காதல் கொண்டேன் என்ற அற்புத படைப்பு வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும், பாடல் வரியாகவோ, காட்சியாகவோ, இசையாகவோ அந்தப் படைப்பு இன்னும் ஏதோ ஒரு வடிவத்தில் இன்றும் எல்லோர் மனதிலும் அசைபோட வைத்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த காதல் கொண்டேன் படம் கடந்த 2003ம் ஆண்டு ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது.
துள்ளுவதோ இளமைக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன், தனுஷ், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடலாசிரியர் நா.முத்துகுமார், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் கூட்டணி 2-வது முறையாக இணைந்த படம் காதல் கொண்டேன். இப்படம் அனைவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.
அம்மா, அப்பா இல்லாமல் தனியாக ஆதரவின்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்த இளைஞன் வெளியுலகத்தில் அடியெடுத்து வைக்கிறான்.
வெளியுலகம் மிகவும் புதுமையாக தெரியும். அதனை எவ்வாறு சமாளிப்பது என்று குழப்பம்.
கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகம் என்னவென்று பார்த்து புரித்து கொள்கிறான்.
’கெட்டுப்போன உணவை உண்டு, யாரிடமும் அதிகம் பேசாமல், பழைய சட்டை, குச்சி மாதிரி உடல் இவைதாம் அவனின் தோற்றம்.
அனைவருக்கும் கடினமான விஷயத்தை இவர் ஈஸியாக செய்கிறான். ஆனால் அனைவரும் எளிமையாக நினைக்கும் விஷயங்கள் அனைத்துமே இவன் கண்ணுக்கு சிக்கலாகவும் தெரிகிறது.
இதனால் கல்லூரியில் சக மாணவர்களுடன் சகஜமாக பழக முடியாமல் தவிக்கிறான். ஆசிரமத்தை தொடர்பு கொண்டு கதறித் துடிக்கிறான்.
ஆனால் அவர்களோ படிக்கச் சொல்லி போன் அழைப்பை துண்டித்து விடுகின்றனர்.
பின்னர் கல்லூரியில் கேலி, கிண்டலால் அசிங்கப்படுகிறான். அனைவரும் இவனை பார்த்துச் சிரிக்கின்றனர்.
இப்படியான சூழ்நிலையில் தான் இவனுக்கு ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது.
பின்னர் வெளியுலக வாழ்க்கை நட்பு வாயிலாக கொஞ்சம் கொஞ்சமாக புரிய வருகிறது. வேறோர் உலகத்தில் வாழத் தொடங்குகிறான். நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது.
ஒருதலையாக அப்பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான். தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் என்ற இந்தப் பாடல் அவனுடைய காதலை அழகாக விவரிக்கும் வகையில் இருக்கும்.
அவன் வித்தியாசமான ஒரு உலகை ரசிக்க ஆரம்பிக்கிறான். அவளது சிறிய பிரிவை கூட அவனால் தாங்க முடியவில்லை. ஆனால் அவளுக்கோ இவனை நட்பாக தான் பார்க்க முடிந்தது. அவளுக்கு வேறொருவனோடு காதல் மலர்கிறது
இதனை அறிந்தும் அவனால் காதலை விட முடியவில்லை. தொடர்ந்து ரசித்து கொண்டே இருக்கிறான். மீண்டும் தனிமை இவனை ஆட்கொள்கிறது.
காதல் வழியில் தன்னந்தனியாகப் பயணிக்கும் இவனால் மீண்டும் நட்பு வட்டத்துக்குள் வரமுடியவில்லை. இறுதியில் காதலா, நட்பா என அவனுக்குக் கேள்வி எழுகிறது.
காதலுக்கான அர்த்ததைப் புரிந்துகொண்டு உலகத்திலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான் நாயகன்.
இப்படத்தில் நா.முத்துக்குமார் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை அனைவரையும் கட்டிப்போட்டு இருக்கும்.
அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
படத்தில் இடம்பெற்ற, நெஞ்சோடு கலந்திடு உறவாலே, தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன், தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்… இப்படிப் படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட்.
இப்படி ஒரு அற்புதமான படைப்பைக் கொடுத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் இப்போதும் கூறலாம் நன்றியும் பாராட்டும்.