– ஓவியர் ஜீவா
தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்த்த அந்தக் கால நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் கோவையைச் சிறந்த பிரபல ஓவியரும் எழுத்தாளருமான ஜீவானந்தன்.
அந்தப் பதிவை படித்துப் பாருங்கள்…
என் வாழ்க்கை முழுவதும் திரைப்பட வெளியீடுகள், திரையரங்குகள் போன்ற விஷயங்களுடனேயே குழந்தைப் பருவம் முதல் வாழ்ந்து வந்திருக்கிறேன். எங்கள் தொழில், வாழ்க்கை எல்லாமே இவற்றை சுற்றி இருந்தன. எல்லாம் ஒரு காலம் வரைக்கும்தான்.
திரைப்படங்கள் மட்டுமே பொழுதுபோக்கு என்றிருந்த காலத்தில் டப்பா படம் கூட ரெண்டு வாரம் ஓடும். நல்ல படங்கள் 100 நாட்கள் ஓடுவது சாதாரணம்.
திரையரங்குகள் நிறைந்து கலகலப்பாகவும் இருந்தன. நான் பெரும்பாலும் இரவுக் காட்சிகளுக்கு மட்டுமே செல்வேன். அதற்கென்றே ஒரு ஆடியன்ஸ் இருப்பார்கள்.
பெரும்பாலும் ஓட்டல்கள், கடைகளில் பணி புரிபவர்கள். எல்லா அரங்குகளிலும் மாறி மாறி ஒவ்வொரு நாளும் இருப்பார்கள்.
இப்படி சும்மா பார்த்த பழக்கத்திலேயே எனக்கு தெரிந்தவர்கள் ஆனவர்கள் நிறைய. அவர்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதிதான் டிக்கெட் விலை இருக்கும். சமீபத்தில் அபூர்வமாக ஒரு இரவுக்காட்சிக்கு சென்றேன்.
மொத்த அரங்கத்தில் 10 பேர் கூட இல்லை. மயான அமைதியுடன் இடைவேளை திகழ்ந்தது. அந்த இரவுக்காட்சி ஆடியன்ஸ் எங்கே போனார்கள்!!
வருமானத்தில் கால் பங்கை டிக்கெட்டுக்கு தர யாரும் தயாராக இல்லை என்று மட்டும் புரிந்தது.
இப்போது நகரத்தில் டிக்கெட் 200 தொடங்கி 500 வரை என்று விற்கிறார்கள்.
நகரத்துக்கு அந்தப் பக்கம் சோமனூர், சாவடி, துடியலூர், ஆலாந்துரை போன்ற இடங்களில் நல்ல திரையரங்குகளில் 130, 120 என்று இருக்கிறது.
Bookmyshow பக்கம் போனால் இதையெல்லாம் பார்க்கலாம்.
இப்படி போனால் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் அழிந்துபோகும் வாய்ப்பு இருக்கிறது. டிக்கெட் குறைப்பு ஒன்றே திரைப்படங்களை காப்பாற்றும் என்று நினைக்கிறேன்.