ஒரே தொகுதியின் எம்.எல்.ஏ-வாக 50 ஆண்டுகள்!

கேரள முன்னாள் முதல்வரின் அரசியல் சாதனை

ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒருவரால் தொடர்ந்து எத்தனை முறை ஜெயிக்க முடியும்? அதிகம் போனால் 4 முறை ஜெயிக்கலாம். பெரிய தலைவராக இருந்தால் இன்னும் 2 முறை அதிகமாக ஜெயிக்கலாம்.

அதன்பிறகு அந்த எம்.எல்.ஏ எத்தனை நல்லவராக இருந்தாலும் தொகுதி மக்களுக்கே அவர் மீது கொஞ்சம் வெறுப்புத் தட்டிவிடும்.

தொகுதிக்காக எத்தனை நல்ல விஷயங்களைச் செய்திருந்தாலும் ஒரு காலகட்டத்தில் அவரது குறைகள் பெரியதாகத் தெரியும்.

சரி.. புதியவருக்கு ஒரு வாய்ப்பு அளிப்போமே என்ற எண்ணம் தொகுதி மக்கள் மனதில் ஏற்படும். அதனால் ஒரு தேர்தலிலாவது அவரை மக்கள் தோற்கடித்து விடுவார்கள்.

இந்தியாவின் தேர்தல் அரசியலில் நாம் பார்த்த விஷயங்கள் இவை.

ஆனால் இதையெல்லாம் கடந்து புதுப்பள்ளி சட்டப்பேரவை தொகுதியில் தொடர்ந்து 11 முறை தேர்தலில் வெற்றி பெற்று தன் தொகுதி மக்களின் மனம் கவர்ந்தவராக இருக்கிறார் உம்மன் சாண்டி.

கேரளாவின் முன்னாள் முதல்வரான அவர், சட்டமன்ற உறுப்பினராக தனது பொன்விழாவைக் காண்டவர்.

இந்த 50 ஆண்டுகளிலும் அவர் ஒரே தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே இத்தகைய சாதனையை இதுவரை எந்தவொரு தலைவரும் படைத்ததில்லை.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உம்மன் சாண்டி அறிமுகமானது 1970-ம் ஆண்டில்தான்.

இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த அவர், தனது 27-வது வயதில் முதல் முறையாக இத்தொகுதியின் எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டார்.

அரசியல் அனுபவம் இல்லாதவரான உம்மன் சாண்டிக்கு சீட் வழங்கப்பட்டதில் தொகுதியின் மூத்த காங்கிரஸ்காரர்கள் மத்தியில் அப்போது அதிருப்திகூட எழுந்தது.

உள்கட்சியிலேயே எதிராளிகளைக் கொண்டிருந்த அவர், தேர்தலில் ஜெயிக்க மாட்டார் என்றே பலரும் கருதினர்.

ஆனால் எதிர்ப்புகளை பொடிப்பொடியாக்கி 7,288 வாக்குகள் வித்தியாசத்தில் இத்தேர்தலில் வென்றார் உம்மன் சாண்டி.

முதல் முறை எம்.எல்.ஏ ஆன பிறகு செய்த பல நல்ல காரியங்களால் தொகுதி மக்களின் செல்லப் பிள்ளையாகவே மாறிப்போனார் உம்மன் சாண்டி.

அதனாலேயே 1977, 1980, 1982, 1987, 1991, 1996, 2001, 2006, 2011 மற்றும் 2016 என்று புதுப்பள்ளியில் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வென்றுள்ளார்.

ஒவ்வொரு முறையம் கடந்த தேர்தலில் பெற்ற வித்தியாசத்தை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்தை காண்பது கேரள மக்களின் வழக்கம். ஒருமுறை இடதுசாரி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அடுத்தமுறை காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சிக்கு வரும் என்பதை அடித்துச் சொல்லிவிடலாம்.

இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், தொடர்ந்து 50 ஆண்டுகளாக புதுப்பள்ளி மக்கள் மனதில் மட்டும் மாறாமல் இருப்பவர் உம்மன் சாண்டி.

கோஷ்டி அரசியலுக்கு பெயர்பெற்ற காங்கிரஸ் கட்சியில், கருணாகரன் கோஷ்டி, ஏ.கே.அந்தோணி கோஷ்டி என்று எல்லா கோஷ்டிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக இருப்பது உம்மன் சாண்டியின் சிறப்பம்சம்.

இதனால்தான் கடந்த 2011 – 2016 ஆட்சிக்காலத்தை வெறும் 2 உறுப்பினர்கள் மெஜாரிட்டியுடன் அவரால் முழுமையாக கடக்க முடிந்தது.

மற்ற அரசியல் தலைவர்களைப் போல் மடைதிறந்த வெள்ளம்போல் பேசும் ஆற்றலோ, மக்களைக் கவரும் தனித்துவமோ, புத்தகங்களைப் படிக்கும் பழக்கமோ உம்மன் சாண்டிக்கு இல்லை.

இருந்தாலும் கேரள மக்கள் மனதில் நாயகனாய் இருக்கிறார் உம்மன் சாண்டி.

இதுபற்றி ஒருமுறை பேசிய உம்மன் சாண்டி, “மக்கள்தான் நான் படிக்கும் புத்தகம்.

காகிதங்களால் ஆன புத்தகங்களைப் படித்தோ, வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தோ நான் திட்டங்களைத் தீட்டுவதில்லை.

சாதாரண மக்களிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளைக் கேட்டே நான் திட்டங்களைத் தீட்டுகிறேன்” என்றார்.

ஒரே தொகுதியில் தொடர்ந்து 11 முறை வெற்றி பெற்றதன் ரகசியம் இதுதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் இந்த மக்கள் நாயகன்.

– பிரேமா நம்பியார்

You might also like