வெளிறிய மஞ்சள் வர்ணத்தில் மதில் சுவர்கள்; உள்ளே தொடர்ச்சியான மரங்கள்; மதில் சுவரில் சற்றுத் தூரத்திலிருந்து பார்த்தால் தெரிகிற ‘சென்ட்ரல் ஸ்டுடியோஸ்’ என்கிற எழுத்துக்களுடன் ஆரவாரமற்றுக் கிடக்கும் இந்த இடத்திலிருந்து எவ்வளவு தமிழ்த் திரைப்படங்கள் தயாராகி வெளியுலகைச் சலனப்படுத்தியிருக்கின்றன?
கோவையின் நகர நெரிசலில் இருந்து விலகித் தனித்திருக்கிறது, ஒரு காலத்தில் ‘ஸ்டுடியோ’வாக இருந்த பகுதி.
அந்தக் காலத்தின் பல படப்பிடிப்புத் தளங்கள். லேப் வசதியுடன் பல ஏக்கர் பரப்பளவில் சுறுசுறுப்பான இயக்கத்துடனிருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவில் இப்போது சில தடயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்டுடியோவின் வரலாற்றைக்கூட அவ்வளவு சுலபமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை.
‘தூகாராம்’ என்கிற படம்தான் இங்கு தயாராகி நன்றாக ஓடியிருக்கிறது.
தமிழ், தெலுங்கு இருமொழிகளில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கர்நாடக வித்வானான முசிறி சுப்பிரமணிய ஐயர்.
சே. சாரங்கபாணி உள்ளிட்டவர்கள் நடித்த இப்படத்தைத் தொடர்ந்து 1939ல் இங்குத் தயாரான படம் ‘பிரகலாதா’.
டி.ஆர். மகாலிங்கம், என்.எஸ். கிருஷ்ணன் எல்லாம் நடித்த இந்தப் படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார் எம்.ஜி. ராம்சந்தர் ஆக அப்போதிருந்த எம்.ஜி.ஆர்.
அதே வருடத்தில் இங்கு தயாரான ‘ரம்பையின் காதல்’ அந்தக் கால ‘ஹிட்’. 25 வாரங்கள் வரை ஓடிய இந்தப் படத்தில் கே. சாரங்கபாணி, காளி என். ரத்தினம், என்.எஸ். கிருஷ்ணன் உட்படப் பலர் நடித்திருந்தார்கள்.
ஸ்டுடியோவிலேயே சகல வசதிகளும் இருந்தன. பலர் மாதச் சம்பத்திற்கு இங்கேயே தங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
‘மீரா’வுக்கு இசையமைத்த எஸ்.வி. வெங்கட்ராமன், டி.ஆர். பாப்பா தவிர பாபநாசம் சிவன், உடுமலை நாராயணசாமி இவர்கள் எல்லாம் மாதச் சம்பளத்தில் பணியாற்றியவர்களில் சிலர்.
அதன் பிறகு வந்து இணைந்தவர்கள் கருணாநிதி, நம்பியார், டி.எம். சௌந்திரராஜன் உள்ளிட்டவர்கள்.
1940ல் எம்.கே. ராதா, டி.ஆர். மகாலிங்கம் நடித்த ‘சதிமுரளி’ படம் சென்ட்ரல் ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட பிறகு, அதைக் குத்தகைக்கு எடுத்தனர் அப்போதைய பிரபல தயாரிப்புக் கம்பெனியான ‘ஜூபிடர் பிக்சர்ஸ்’.
1935லேயே ‘மேனகா’ என்கிற வெற்றிப்படத்தைத் தயாரித்த ஜூபிடரின் இரட்டைத் தயாரிப்பாளர்கள் எம். சோமசுந்தரமும், எஸ்.கே. மொகைதீனும் சென்ட்ரல் ஸ்டுடியோவில் தயாரான பல படங்களில் நடித்துப் பாடி பிரபலமாக இருந்த யூ.ஆர்.ஜீவரத்தினம் முதுமையில் பத்திரிகைப் பேட்டியொன்றில் சொன்னார்.
“ஜூபிடர் சோமுவும், மொகைதீனும் தங்கமான முதலாளிகள். ஆர்ட்டிஸ்டுகளுக்குக் கைநிறையச் சம்பளம் கொடுப்பார்கள். சகல வசதிகளும் செய்து கொடுப்பார்கள்.”
1942ல் இங்கு தயாராகி, பி.யு. சின்னப்பாவும், கண்ணாம்பாவும் நடித்த ‘கண்ணகி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பாடல்கள் பிரபலமாயின.
1944ல் வெளிவந்து 110 வாரங்கள் வரை ஓடிய ‘ஹரிதாஸ்’ படத்தின் பிலிம் இங்குள்ள லேப்பில்தான் கழுவப்பட்டுத் தயாராகியிருக்கிறது.
1945ல் தயாரான ‘என் மகன்’, அதைத் தொடர்ந்து 1946ல் ‘வால்மீகி’யும் தயாராகின. ‘வால்மீகி’யில் ஹொன்னப்ப பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி ஜோடியுடன் காளி. என். ரத்னம். சி.பி.ராஜகாந்தம் ஜோடியும் நடித்திருந்தது. அதற்கு இசையமைத்தவர் எஸ்.வி. வெங்கட்ராமன்.
இதையடுத்து எடுக்கப்பட்ட ‘ஸ்ரீமுருகன்’ படத்தில் ஹொன்னப்ப பாகவதர் முருகனாக நடிக்க, சிவனாக நடித்திருந்தவர் எம்.ஜி.ஆர்.
1947ல் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜகுமாரி’ படம் இங்கு தயாரானபோது அதன் வசன கர்த்தாவான ஏ.எஸ்.ஏ. சாமியிடம் உதவியாளராக இருந்தார் மு. கருணாநிதி. அப்போது அவர் கோவையில் வாடகை வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்.
1948ல் தயாரான ‘அபிமன்யூ’வில் இருவரும் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர்., சக்கரபாணி, யூ.ஆர். ஜீவரத்தினம் நடித்த இந்தப் படத்திற்குப் பிறகு ஹிட்டான இன்னொரு படம் வேலைக்காரி!
அண்ணாதுரை திரைக்கதை, வசனம் எழுதிய இந்தப் படத்தில் நடித்தவர்கள் கே.ஆர். ராமசாமியும். வி.என். ஜானகியும்.
அதன் பிறகு, ராம்னாத்தின் இயக்கத்தில் வெளிவந்த ‘மர்மயோகி’ இருமொழிப் படமாக வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது.
எம்.ஜி.ஆர்., அஞ்சலிதேவி நடித்த இந்தப் படம்தான் தமிழில் வெளியான முதல் ‘ஏ’ முத்திரை குத்தப்பட்ட படம்.
எம்.எஸ். விஸ்வநாதன் இங்கு ‘ஆபிஸ் பாயாக’ இருந்து இசையமைப்புக்கு உதவியாளராக மாறியதும் இங்குதான். டி.எம். சௌந்திரராஜனுக்கு அறிமுகம் கிடைத்ததும் இங்குதான்.
1950-ஐ ஒட்டி ‘ஸ்டுடியோ’ குத்தகை முடிந்து சென்னைக்குக் கிளம்பியது ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம். அதோடு நிறைவடைந்திருக்கிறது சென்ட்ரல் ஸ்டுடியோவின் திரைப்படச் செயல்பாடு.
இந்த ஸ்டுடியோவுக்கு அருகில் இருந்த பட்சி ராஜா ஸ்டுடியோவும் தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’யையும், ‘பவளக் கொடி’யையும் தயாரித்து, 1954ல் ஆறு மொழிகளில் தயாரான ‘மலைக்கள்ளன்’ படத்தைத் தயாரித்துத் தேசிய விருது பெற்றிருக்கிறது. இப்போது இந்த இடம் திருமண மண்டபமாகியிருக்கிறது.
சென்ட்ரல் ஸ்டுடியோவின் விஸ்தீரணத்தை விளக்கும் வரைபடம் மட்டும் காலத்தின் இடிபாடுகளை மீறி கட்டடத்தில் மிஞ்சியிருக்கிறது.
மெருகு குலைந்த திரைப்படச் சுருளைப் போலவே உருக்குலைந்து நிற்கிறது ஒரு காலத்திய சென்ட்ரல் ஸ்டுடியோ.
திரைப்படம் தமிழில் உருவாகித் தவழ்ந்து நடக்க ஆரம்பித்தபோது சேலம், கோவை, மதுரை, சென்னை என்று பல இடங்களில் தடங்கள் பதித்தாலும் சென்னை தவிர மற்ற நகரங்களில் எஞ்சியவை இம்மாதிரியான தடங்கள்தான்.
****
-அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மணா’ எழுதிய தமிழகத் தடங்கள் நூலில் இருந்து ஒரு கட்டுரை.