சிப்பி என்ற உயிரின வகை, கடலின் ஆழமானப் பகுதிகளில் வசிக்கும். இது மெல்லுடலி வகையைச் சேர்ந்தது. இதன் உடலில் இருக்கிறது கண்கவரும் முத்து. இதை வெண்மணி, ஆரம், தரளம், நித்திலம் என்றும் அழைப்பர்.
அரிதாக கிடைக்கும் விலைமதிப்புள்ள நவரத்தினங்களில் ஒன்று. வங்கக் கடலில் மன்னார் வளைகுடா மற்றும் மேற்காசியாவில் பாரசீக வளைகுடா பகுதியில் அதிகம் கிடைக்கிறது.
பாரசீக வளைகுடாவில் கிடைக்கும் முத்து தான் நல்ல தரத்துடன் இருப்பதாக கருதப்படுகிறது. மேற்காசிய பகுதியில் செங்கடல், கட்ச் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி போன்ற இடங்களிலும் முத்து கிடைக்கிறது.
தமிழகத்தில், தூத்துக்குடி நகரம் முத்துக்குளிப்புக்கு பெயர் பெற்றது.
பழங்காலம் முதல் இங்கு முத்து எடுக்கும் தொழில் நடந்து வருகிறது.
முத்து பல வகைப்படும். ஆழ்கடலில் எடுக்கப்படுவது உயர் ரகம். இது, 10 நிறங்களில் காணப்படும்.
பெரும்பாலும், கிரீம் மற்றும் பிங்க் நிறம் உடையதாக இருக்கும். வெள்ளை, நீலம், சாம்பல், பிரவுன் வண்ணங்களிலும் முத்து காணப்படுகிறது. அந்தமான் தீவு பகுதியில் கருப்புநிற முத்து கிடைக்கிறது.
முத்து உருண்டையாக இருக்கும் நீர்த்துளி வடிவத்திலும் இருக்கும் சற்று ஒழுங்கற்ற உருண்டை வடிவத்திலும் காணப்படும்.
முத்துச் சிப்பியின் ஆயுள் ஐந்தரை ஆண்டுகள். முத்துக்களை, 100 முதல், 300 ஆண்டுள் வரை பாதுகாத்து வைக்கலாம். சில முத்து 500 ஆண்டுகள் வரை புதுமையுடன் இருக்கும். பின் பளபளப்பு குறைந்து மங்குவதுடன் வெடிப்பும் ஏற்படும்.
வியாபாரிகள் முத்துக்களை வாங்கி, தரம் பிரிக்கின்றனர். பின், பதப்படுத்தி மெருகூட்டி வடிவமைக்கின்றனர்.
தனியாகவோ, நகையில் சேர்த்தோ விற்கின்றனர். இந்தியாவில், ராஜஸ்தான் மாநில பெண்கள் தான், அதிக அளவில் முத்துக்கள் பதித்த மாலை அணிகின்றனர்.
தற்போது, முத்து சிப்பியில் ஒருவகை திரவத்தை செலுத்தி, செயற்கை முத்து தயாரிக்கப்படுகிறது.
இதை கண்டறிந்தவர் கிழக்காசிய நாடான ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ. இவர், 1893ல் முதன்முறையாக செயற்கை முத்து உருவாக்கினார். அமிலம், ரசாயனப் பொருட்களுக்கு அருகில் முத்துக்களை வைக்க கூடாது.
– நன்றி: தினமலர், சிறுவர்மலர்