தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், தன் அரசுப் பணியிலிருந்து விடைபெற்றுள்ளார். இதுபற்றி சமூகவலைதளங்களில் பலரும் தம் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
புதிய தலைமுறை கல்வி இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய பத்திரிகையாளர் மோ. கணேசன் எழுதியுள்ள பதிவு இது.
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, இன்றைய தினம் வரை அரசு இயந்திரத்தின் அச்சாணியாக இருந்து, அயராது பணியாற்றி இன்றைய தினம் (ஜூன் – 30, 2023) ஓய்வு பெறுகிறார் வெ.இறையன்பு ஐஏஎஸ் எனும் மாண்புமிகு தலைமைச் செயலாளர்.
மனிதர் இந்த பொறுப்புக்கு வருவதற்கு முன்பு பல்வேறு துறைகளில் தனது தடத்தைப் பதித்தவர்.
இந்திய ஆட்சிப்பணித்துறை அதிகாரி என்றாலே தொடர் சந்திப்புகள், கோப்புகளை பார்த்தல், மக்களை சந்தித்தல், பிரச்சனைகளை கையாளுதல் என கடிகாரத்தைவிட வேகமாக ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
ஓடிக்கொண்டே இருப்பார்கள் என்று நான் இங்கு குறிப்பிடுவது மக்கள் நலனுக்காக பாடுபடும் நேர்மையான அதிகாரிகளை…
புதிய தலைமுறை இதழில் நான் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, சில சமயங்களில் அலுவலகத்திற்கு வருவார். அப்போது ஆசிரியராக இருந்த மாலன் அவர்களை சந்தித்துவிட்டு செல்வார்.
புதிய தலைமுறை இதழில் அவர் எழுதிய ’போர்த்தொழில் பழகு’ எனும் தொடரை எழுதினார். அது அந்த இதழின் மெகா ஹிட் தொடர் என்றால் அது மிகையல்ல. அதை புத்தகமாக அச்சிட்டும் விற்பனைக்கு தந்தது புதிய தலைமுறை.
புதிய தலைமுறை பதிப்பக வெளியீட்டில் 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
அதில் நாங்கள் அங்கு இருந்தவரை, போர்த்தொழில் பழகு புத்தகம்தான் டாப் செல்லர் புத்தகம்.
அவ்வளவு வரலாற்றுச் செய்திகள். அத்தனை தகவல்கள், உலகலாவிய போர்ச் செய்திகள் என அதில் அவர் கலந்து கொடுத்த விதம் புதிய தலைமுறை வாசகர்களுக்கு உற்சாக விருந்தாக மாறிப்போனது. அதை படித்தவர்களுக்கு தெரியும். நானும் அதை படித்து அசந்து போயிருக்கிறேன்.
ஏதேனும் மாணவர்களுக்கு எழுத வேண்டும் என்று சொன்னால் போதும், அத்தனை வேலை பளுக்களுக்கு இடையிலும் மனிதர் எழுதிக் குவித்துக்கொண்டே இருப்பார்.
புதிய தலைமுறைக்கு என்று மட்டுமல்ல, அப்போது அவர் தினத்தந்தி உள்ளிட்டவற்றில் எழுதிக்கொண்டே இருந்தார். பொதிகை தொலைக்காட்சியில் உரையாற்றுவார். இத்தனையும் அவரது அரசுப்பணிகளுக்கு இடையே செய்து கொண்டிருந்த செயல் புயல் அவர்.
ஒருமுறை அவரை எங்கள் ஆசிரியர் குழு அறைக்குள் அழைத்து வந்த எங்களின் அப்போதைய ஆசிரியர் பெ.கருணாகரன், எங்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினார்.
அப்போது அவரிடம் நான் கேட்டேன். நிறையநேரம் உங்களுக்கு அரசுப்பணியை செய்யவே நேரம் சரியாக இருக்குமே. ஆனால் எப்படி சார் சளைக்காமல் எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.
“எல்லாவற்றிற்கும் எனது நேர மேலாண்மைதான் காரணம். வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் என தினமும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வேன்.
5 மணிக்கு எழுவதை விடுத்து, ஒரு மணி நேரம் முன்னதாகவே எழுந்துவிடுவேன்… அவ்வளவுதான்” என்று சிரித்தபடியே சொன்னார்.
அன்று சொன்னதை உள்வாங்கிக் கொண்டேன்.
நானும் பலவற்றை செய்வதற்கு அவரைப்போலவே நேர மேலாண்மையை கடைபிடிப்பதுதான். அவரைப்போல, உறக்கத்திடமிருந்து ஒரு மணி நேரத்தை கடன் வாங்கிக் கொள்வேன். இவரின் எழுத்து அசாத்தியம்.
ஒருமுறை குருநானக் கல்லூரியில் புதிய தலைமுறை மன்றம் தொடக்கவிழாவில், இறையன்பு அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
‘புதியன விரும்பு’ என்ற தலைப்பில் அரை மணி நேரம் சொற்பொழிவாற்றி இருந்தார். அந்த சொற்பொழிவின் ஒலிக்கோப்பு மட்டும் எனக்கு அனுப்பியிருந்தார் கருணாகரன் சார்.
இந்த சொற்பொழிவை அப்படியே கட்டுரையாக மாற்றிக்கொடுங்கள் என்றார். கரும்பு தின்னக்கூலியா… அதை செய்து முடித்தேன். அவரது உரை அப்படியே புதியதலைமுறை கல்வி வார இதழில் நான்கு வார குறுந்தொடராக வெளியானது.
இதில் அவர் கொடுத்திருந்த தகவல்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். கிளெய்பர் விதி, லா ஆஃப் டிஃப்யூஷன் ஆஃப் இன்னோவேஷன், சார்லஸ் டார்வின், ஆக்சிஜன் கண்டுபிடிப்பு என அடுக்கிக்கொண்டே சென்று இவை எல்லாம் தனித்தனியாக விளைந்தது அல்ல. கூட்டு முயற்சியால் உருவானது.
உலகின் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் கூட்டு முயற்சியால் உருவானது. நீங்கள் இந்த மன்றத்திலே கூடி பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும்” என்று அதில் சொல்லியிருப்பார்.
அந்த தொடர் புதிய தலைமுறை கல்வி இதழில் பெரும் வரவேற்பை பெற்றது. தேர்வு சமயத்தில் அதை ஒரு குறும்புத்தமாக அச்சிட்டு வெளியிட்டும் இருக்கிறது புதிய தலைமுறை.
(அந்த தொடரின் உண்மையான ஆசிரியர் யார் எனில் வெ.இறையன்பு அவர்கள்தான். அவர் பெயரை அந்த தொடரில் போட்டது மட்டுமின்றி, கட்டுரையின் முடிவில் தொகுப்பு: மோ.கணேசன் என்று எனக்கும் மதிப்பினைக் கொடுத்து அழகு பார்த்தார் எங்களின் ஆசிரியராக இருந்த பெ.கருணாகரன்).
இவற்றை எல்லாம் நான் கேட்டு, படித்தபோது என் மூளைக்குள் தெறித்த கேள்வி ஒன்றே ஒன்று, வெட்டிய மின்னல் ஒன்றே ஒன்றுதான்.
பேச்சு என்பது ஒரு கலை. மேடையில் ஒன்றை பேசுவதற்கு எத்தனை மெனக்கெடல்கள் தேவை, தயாரிப்புகள் தேவை என்பதை பேச்சாளனாக இருக்கும் நான் அதை நன்கறிவேன்.
அவர் எந்த அளவுக்கு படித்திருந்தால் இவர் இப்படி பேசுவார்? எப்படி அவரால் இவ்வளவு விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது.
எழுத்துப் பிசாசு என்று சொல்லும் அளவுக்கு எழுதித் தள்ளுவார். அத்தனையும் மாணவர்கள், இளைஞர்கள் முன்னேற்றத்திற்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும்தான் அவரது எழுத்துக்கள் தாள்களை கீறியிருக்கின்றன.
தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு அவர் சென்றபின்பும்கூட பத்திரிகையாளர்கள் கூறும் பிரச்சனைகளுக்கு, அது உண்மையான, மக்கள் பிரச்சனையாக இருந்தால் உடனே தீர்த்து வைத்தவர்.
2021 மே மாதம். கொரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீள முயற்சித்துக் கொண்டிருந்த காலம். வேலை பறிபோன பலரும் ரேஷன் அரிசியை உண்டுதான் பசிபோக்கிக் கொண்டிருந்தனர்.
எனது குடும்பம் உட்பட இதுதான் நிலை. ரேஷன் அரிசி என்பது இலவசமாக போடப்படும் பிச்சை அல்ல. மக்களின் வரிப்பணம். அது நாம் கொடுத்த வரிப்பணத்தில் திருப்பி செலுத்தப்படும் திட்டம்.
அந்த மாதத்தில் ரேஷன் அரிசி வாங்கியபோது வண்டுகளும், புழுக்களுமாக இருந்தது. ஏன் இப்படி கேவலமான அரிசியை மக்களுக்கு தருகிறீர்கள் கேட்டதற்கு, அங்கிருந்து வரும்போதே அப்போதுதான் வருகிறது. நாங்க என்ன பண்றது. வேணும்னா வாங்குங்க… இல்லன்னா போங்க… என்றனர்.
அந்த அரிசியை வீடியோவாக எடுத்து புகார் கொடுத்தேன். அடுத்த 3 மணி நேரத்தில் அந்த கடையில் உள்ள அரிசிகள் மாற்றப்பட்டது. அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான அரிசி வழங்கப்பட வேண்டும்.
தரம் குறைந்த அரிசி போடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவே வழங்கினார் இறையன்பு. அன்று முதல் இன்று வரை தமிழ்நாடு முழுக்க ரேசன் அரிசியில் தரம் கடைபிடிக்க காரணமாக இருந்தார்.
இது அவர் செய்த மக்கள் பணியில் சிறு துளிதான். இன்னும் நிறைய நிறைய செய்திருக்கிறார். அரசின் பெயர் கெடாத அளவிற்கு, தன் பெயரில் சிறு களங்கமும் ஏற்படாத அளவிற்கு பணியை நிறைவாக செய்திருக்கிறார் வெ.இறையன்பு.
இன்றுடன் தலைமைச் செயலாளர் என்ற பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இப்படி ஒரு தலைமை செயலாளரை அந்த நாற்காலி கண்டதில்லை என்று சொல்லும் அளவிற்கு அவரது பணி இருந்தது.
இந்த நிழற்படம் குறித்து எதுவும் சொல்லவில்லை என்று யோசிக்காதீர்கள். இந்த படம் வெ.இறையன்பு அவர்களுக்கு மிகவும் பிடித்த படம். அவருக்கு அவரே சவாலான மனிதர் என்பது போல இந்த நிழற்படத்தை வடிவமைக்க சொன்னார் எங்களின் ஆசிரியர் பெ.கருணாகரன்.
அந்த கிராபிக்ஸ் வேலைகளை எங்களின் தலைமை வடிவமைப்பாளர் ரவிசந்திரஹாசன் செய்துமுடித்தார்.
அதை அழகாக பிரேம் செய்து, டிஎம்எஸ்ஸில் இருந்து அவரது அலுவலகத்திற்கே நேரில் சென்று அந்த படத்தை அவரிடம் கொடுத்து மகிழ்ந்தோம்.
இதில் என் பங்கு ஏதும் இல்லை என்றாலும், நான், சுந்தரபுத்தன், ரவிசந்திரஹாசன், பெ.கருணாகரன் சார் என ஆசிரியர் குழுவாக நாங்கள் ஒன்றாக சென்று அவரைச் சந்தித்த நிகழ்வு மனதில் நிழலாடுகிறது.
நன்றி: சுந்தரபுத்தன்