தங்கள் படங்கள் வசூலை வாரிக் குவித்த தருணங்களில் ‘அரசியலுக்கு வர மாட்டேன்’ என பிரகடனம் செய்த விஜயகாந்தும், கமல்ஹாசனும் சொல்லாமல் கொள்ளாமல் அரசியலுக்கு வந்து விட்டனர்.
ராகவேந்திரா மண்டபத்தில், மாநிலம் முழுவதிலும் இருந்து ரசிகர்களை அழைத்து ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், பல இழுபறிகளுக்கு பின்னர் ’அரசியலுக்கு வருகிறேன்’ என அறிவித்தார்.
அவருடன் கூட்டணி சேர சில கட்சிகளும் தயாராக இருந்தன. ரஜினி சமிக்ஞை காட்டினால், வேறு கட்சிகளில் இருந்து வரவும் முக்கியப் புள்ளிகள் ரெடியாக இருந்தார்கள்.
அண்ணாத்த சினிமா ஷுட்டிங்கின் போது, படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், ரஜினிக்கும் லேசான பாதிப்பு உண்டானது.
’அரசியலுக்கு வரப்போவதில்லை’ என ரஜினி திடீர் அறிவிப்பு வெளியிட, ரசிகர்கள் உறைந்து போனார்கள். மன்றங்களை கலைத்துவிட்டு வேறுவேறு கட்சிகளில் இணைந்தனர்.
இந்நிலையில், அரசியலுக்கு வருவதற்கான ஆயத்தங்களை நடிகர் விஜய் ஆரம்பித்துள்ளார்.
அவரது ஆலோசனையின்படி, விஜய் மன்ற கொடியைப் பயன்படுத்தி உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி ரசிகர்கள் சிலர் வெற்றிக்கனி ருசித்ததால் விஜய்க்கும் முதல்வர் கனவு வர ஆரம்பித்தது.
விஜய் ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என மாற்றி அரசியல் வருகைக்கு பிள்ளையார் சுழி போட்ட விஜய், அண்மைக் காலமாக வேகமாக சுழன்று வருகிறார்.
உலகப் பட்டினி தினத்தையொட்டி கடந்த மே மாதம் 28-ம் தேதி விஜய் ரசிகர்கள் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தனர்.
பெருந்தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில் அவர்கள் சிலைகளுக்கு, அவரது ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார்கள். இது விஜய் போட்ட உத்தரவு.
(செவ்வாய்க்கிழமை அன்று சுதந்தரப்போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்ஸி ஆனந்த், திரளான ரசிகர்கள் புடைசூழ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.)
உச்சகட்டமாக விஜயே நேரில் களம் இறங்கினார்.
அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று 234 தொகுதிகளிலும் முதலிடம் பிடித்த மாணவ – மாணவிகளை சென்னைக்கு வரவழைத்து நீலாங்கரை மண்டபத்தில் தன் கையால் ஊக்கத்தொகை வழங்கினார்.
இளம் வாக்காளர்களுடனான விஜயின் முதல் சந்திப்பு என இதனை எடுத்துக் கொள்ளலாம். பட்டும் படாமல் அவர்களுடன் அரசியல் பேசினார்.
“ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றம். உங்கள் பெற்றோரிடம் ‘வாக்களிக்க காசு வாங்க வேண்டாம்’ என சொல்லுங்கள்” என்று அறிவுறுத்தினார்.
அடுத்த கட்டமாக, அரசியல் பயணப் பாதையை செப்பனிடும் வகையில் சென்னை பனையூரில் உள்ள தனது இல்லத்தில் 234 தொகுதிகளைச் சேர்ந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை நேருக்கு நேர் சந்தித்து அரசியல் பேச முடிவு செய்தார்.
முதல் கட்டமாக சில தினங்களுக்கு முன் பனையூர் இல்லத்தில் தேனி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது ரசிகர்களிடம் முதன் முறையாக தனது அரசியல் பயணத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தினர். அமைதியாக அவர்கள் பேச்சை ரசித்துக் கேட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் விஜய் ”நான் அரசியலுக்கு வந்தால் அதில்தான் என் முழுக்கவனமும் இருக்கும். அரசியலில் நுழைந்து விட்டால் நிச்சயம் சினிமாவில் நடிக்க மாட்டேன்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
கூட்ட விவரங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட ரசிகர்கள், ’’விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அவரது அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளையும் செய்து முடித்து விட்டோம்.
தளபதி விஜய் கை காட்டியதும் பணிகளை தொடங்கி விட்டோம். ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களும் எங்களுடன் அரசியலில் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளனர்” என்றார்கள்.
விஜய் இப்போது ஒரு படத்துக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அதை தியாகம் செய்துவிட்டு விஜய் அரசியலுக்கு வர தயாராகிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
– பி.எம்.எம்.