மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிய கொடநாடு கொலை வழக்கு!

கொடநாடு – வழக்கு மறுபடியும் ஓ.பி.எஸ் அணியின் புண்ணியத்தில் நினைவூட்டப்பட்டிருக்கிறது.

ஊடகங்கள் கிளறவில்லை என்றால் பல வழக்குகள் சுலபமாக மறதியின் மடிக்குள் போய்விடும் தான்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க அந்த வழக்கைப் பொருத்தமாக நினைவுபடுத்தியது. பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூட நினைவுபடுத்தப்பட்டது.

அவ்வளவு பெரிய வழக்கின் உண்மையான சூத்திரதாரி யார்?-  என்கிற கேள்வியை அரசியல் காரணத்தோடு தற்போது எழுப்பியிருக்கிறார் ஓ.பி.எஸ்.

தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

 இந்தச் சமயத்தில் கொடநாடு குறித்த மீள் பதிவு :

*

அ.தி.மு.க.வினரை மட்டுமல்ல, தமிழர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளான ஒரு சம்பவம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரபூர்வமான ஓய்வில்லம் + அலுவலகமாகவே கருதப்பட்ட கோடநாடு எஸ்டேட்.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியில் இருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கிற பசுமை மயமான இந்த எஸ்டேட்டை 1992 ல் ஜெயலலிதாவுக்காக வாங்கப்படும்போது அதன் பரப்பளவு 900 ஏக்கர்.

அப்போது சொல்லப்பட்ட மதிப்பு 17 கோடி. பிறகு அதே எஸ்டேட் 1600 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டு அதன் மதிப்பும் ஏகத்திற்கும் கூடியது.

11 வாசல்கள், ஏகப்பட்ட அறைகளுடன் பிரமாண்டமான பங்களாவாக இருந்த அந்த இடம் ஜெ-வுக்குப் பிடித்தமான இடமாகி விட்டது.

பேட்டரி காரில் அந்த எஸ்டேட்டைச் சுற்றி வருவது அவருடைய வழக்கம். நிறையத் தொழிலாளர்கள் பணியாற்றிய அந்த எஸ்டேட் தலைமைச் செயலகத்தின் ஒரு கிளை அலுவலகமாகவே ஆகிப் போனது.

தமிழகத்தில் அதுவரை இருந்த எந்த முதலமைச்சருக்கும் இது மாதிரியான பசுமையான கிளை அலுவலகங்கள் இருந்ததில்லை.

அந்த அளவுக்குக் கவனிக்கப்பட்டு, ஏகப்பட்ட பாதுகாப்புடன் இருந்த எஸ்டேட்டில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்த கொலையும், கொள்ளையும் பலரை அதிர வைத்துவிட்டது.

மூன்று தனிக்கார்களில் பத்து பேர் வரை ஜெ-வின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் தலைமையில் பகலில் நோட்டமிட்டு இரவில் அந்த எஸ்டேட்டுக்குள் நுழைகிறது. நுழைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

அவர்களிடம் அந்த எஸ்டேட்டில் 2 ஆயிரம் கோடி பணம் இருப்பதாகவும், அங்கே நுழைந்தால் ஆளுக்காள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று ஆசை காட்டி அழைத்துச் செல்லப்பப்பட்டிருக்கிறார்கள்.

இதைப் பிறகு அவர்கள் கொடுத்த வாக்குமூலத்திலும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எஸ்டேட்டுக்குள் நுழைந்ததும் சரியாக அங்கு மின்சாரம் சொல்லி வைத்த மாதிரி துண்டிக்கப்பட்டிருக்கிறது.

கண்காணிப்புக் காமிராவைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த ஒரு இளைஞர் கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்டிருக்கிறார்.

அதனால் கண்காணிப்பு காமிராக்கள் இயங்கவில்லை.

இருட்டில் தென்பட்ட முதல் காவலாளியை அடித்துக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

அடுத்து இன்னொரு காவலாளியான ஓம் பகதூரைக் கட்டிப்போட்டுச் சித்திரவதை செய்து கட்டித் தொங்கவிட்டதில் அவர் உயிரிழந்து போனார்.

பிறகு பங்களாவின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல் ஜெ-வின் பிரமாண்டமான அறைக்குள் நுழைந்திருக்கிறது. அங்குள்ள பல அலமாரிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. எங்கும் கட்டுக் கட்டான பணத்தைக் காணோம்.

அதே சமயத்தில் அங்குள்ள ஒரு அலமாரியில் இருந்து கத்தான சில ஆவணங்களையும், சி.டி.க்களையும் எடுத்து அரண்டு கட்டைப் பைகளில் போட்டு கையோடு எடுத்து வந்திருக்கிறார் கனகராஜ்.

அவ்வளவு தான். வந்த வேலை முடிந்து இரு அணிகளாகப் பிரிந்து கிளம்பிவிட்டது அந்தக் கும்பல்.

அதில் கூடலூர் வழியாகச் சென்ற ஒரு கும்பல் செக்போஸ்ட்டில் சந்தேகத்தின் பேரில் மாட்டியிருக்கிறது.

அவரை விடுவிக்கச் சொல்லி உயர் மட்டத்தில் இருந்து உத்திரவு வந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்னொரு கும்பலுடன் கனகராஜ் சேலத்திற்குச் சென்று தான் கொண்டு சென்ற இரு பைகளை ஒப்படைத்திருக்கிறார் கனகராஜ்.

அதில் ஈடுபட்டவர்களுக்குப் பணம் பிறகு பட்டுவாடா செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது நடந்த சில நாட்களில் மர்மமான விபத்து ஒன்றில் கனகராஜ் உயிரிழக்கிறார்.

தொடர்ந்து அதில் ஈடுபட்ட சயானின் கார் விபத்தில் சிக்கி அவரது மனைவியும், மகளும் உயிரிழக்கிறார்கள்.

ஏதோ க்ரைம் திரில்லர் படம் பார்த்த மாதிரி அடுத்தடுத்து இந்தக் கொள்ளையும், அடுத்து இந்தத் தொடர் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடக்கின்றன.

இரு மாநிலக் காவல்துறையும் விசாரிக்கிறார்கள். ஊடகங்களில் பரபரப்பாகச் செய்திகள் அடிபடுகின்றன. பத்து பேர் வரை கைது செய்யப்படுகிறார்கள்.

வழக்கு விசாரணை நடக்கிறது. தமிழகத்திலும், கேரளாவிலும், ஏன்.. வட மாநிலங்களில் உள்ள ஊடகங்களும் இந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிடுகின்றன.

பரபரப்பான பல செய்திகளைத் தரும் தெகல்ஹா ஊடகம் கோடநாடு கொலை வழக்கு பற்றிய விரிவான காணொளித் தொகுப்பை வெளியிட்டு முக்கிய அரசியல் பிரமுகர் மீது குற்றம் சாட்டியது.

ஆனால் வழக்கு விசாரணை மந்த கதியில் தான் நடந்தது.

இந்தச் சமயத்தில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் போது பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின் கோடநாடு சம்பவத்தில் பின்னணியில் இருக்கிற உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வழக்கு விசாரணை சூடு பிடித்து கோடநாடு கொலை, கொள்ளைக்கு மூலமாக இருந்த செல்வாக்கான புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் தி.மு.க ஆட்சி மாறிய பிறகும், விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருந்தபோதும், இதன் பின்னணியில் இருந்ததாகச் சந்தேகத்துடன் குற்றம் சாட்டப்படும் புள்ளிகளை நோக்கி இதுவரை விசாரணை நகரவில்லை.

கிரிமினல் வழக்காக இருந்தும் கூட, உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆனால், இன்றைக்கு வெளிப்படையாகப் பல ஊடகங்கள் தி.மு.க காட்டிவரும் கால தாமதம் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.

குட்கா ஊழல், கூவத்தூர் வழக்கு, பல முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை உள்ளிட்ட பல வழக்குகளில் நடந்து வரும் கால தாமதம் பற்றிய கேள்விகளை விட, கோடநாடு வழக்கில் நடக்கும் தாமதம் பல கேள்விகளைப் பொதுவெளியில் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கோடநாடு வழக்கில் – என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன? அந்த ஆவணங்கள் யாருடையவை?

எவ்வளவு மதிப்புள்ளவை? அதைக் கைப்பற்றி முக்கியக்குற்றவாளியைன கனகராஜ் யாரிடம் ஒப்படைத்தார்?

ஒப்படைத்த சில நாட்களிலேயே அவர் எப்படி மர்மமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்?

தொடர்ந்து கேரளாவிலும் நடந்த விபத்திலும் இரண்டு உயிர்கள் பலியாக என்ன காரணம்?

– ஏன் வழக்கில் தாமதம் நீடித்துக் கொண்டிருக்கிறது?

கோடநாடு எஸ்டேட் பற்றி நன்கு தெரிந்த சசிகலாவிடம் நூறு கேள்விகளுக்கு மேல் கேட்டுத் தொடர் விசாரணையை மேற்கொண்ட பிறகும் இன்னும் தாமதம் ஏன்?

– இப்படிப் பல கேள்விகள் பொதுவெளியில்.

எதிர்க்கட்சியான அ.தி.மு.க தரப்பிலான இந்த வழக்கில் தொடர்ந்து கால தாமதம் காட்டினால், அது தி.மு.க அரசு குறித்தும் பலர் கேள்வி எழுப்பக் காரணமாகி விடும். இதை தி.மு.க.வும் உணர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

“இந்த வழக்கின் உண்மையான சூத்ரதாரி’’ யார்? –

இதை ஓ.பி.எஸ் மட்டுமல்ல, அ.தி.மு.க தொண்டர்களும் எழுப்புகிற கேள்வி.

யார் எந்தக் கேள்வியை எழுப்பினாலும்,கொடநாடு வழக்கில் முடிவு எடுக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறது தி.மு.க.

நடவடிக்கை எடுப்பதால் வரும் விமர்சனங்களை விட, நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் காட்டினால் தி.மு.க.வுக்கு வரும் எதிர் விமர்சனங்களே அதிகமாக இருக்கும்.

நடவடிக்கை எப்போது என்பதில் தான் அ.தி.மு.க.வின் அடுத்தகட்ட நகர்வும் இருக்கும்.

– யூகி

You might also like