தமிழ் சினிமாவின் எவர் கிரீன் சாக்லேட் பாய் அரவிந்த்சாமி!

90களின் காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு அரவிந்த்சாமி போன்று மாப்பிள்ளை வேண்டும் என உற்சாகத்தோடு கூறுவார்கள்.

பல பேரை கிண்டலடித்து கூறுவதும் அரவிந்த்சாமியின் கலரை வைத்து தான். இவரு பெரிய அரவிந்தசாமி கலரு என்று பெரும்பாலானோர் கூறி கேள்விப்பட்டிருப்போம்.

ஏன் இந்தியன் படத்தில் கூட செந்திலின் மகனுக்கு அரவிந்த்சாமி என பெயர் வைத்திருப்பார். அதை கவுண்டமணி அடுப்புல வெந்தசாமி என பெயர் வைத்திருக்க வேண்டியது தானே என நக்கலாக சொல்லி சிரிக்க வைத்திருப்பார். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு ஆணழகனாகவே வலம் வந்தவர் அரவிந்த்சாமி.

ஆரம்ப காலத்தில் இவருடைய விருப்பம் ஒரு டாக்டராக வேண்டும் என்பதே. தன்னுடைய பாக்கெட் மணிக்காக மாடலிங் துறையில் நுழைந்தார். அப்போது தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு காபி விளம்பரத்தில் அரவிந்த் சாமியை பார்த்து மணிரத்தினம் முதன் முதலில் கொடுத்த வாய்ப்புதான் தளபதி.

அதனை அடுத்து ‘ரோஜா’ படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு வந்த ‘பாம்பே’ படம் அரவிந்த் சாமியை எங்கேயோ கொண்டு போய் சேர்த்தது.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் தன்னுடைய வருகையை உறுதி செய்தார் அரவிந்த்சாமி.

ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்த ‘தளபதி’ படத்தின் மூலம் திரை உலகில் கால் வைத்த அரவிந்த் சாமி மணி ரத்தினத்தின் படங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் எப்போதும் ஒரு நிதானமும், குறும்பும் இழையோடி இருந்தது. அழுத்தமான வசனங்கள் இருந்த போதும் மிக ஆர்ப்பாட்டமாக இல்லாமல் அமைதியாகவே வெளிப்படுத்துவார். அந்த வகையில் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தனர்.

இப்படி பல படங்களை கொடுத்து வந்த அரவிந்தசாமி திடீரென சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

காரணம் 2005ம் ஆண்டு நடந்த விபத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளானார் அரவிந்த் சாமி. இதையடுத்து உடல் கடுமையாக பாதிக்கப்பட்டது. முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சனை குணமாக 6 வருடங்கள் எடுத்துக்கொண்டது.

அதேபோல் முதல் மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் சுமார் 7 ஆண்டுகள் பிரிந்திருந்து வாழ்ந்தார் அரவிந்த் சாமி.

இதற்கிடையில் 2010 ம் ஆண்டு விவாகரத்து பெற்ற நிலையில் ஆதிரா என்ற மகளும், ருத்ரா என்ற மகனும் உள்ளனர். இதைத்தொடர்ந்து 2012ம் ஆண்டு அபர்ணா முகர்ஜி என்பரை மணந்து கொண்டார்.

இப்படி தன் வாழ்வில் ஏற்றம் இறக்கம் என எல்லாவற்றையும் பார்த்த போதும் ரசிகர்கள் அரவிந்த் சாமியை எப்போதும் கொண்டாடி வந்தனர்.

அவர் திரை உலகில் இருந்து விலகி இருந்த நாட்களிலும் அவர் நடித்த படங்கள் அல்லது பாட்டுகளை பார்க்கும் போது தெல்லாம் நல்ல நடிகர் என்று வாய்விட்டு பாராட்டுமளவிற்கு பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டார்.

‘கடல்’ படத்தின் மூலம் 2013ம் ஆண்டு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு அரவிந்த் சாமிக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் அதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் அவருக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதில் சித்தார்த் அபிமன்யூ என்ற பெயரில் வில்லனாக வந்து மிரட்டி இருந்தார்.

இதையடுத்து தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகர், வில்லன் என நடித்து வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

– நன்றி முகநூல் பதிவு

You might also like