எதிர்க்கட்சிகளை உடைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் பாஜக!

1998 ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிறிதும் பெரிதுமாக 20 கட்சிகள் அங்கம் வகித்தன. அப்போது பாஜக ஆளுங்கட்சி.

கொள்கை முரண்பாடுகள், பொது செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம், பிராந்திய கட்சிகளின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் உண்டான தயக்கம் போன்ற பல காரணங்களால், அந்தக் கூட்டணி உடைய ஆரம்பித்தது.

முதலில் வெளியேறிய கட்சி அதிமுக.

அதன்பிறகு தெலுங்கு தேசம், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம் போன்ற பெரிய கட்சிகளும், சில சின்னஜ் கட்சிகளும் பாஜக அணியிலிருந்து கழன்று கொண்டன.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி, முதல் கட்ட  ஆலோசனையை நடத்தி முடித்துள்ளன.

அடுத்த கூட்டம் பெங்களூருவில் வரும் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள 24 கட்சிகளுக்குக் கூட்டத்தை நடத்தும் காங்கிரஸ் அழைப்பு அனுப்பியுள்ளது.

பாட்னா ஆலோசனையில் பங்கேற்காத சோனியா காந்தி பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

பாஜகவும் வியூகம்:

எதிர்க்கட்சிகள் பலமான அணியை உருவாக்குவது உறுதியான நிலையில், பாஜகவும் தேர்தல் வியூகத்தை ஆரம்பித்துவிட்டது.

தங்கள் கூட்டணியில் புதிய கட்சிகளைச் சேர்க்க முடிவு செய்துள்ள பாஜக, முதல் கட்டமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வரும் 18 ஆம் தேதி டெல்லியில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக, தமாகா ஆகிய கட்சிகளுக்கு, டெல்லி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு இல்லை.

தமிழ்நாடு, புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களில் பாஜக கூட்டணியில் பெரிய கட்சிகள் இல்லை.

இதனால் பிராந்திய கட்சிகளில் பிளவு உண்டாக்கி அந்தக் கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் வேலைகளில் பாஜக முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது.

முதல்கட்டமாக மகாராஷ்டிர மாநிலத்தில், பாஜகவின் ‘உடைப்பு ஆபரேஷன்’ மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை பல மாதங்களுக்கு முன்பே இழுத்துக் கொண்டது பாஜக. சிவசேனாவை உடைத்த ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவியை பரிசாக வழங்கியது.

சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித்பவாரை ’பதவி வலை’ வீசி பிடித்தது. பாஜக கூட்டணியில் இணைந்த அவருக்கு மகாராஷ்டிர துணை முதலமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அணிகளின் தலைவர்களான ஏக்நாத், அஜித் பவார் ஆகியோர் டெல்லி கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

பீகார் சட்டசபைத் தேர்தலின் போது பிரிந்து சென்ற லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வானுக்கும் அழைப்பு அனுப்பி உள்ளது பாஜக மேலிடம்.

ராம்விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் எம்.பி.யாக உள்ளார். பீகாரில் அவர் மூலம் தலித் ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என்பது பாஜகவின் கணக்கு.

தேவகவுடாவின் மதச்சாரபற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் பாஜக மேலிடம் பேச்சு நடத்தி வருகிறது.

உத்தரபிரப் தேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ராஷ்டிரிய லோக் தளம் கட்சியை முழுதாக இழுக்கவும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்தவும் தீவிர முயற்சிகள் நடக்கின்றன.

இன்னும் சில மாதங்களில் இந்திய அரசியல் போக்கு நிறைய திருப்பங்களை சந்திக்கப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

– பி.எம்.எம்.

You might also like