– அண்ணாவிடம் மக்கள் கேட்ட கேள்வி
(2001-ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் கா.காளிமுத்து அளித்த பேட்டி)
அ.தி.மு.க. தொடங்கப்பட்டபோது அக்கட்சியில் சேர்ந்து, கட்சியின் அவைத் தலைவராக உயர்ந்து நிற்கும் முன்னாள் அமைச்சர் காளிமுத்து பகிர்ந்து கொண்ட அவரது நினைவுகள்.
“ஒருமுறை அண்ணா தூத்துக்குடிக்கு போய்க் கொண்டிருந்தபோது, கோவில்பட்டி அருகே கார் ரிப்பேராகிவிட்டது. காரில் யார் இருக்கிறார்கள் என்று எல்லோரும் ஆவலோடு பார்க்க, “இவர் தான் அண்ணா” என்று ஒருவர் கூறியுள்ளார்.
உடன் கூட்டத்திலிருந்த ஒருவர், கட்சிக் கொடியைப் பார்த்துவிட்டு, “நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியில் இருக்கிங்களா?” என்று கேட்டாராம். அண்ணா அதை ஜோவியலாக எடுத்துக் கொண்டு, “ஆமாம்” என்று பதிலளித்தாராம்.
அதேபோல அண்ணா ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். ஷூட்டிங் முடிச்சிட்டு வந்ததால லேட்டாயிடுச்சு.
எம்.ஜி.ஆர். வந்ததும், மொத்த கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது. அண்ணா ஐந்து நிமிடம் இருக்கையில் அமர்ந்துவிட்டார். பிறகு எம்.ஜி.ஆர் இருக்கையில் அமர்ந்த பின்னர்தான் பேசத் தொடங்கினார்.
பொறாமை பிடித்த சிலர், “எம்.ஜி.ஆர் உங்களைவிட செல்வாக்குப் படைத்தவர் என்று காட்ட நினைக்கிறார்” என்று கோள் மூட்டினார்கள்.
அதற்கு அண்ணா, “எம்.ஜி.ஆர் பொன் முட்டையிடும் வாத்து, அவர் முட்டையை தரையில் போட்டாலும் சரி, என் தலையில் போட்டாலும் சரி,” என்று வேடிக்கையாகக் கூறினார்.
எம்.ஜி.ஆருக்கு அடிமட்ட மக்களிடம் உள்ள செல்வாக்கையும், அது எப்படி கட்சிக்குப் பயன்படும் என்பதையும் அண்ணா தெரிந்து பக்குவமாகப் பயன்படுத்தி வந்தார்.
எம்.ஜி.ஆருக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் தனக்கு தொல்லை தரலாம். தட்டிக் கேட்கலாம் என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார் கருணாநிதி.
இதற்காகவே தனது மகன் மு.க.முத்துவை, சினிமாவில் நடிக்க வைத்தார்.
முதல்படமே கலர் படம். அதுமட்டுமல்லாமல் மாவட்ட செயலாளர்களை வைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களைக் கலைக்க முயற்சி செய்தார். அ.தி.மு.க. துவக்கப்பட்டதுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது இது.
அப்பவும் எம்.ஜி.ஆர். கருணாநிதியை தலைவருக்குரிய மரியாதையுடன் தான் பார்த்தார்.
ஒரு முறை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியைப் பார்க்க எம்.ஜி.ஆர். சென்றார்.
அப்போது கருணாநிதி எழுந்து நின்று அவரை வரவேற்றார். பேசிவிட்டு புறப்படும்போது எம்.ஜி.ஆர்., “ஒரு சின்ன வேண்டுகோள். நான் வரும்போது நீங்க உட்கார்ந்து இருந்தால் போதும்.
நமக்குள்ளே எவ்வளவு பழக்கம் இருந்தாலும், இப்ப நீங்க முதலமைச்சர். நான் தொண்டன். நான் வரும்போது நீங்க எழுந்து நிற்கிறதை மத்தவங்க பார்த்தா தப்பா நினைப்பாங்க” என்று கூறிவிட்டு வந்தார்.
1971 தேர்தலில் சட்டசபையில் இதுவரை எந்த ஆளும் கட்சியும் பெறாத அளவிற்கு மெஜாரிட்டியை தி.மு.க பெற்றது.
கட்சி அமைப்பும் கருணாநிதி கட்டுப்பாட்டில் இருந்தது. அதோடு கொஞ்சம் கொஞ்சமாக அண்ணாவின் பெயரை மறைக்கும் முயற்சியும் நடந்தது. இதெல்லாம் எம்.ஜி.ஆருக்கு அதிருப்தியைத் தந்தது.
“எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் குறைந்துவிட்டது. அவருக்கு வயதாகிவிட்டது. இனி சினிமாவில் நடிக்க முடியாது. இதுதான் நல்ல சந்தர்ப்பம்” என்று கருதி அவரை மட்டம் தட்டும் முயற்சி நடைபெற்றது.
மதுவிலக்கை தளர்த்தியது உள்பட பல விஷயங்களில் அதிருப்தி அடைந்திருந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய அதிருப்தி, திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்திலும் வெடித்தது. அதேநாளில் சென்னை ஆயிரம் விளக்கு கூட்டத்திலும் பேசினார்.
இதைக் காரணம் காட்டி, எம்.ஜி.ஆர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் பெரிய புரட்சியையே ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, நான் தொகுதியில் சுற்றுப் பயணத்தில் இருந்தேன். தொண்டர்கள் குமுறினார்கள். சிவகாசி நகரத் திமுகவினர் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் போட்டனர்.
இதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்ட முதல்வர், என்னை சென்னைக்கு அழைத்தார்.
அங்கு மூத்த தலைவர்கள் எல்லாம், “நாங்கள் சினிமாப் பார்த்தா அரசியலுக்கு வந்தோம். கட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது” என்று சொல்லிக் கொண்டு இருந்தனர்.
நான் உண்மை நிலவரத்தை அவரிடம் சொன்னதும், பதறிவிட்டார். முரசொலிமாறன் மட்டும் எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுத்ததை விரும்பவில்லை. எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.
அதன்பின் சமாதானத்திற்கு முயற்சி நடந்தது. வருத்தம் தெரிவித்து எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவானது.
கடிதத்தில் கையெழுத்து போடும் நேரத்தில், எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் முசிறி புத்தன் திமுகவினரால் தாக்கப்பட்ட செய்தி வந்ததும், எம்.ஜி.ஆர் அழுதுவிட்டார்.
அதோடு சமாதான முயற்சியும் முறிந்துபோனது. அதன்பிறகு தான் அ.தி.மு.க. என்கிற கட்சியே உருவானது.
எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் அவ்வளவு பழக்கம் கிடையாது. தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக நன்றி சொல்வதற்காக மட்டுமே அவரைப் போய் பார்த்திருக்கிறேன்.
கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட பின் மெரினா கடற்கரையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நாளில் அவரைப் பார்க்கச் சென்றேன்.
நான் அ.தி.மு.க.வில் சேர்வதாகச் சொன்னதும் அவர் திகைத்துப் போனார்.
“அவ்வளவு தான் கருணாநிதி தொலைந்தார்” என்றார்.
“நீங்கள் அவருக்கு மிகவும் நெருக்கமாச்சே, எப்படி?” என்றார்.
“அவர் எடுத்த நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை. அவரிடம் நேரில் சொன்னேன். அவர் திருத்திக் கொள்வதாகத் தெரியவில்லை. அதனால் வந்துவிட்டேன்” என்றேன்.
அன்றைக்கு பீச் மீட்டிங்கில் நானும் பேசினேன். என்னை ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளராக்கி தலைமை நிலையச் செயலாளர் ஆக்கினார். அதன்பின் என்னை அமைச்சராக்கினார்.”