பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன.
அவ்வாறு முகிழ்த்த கட்சிகளில் ஒன்று – புதிய தமிழகம். இதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது இளம் பிராயத்திலேயே போராட்டக்குணம் கொண்டவராக விளங்கினார்.
டாக்டர் நிறுவிய கட்சி தென் மாவட்டங்களில் வலிமை பெற்று திகழும் நிலையில் இவர் கொங்கு மண்டலத்தை பிறப்பிடமாக கொண்டவர் என்பது பலருக்கு வியப்பாக இருக்கும்.
ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் உள்ள மசக்கவுண்டர் புதூர், இவரது சொந்த ஊர்.
தந்தை கருப்புசாமி, வேளாண் தொழில் செய்து வந்தார். தாயார் தாமரையம்மாள் இல்லத்தரசி.
பூளவாடியில் பள்ளிப்படிப்பை முடித்தவர், கோவை அரசு கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு எனப்படும் பி.யூ.சி. படித்தார்.
இதனைத் தொடர்ந்து கோவை வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரியில் வேளாண் படிப்புக்கு சீட் கிடைத்தது. 45 நாட்கள் அங்கு பயின்ற நிலையில் நெல்லை மருத்துக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் தேடி வந்தது.
இரண்டு ஆண்டுகள் நெல்லையில் படித்தவர், பின்னர் இடமாறுதல் பெற்று, மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து டாக்டர் ஆனார். இதன் தொடர்ச்சியாக மருத்துவ முதுகலைப் பட்டமும் படித்து (எம்.டி) முடித்தார்.
12 வயதில் அவரது பொது வாழ்க்கை ஆரம்பமானது. அப்போது கோவை பகுதியில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு சம்பளமாக பணம் கொடுப்பதில்லை.
அறுவடை செய்யும் தானியத்தை (நெல், உளுந்து, சோளம் போன்றவை) கூலியாக வழங்கினர், நிலக்கிழார்கள்.
கூலியாக பணம் வழங்க வேண்டும் என இவரது அண்ணன் ராஜு நடத்திய போராட்டங்களில் கிருஷ்ணசாமியும் பங்கேற்றுள்ளார்.
அரசியல் வாழ்க்கை
டாக்டர் கிருஷ்ணசாமியின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டது, 1995 ஆம் கொடியன்குளத்தில் நடந்த கலவரம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அந்த ஊரில் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வந்த நிலையில் பெரும் கலவரம் மூண்டது. இதில் அந்த கிராமமே சூறையாடப்பட்டது.
இதனால் துடித்துப்போன கிருஷ்ணசாமி கோவையில் இருந்து கொடியன்குளம் விரைந்தார். அந்த பகுதி மக்களுக்கு நீதி கிடைக்க வாதாடினார். தலித் மக்களால் ஈர்க்கப்பட்ட அவர், புதிய தமிழகம் எனும் கட்சியை உருவாக்கினார்.
முதல் தேர்தலிலேயே வெற்றி
1996 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடந்தபோது கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனித்து களமிறங்கினார். கொடியன்குளம் கிராமம் இந்த தொகுதிக்குள்தான் வரும்.
96 தேர்தல் தமிழக அரசியலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும்.
ஏனென்றால், தி.மு.க.வை பிளந்து வைகோ நிறுவிய ம.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தல் இது.
அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் எனும் புதிய கட்சியை தோற்றுவித்து தி.மு.க.வுடன் சேர்ந்து, சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட ஆண்டும் அதுவே.
பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா தோற்ற ஆண்டும், ரஜினிகாந்த் அரசியல் வாய்ஸ் கொடுத்ததும் இந்த ஆண்டுதான்.
அந்தத் தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக மற்றும் மதிமுக ஆகிய மூன்று அணிகள் பிரதானமாக களத்தில் இருந்தாலும், ஒட்டப்பிடாரத்தில் மட்டும் நான்கு முனை போட்டி நிலவியது.
தேர்தல் முடிவுகள் அதனை வெளிச்சம் போட்டு காட்டியது.
தனித்து போட்டியிட்ட கிருஷ்ணசாமி சுமார் 24 ஆயிரம் வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான அதிமுக 23 ஆயிரம் ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது.
அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய திமுக, ஒட்டப்பிடாரத்தில் 22 ஆயிரம் வாக்குகள் வாங்கி மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. மதிமுக நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
அதன்பின், தேர்தல் அரசியலில் தனித்து நிற்பது தற்கொலைக்கு சமம் என உணர்ந்த கிருஷ்ணசாமி, திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தே தேர்தல்களை சந்தித்து வருகிறார்.
திமுக கூட்டணியில் இருந்தபோது கிருஷ்ணசாமிக்கு தோல்விகளே கிட்டின.
2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டிலும் வாகை சூடியது அந்த கட்சி. ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி வென்றார்.
தென்காசியே, இலக்கு
சட்டமன்றத்தில் நுழைந்தாயிற்று. அடுத்து மக்களவையே இலக்கு என கிருஷ்ணசாமி தீர்மானமாக முடிவெடுத்து, தென்காசி தொகுதியை கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றிச் சுற்றி வருகிறார்.
இரு கழகங்களுடன் கூட்டணி வைத்தும் அது நிறைவேறாமல் கனவாகவே உள்ளது.
அந்தத் தொகுதியில் அவர் இதுவரை ஆறுமுறை போட்டியிட்டு ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை.
கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தென்காசியில் நின்றார். ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் திமுகவின் தனுஷ் கே.குமாரிடம் தோற்றுப்போனார்.
இந்த முறையும் தென்காசியில் அவர் நிற்பது உறுதி.
எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது தேர்தல் நெருக்கத்தில் தெரிய வரும்.
ஒரு சுவாரஸ்ய தகவலுடன் கட்டுரையை நிறைவு செய்யலாம்.
கிருஷ்ணசாமி 6 முறை தென்காசியில் தோல்வி அடைந்தார்.
இதே தொகுதியில் அருணாசலம் 6 முறை வெற்றி பெற்றுள்ளார். மத்திய அமைச்சராகவும் இருந்த அருணாசலம் 5 தடவை காங்கிரஸ் சார்பிலும் 96-ல் தமாகா சார்பிலும் போட்டியிட்டு வென்றுள்ளார்.
– பி.எம்.எம்.