கதையை ஆரம்பித்து முதல் ஒன்று அல்லது, இரண்டு பக்கங்கள் முன்னேறிய பின்னர், அதை அடித்துத் திருத்தி திரும்ப எழுதி, அன்றையப் பொழுதுக்குப் படுத்தபின்,
மறுநாள் காலை, திரும்புவும் திருத்தி, திரும்பவும் அந்த இரண்டு பக்கங்களையும் எழுதி – அந்த இரண்டு பக்கங்கள் இந்தச் சிகிச்சையில், ஒரு பக்க மாகச் சுண்டிவிடும் – கதையின் அடுத்த இரண்டு பக்கங்கள் எழுதியாகும்.
உடனே கதையை ஆரம்பத்திலிருந்து, அதாவது இந்த மூன்று பக்கங்களைத் திருத்தித் திரும்ப எழுதுவேன்.
மறுநாள் காலை, இதே processing இப்படியே எழுதி எழுதி, ஏதோ ஒரு கட்டத்தில் நடை தன் ச்ருதியில் விழுந்துவிடும். அது எனக்கே அடையாளம் தெரியும்.
பிறகு இந்த மண்உணிப் புழுவின் பிரயாசை அவ்வளவாகத் தேவையிருக்காது. இதைப் பயந்து கொண்டேதான் சொல்கிறேன்.
இப்படி முதல் draft முடிந்தபின், Revision, re-writing முதலிலிருந்து இதற்குமேல் மெருகு சாத்தியமில்லை என்று கண்டபின் – அப்பாடா! கரடி ஆலிங்கனத்திலிருந்து விடுபட்டேன்.
ஒன்று சொல்கிறேன். சாரீரம் கடவுள் கொடுத்தால் உண்டு; ஆனால் ச்ருதி நம்மிடத்தில்தான் இருக்கிறது. அது பிசகாமல் பார்த்துக் கொள்வது நம் பொறுப்பு.
இவ்வளவு உழைப்பில் கிடைத்த முடிவுப்பொருள் (Finished product) எப்படி இருக்கும்?
ஊஞ்சல் சங்கிலிக் கோவை போல், வார்த்தை மறு வார்த்தையுடன் கோத்துக் கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்த இடத்தில், பொருள் புதைந்து, தன் ரஹஸ்ய மணம் (Mystic flavour) வீசிக் கொண்டு…
கதைக் கரு ஊன்றி, சிந்தனையில் ஊறி வெளிப்படத் தயாரான பின்னர் மேற்சொன்ன விதத்தில் எழுத்தில் வடித்து முடிக்க, சிறுகதைக்கு எனக்கு மூன்று மாதங்களேனும் ஆகும்.
இந்த நாற்பத்து எட்டு வருட சாதகத்தில், சிறுகதை எண்ணிக்கையில் நான் இன்னும் இருநூறு எட்டவில்லை என்றால் நீங்கள் நம்பியாக வேண்டும்.
வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின், கொஞ்சம் கூட எழுதுவதாகப் பேர். ஆனால் என் சிரமம் தணிந்த பாடில்லை.
எழுத்தைத் தீவிரமாகப் பயில்வது லேசு அல்ல. கதை எழுதுவது விளையாட்டு அல்ல. எழுத்துக்கு உடலையே உருக்கிவிடும் சக்தி உண்டு என்பது எனக்கு அனுபவ உண்மை.
ஆனால் ருசி கண்டுவிட்ட பின்னர் ருசி விடாது.
ஆச்சு, ஒருவழியாகக் கட்டுரையின் முடிவுக்கு வந்து விட்டேன் என்றே நினைக்கிறேன். ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்கிற தலைப்பின் சாக்கில், அதிகப்ரஸங்கம் சில இடங்களில் நிகழ்ந்திருக்கலாம்.
நான் சொல்லியிருப்பது சிறுகதையென்ன, நெடுங்கதை – நாவல் எல்லாவற்றுக்குமே பொருந்தலாம் – பொருந்தட்டுமே!
எல்லாவற்றுக்கும் கடைசியாக: முதலும் அதுதான். சிறுகதையோ, நெடுங்கதையோ, எழுத ஆரம்பித்து விடு.
விஷயம் பிறகு தன் வெளியீட்டுக்குத் தன் வழியை எப்படியேனும் பார்த்துக் கொள்ளும்.
முதலில் தண்ணீரில் விழுந்தால்தான், குளிப்பதோ, முழுகிப் போவதோ, நீச்சல் அடிப்பதோ.
எழுதப் போகிறேன். அதற்கு Hotel Oceanic இல் அறை வாடகைக்கு எடுக்கக் காத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியாதே.
இதோ, திண்ணையில் உட்கார்ந்து, அட்டையைத் துடைமீது வைத்துக் கொண்டு ஆரம்பி.
ஆரம்பித்துவிடு.
என் ஆசிகள்.
லா.ச.ராமாமிருதம்,
– முற்றுப் பெறாத தேடல் – தொகுதியிலிருந்து.