பாஜகவுக்கு எதிராக பாட்னாவில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்!

1977 ஆம் ஆண்டை நினைவுபடுத்தும் வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்  வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இந்திராகாந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்து, நாட்டில் ஒரு  பிரளயத்தை ஏற்படுத்தி, 77 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டார்.

பாட்னாவில் அப்போது ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில்  எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு, ஜனதா எனும் கட்சியை தோற்றுவிக்க முடிவு எடுத்தனர். ஜனதா கட்சி உருவாகி, 77 ல் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டது. இந்திராவே தேர்தலில் தோற்றுப்போனார்.

அது போன்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் பாட்னா கூட்டம் அமைந்துள்ளது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இல்லத்தில் வெள்ளியன்று நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் இதுவரை இல்லாத வகையில் 15 எதிர்க்கட்சித் தலைவர்கள் திரண்டனர்.

ஸ்டாலின், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த்மான், ஹேமந்த் சோரன் ஆகிய முதலமைச்சர்களோடு ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகிய சக்திமிக்க தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். சீதாராம் எச்சூரி, டி.ராஜா ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தலைவர்கள் கை கோர்த்த நிகழ்வு, பல ஆண்டுகளுக்குப் பிறகு அரங்கேறியுள்ளது.

இந்தத் தலைவர்களிடையே கொள்கை முரண்கள் இருப்பினும், வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை அகற்றியே தீருவது என சபதம் எடுத்துள்ளனர்.

15 கட்சிகளும் மக்களவைத் தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது என தீர்மானித்திருப்பது பா.ஜ.க.வை நிஜமாகவே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

லாலு பிரசாத் யாதவ்

பீகாரில் அசைக்கமுடியாத செல்வாக்குள்ள ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் சிங்கப்பூரில் சிறுநீரக ஆபரேஷன் நடந்துள்ளது.

பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் சொன்ன அறிவுரையை புறக்கணித்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அவரது பங்களிப்பு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்? என முடிவு எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் இமாச்சலப்பிரதேசத்தில் அடுத்த மாதம் (ஜுலை) இரண்டாவது வாரத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தி, 543 தொகுதிகளிலும் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து தீர்மானிக்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படலாம்.

ஆம் ஆத்மி புறக்கணிப்பு

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை.

அந்தக் கட்சியின் முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), பகவந்த் மான் (பஞ்சாப்) ஆகிய இருவரும் பேட்டி ஏதும் அளிக்காமல் கிளம்பிச் சென்று விட்டனர்.

டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர உள்ளது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் சாதித்து வருகிறது.

பாட்னா கூட்டத்தில், அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு மற்ற கட்சிகள் வலியுறுத்திய நிலையில், காங்கிரஸ் அதற்கு மறுத்து விட்டது. இதனால் ஏற்பட்ட கோபத்தால் செய்தியாளர்கள் சந்திப்பை ஆம் ஆத்மி புறக்கணித்துள்ளது.

அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்து கொள்ளுமா என்பது தெரியவில்லை.

-பி.எம்.எம்.

You might also like