தந்தை பெயரில் கட்சி தொடங்கிய மகன்கள்!

குழந்தையோ, சிறுக சிறுக சேர்த்த பணத்தில் கட்டிய வீடோ அல்லது அரசியல் கட்சியோ என எதுவாக இருந்தாலும் அதற்கு பெயர் வைப்பதற்குள் பெரும்பாடு பட வேண்டியுள்ளது.

பெங்களூருவில் 26 கட்சி தலைவர்கள் மாரத்தான் ஆலோசனை நடத்திய பிறகே ‘இந்தியா’ என தங்கள் கூட்டணியின் பெயரை முடிவு செய்தனர்.

ஆனால் சில இளம் தலைவர்களும், கிழ தலைவர்களும், கோபத்தில் ஆரம்பிக்கும் தங்கள் அரசியல் கட்சிகளுக்கு, சடுதியில் தந்தையின் நாமகரணம் சூட்டி, அடுத்த கட்ட வேலையை பார்க்கப்போய் விடுகிறார்கள்.

அப்பா பெயரில் மகன்கள் தோற்றுவித்த சில கட்சிகள் குறித்த செய்தி தொகுப்பு:

நவீன் பட்நாயக் ஒடிசாவை தளமாக கொண்டு இயங்கும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக்.

அவரது தந்தை பிஜு பட்நாயக், இந்தியாவின் மூத்த அரசியல் வாதி. இந்திரா காந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா தளத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவர்.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து அதிமுகவை ஆரம்பித்த பின், இரு கட்சிகளையும் இணைக்க பிஜூ பட்நாயக் தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர். இதற்காக சென்னை வந்து புரட்சித்தலைவர் மற்றும் கலைஞர் ஆகிய இருவரையும் சந்தித்து பேசியவர்.

ஒடிசா முதலமைச்சராக இருந்த பிஜு பட்நாயக் மறைவுக்கு பிறகே அவர் மகன் நவீன் பட்நாயக் அரசியலுக்கு வந்தார். ஜனதா தளம் சார்பில் அஸ்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து 1997 ஆம் ஆண்டு தனது தந்தை பிஜு பெயரில் ‘பிஜு ஜனதா தளம்’ எனும் கட்சியை ஆரம்பித்தார்.

2000 ஆம் ஆண்டில் ஒடிசா முதமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.

அந்த மாநிலத்தில் கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ச்சியாக முதலமைச்சராக இருக்கிறார், கட்டை பிரமச்சாரியான நவீன்.

இன்றைக்கும் ஒடிசா மாநிலம் நவீன் கோட்டையாகவே உள்ளது. பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி எதிலும் ஒட்டாமல் நடுநிலையில் இருக்கும்

அவர், வரும் மக்களவைதேர்தலிலும் எந்த அணியிலும் இணையப்போவதில்லை. அதே நேரம், மோடிக்கு எதிராகவும் செயல்பட மாட்டார்.

ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர முதலமைச்சராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி ஆரம்பித்த கட்சி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ். மூத்த காங்கிரஸ் தலைவரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் தான், ஜெகன்.

முதலமைச்சராக இருந்தபோது ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். தந்தை வகித்த முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஜெகன். மேலிடம் கொடுக்கவில்லை.

மக்கள் செல்வாக்கு இருந்ததால், தந்தை பெயரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கி, ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு சமாதி கட்டி விட்டார்.

அந்த மாநிலத்தில் மொத்தம் 25 தொகுதிகள். கடந்த தேர்தலில் இவரது கட்சி 22 இடங்களில் வென்றது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 3 இடம்.
இன்றைய தேதியில் ஜெகன் கட்சியும், சந்திரபாபு கட்சியும் மட்டுமே களத்தில் வலிமையாக உள்ளன. இருவரும் தேசிய கட்சிகளை தெறிக்க விட்டுள்ளனர்.

ராம்விலாஸ் பஸ்வான்

பீகார் மாநில தலித் மக்களிடையே அபரிமிதமான செல்வாக்கை பெற்றவர் ராம்விலாஸ் பஸ்வான். பலமுறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். 9 முறை மக்களவைவுக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவரது கட்சியின் பெயர் லோக் ஜனசக்தி.

இவரது திடீர் மறைவு கட்சியில் பிளவை உண்டாக்கியது. கட்சியை கைப்பற்றுவதில் ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக்குக்கும், பஸ்வான் சகோதரர் பசுமதி குமாருக்கும் இடையே மோதல் உருவாகி, விவகாரம் தேர்தல் ஆணையம் வரை சென்றது.

விசாரித்த ஆணையம் லோக்ஜனசக்தி கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியது.

இதனால் பசுபதி, ‘ராஷ்டிர லோக் ஜனசக்தி’ எனும் கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராகி விட்டார்.

சிராக், தனது தந்தை பெயரில் கட்சி தொடங்கினார். அந்த கட்சியின் பெயர்- லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ்வான்).

பசுபதியும், சிராக்கும் மக்களவை எம்.பி.க்களாக உள்ளனர். பசுபதி மத்திய அமைச்சராகவும் இருக்கிறார்.

பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து கடந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட சிராக், மீண்டும் பழைய கூட்டணிக்கு திரும்பி விட்டார்.

ஆம்.கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடந்த பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சிராக் பங்கேற்றார்.

அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் மக்களவை தேர்தல்தான், சிராக்கின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும்.

பால் தாக்கரே சிவசேனா

மகாராஷ்டிர மாநிலத்தை தன் கண் அசைவில் வைத்திருந்தவர் பாலாசாகேப் தாக்கரே எனும் பால் தாக்கரே. சிவசேனா கட்சியின் நிறுவனர். கடந்த 2012 ஆம் ஆண்டு பால் தாக்கரே மறைந்த நிலையில் அவர் மகன் உத்தவ், கட்சியின் தலைவர் ஆனார்.

தனது குடும்பத்தார் அதிகாரபீடத்தில் அமர்வதை விரும்பாதவர் பால் தாக்கரே.ஆனால் உத்தவுக்கு பதவி ஆசை வந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்தார். இந்த கூட்டணி ஜெயித்தது.

முதலமைச்சர் பதவி கேட்டார், உத்தவ். மறுத்தது, பாஜக.

இதனால் பாஜக அணியில் இருந்து வெளியேறினார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனார். ஆனால் நிலைக்க வில்லை.

சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அண்மையில் கட்சியை உடைத்தார். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக அணிக்கு தாவினார். ஏக்நாத்தை முதலமைச்சராக்கியது, பாஜக.

ஏக்நாத் பக்கம் நிறைய எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் இருந்ததால் அவர் தலைமையில் இருப்பதுதான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

வேறுவழி இல்லாத உத்தவ், தனது தந்தையின் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.

அந்த கட்சியின் பெயர்- சிவசேனா ( உத்தவ் பாலாசாகேப் தாக்கரே)சுருக்கமாக சிவசேனா ( UBT).

சிராக்கை போன்றே, உத்தவ் தாக்கரேயின் எதிர்காலத்தையும் வரும் மக்களவை தேர்தலே தீர்மானிக்கும்.அவர் இப்போது காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ அணியில் இருக்கிறார்.

என்.ஆர்.காங்கிரஸ்

தந்தை மீதான அபிமானம், தங்களுக்கு ஓட்டுகளை வாங்கித்தரும் என்ற எண்ணத்தோடு, மேற்சொன்ன நால்வரும் அப்பா பெயரில் கட்சி தொடங்கினர். பக்கத்து மாநிலமான புதுச்சேரியை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் என்.ரங்கசாமி என்ன செய்தார் தெரியுமா?

அவருக்கு முதலமைச்சர் நாற்காலி மீது ஒரு கண். மேலிடத்தில் கேட்டார். கொடுக்கவில்லை.

காங்கிரஸை உதறினார். தன் பெயரிலேயே, என்.ஆர்.காங்கிரஸ் எனும் தனிக்கட்சியை ஆரம்பித்தார்.

தேர்தலில் வென்று பாஜக ஆதரவுடன் என்.ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சராகி விட்டார்.

– பி.எம்.எம்.

You might also like