே ‘முதலில் சிவாஜி படத்தை முடித்துவிட்டு வா; அப்புறம் பார்க்கலாம்’’ என்று கூறலாம்..’’
ராஜேந்திர குமார் என் சமாதானங்களை ஏற்கவில்லை.
“ஸ்ரீதர், யோசித்து யோசித்துத் தயங்காதீர்கள். எதற்கும் எம்.ஜி.ஆரை அணுகுங்கள். அவர் ஒப்புக் கொள்வார் என்றே எனக்குத் தோன்றுகிறது. உங்க பிரச்சினை எல்லாம் தீர அது தான் வழி’’
“பெரிய ரிஸ்க் இல்லையா?’’
“ரிஸ்க் தான். துணிந்து ரிஸ்க் எடுங்க’’
ராஜேந்திரகுமார் உறுதியாகக் கூற, நானும் அவர் யோசனையை ஏற்பது என்று தீர்மானித்தேன்.
இதற்கு முன்பு ஓரிரு சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆரை நான் சந்திக்க நேர்ந்தபோது அவர் “நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும்;
முன்பு ஒருமுறை ஆரம்பித்த படம் கூட நின்று போய்விட்டதே’’ என்று கூறியது எனக்கு நினைவில் இருந்தது.
அதை ஒருவேளை உபச்சாரமாகக் கூறியிருப்பாரோ?
யார் என்ன விமர்சனம் செய்தாலும் சரி, எம்.ஜி.ஆரை அணுகுவது என்று தீர்மானத்துக்கு வந்தேன். ஆனாலும் உள்ளூர ஒரு தயக்கம்.
எப்படி எடுத்துக் கொள்வாரோ? என்ன பதில் கூறுவாரோ?
எனவே நான் நேரில் எம்..ஜி.ஆரைப் பார்த்துப் பேசாமல், கன்னையா என்ற நண்பரிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.
‘சின்னத்தம்பி’ போன்ற படங்களை டைரக்ட் செய்தாரோ பி.வாசு, அவருடைய அப்பா பீதாம்பரம் எம்.ஜி.ஆரிடம் மேக்கப் மேனாக இருந்தார்.
அவரிடம் என் விருப்பத்தை கன்னையா தெரிவிக்க, பீதாம்பரம் எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைச் சொல்ல, எம்.ஜி.ஆரின் பதில் திரும்பவும் கன்னையா மூலமாக எனக்கு வந்து சேர்ந்தது.
அதிலே எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது.
பதில் இது தான்.
“ஸ்ரீதர் படத்தில் நடிக்கச் சம்மதம். ஆனால் மேலே இது குறித்துப் பேச வேண்டும். நாங்கள் சந்திப்பது ஸ்ரீதர் வீட்டிலும் வேண்டாம்; என் வீட்டிலும் வேண்டாம் ஒரு பொது நண்பரின் வீடாக இருக்கலாம். நம்பியார் வீடாக இருந்தால் சௌகரியம்’’
நான் நெகிழ்ந்து உணர்ச்சிவசப்பட்டுப் போனேன்.
எம்.ஜி.ஆர் என் வீடு தேடி வந்தால் நன்றாயிராது. அதே சமயம் அவர் வீட்டுக்கு நான் போனால், மற்றவர்கள் என்னைக் கேவலமாக- ‘அவர் வீடு தேடி அவர் காலில் விழபோனேன்’’ என்று பேசுவார்கள்.
அந்த அவமானம் எனக்கு வரக்கூடாது என்று அவர் நினைத்தார். அதனால் பொது நண்பர் வீட்டில் சந்திக்கலாம் என்று தகவல் அனுப்பியிருக்கிறார்.
நான் கன்னையாவிடம் சொன்னேன், “எம்.ஜி.ஆரை நான் சென்று சந்திப்பது தான் முறை. எனக்கு இதில் தயக்கமோ, சங்கடமோ கிடையாது. அவர் உள்ளம் எனக்குப் புரிந்து விட்டது. ‘தோட்டத்தில் வந்து சந்திக்கிறேன்’ என்று அவரிடம் கூறிவிடுங்கள்’’.
மறுநாள் காலை தோட்டத்தில் சிற்றுண்டிக்கு வரும்படி எம்.ஜி.ஆரிடம் இருந்து தகவல் கிடைத்தது.
ராமாவரத்தில் ‘தடபுடலான’ சிற்றுண்டி.“உங்களை வைத்துப் படம் எடுக்க வாய்ப்புக் கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்.’’ – என்று நான் கூற, “உங்களுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதில் எனக்கும் சந்தோஷம்’’ என்றார் எம்.ஜி.ஆர்.”
அதன் பிறகு ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் – ‘உரிமைக்குரல்’.
– மணா