ஆளுநரின் வள்ளலார் பற்றிய பேச்சும், தொடரும் எதிர்ப்பும்!

எங்கே சென்றாலும், பேச்சில் எதையாவது பொறி பறக்க வைப்பது தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு வாடிக்கையாகி விட்டது.

இப்போதும், வடலூரில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ”சனாதன தர்மத்தைப் பிரதிபலித்தவர் வள்ளலார். சனாதன தர்மத்தை ஒளிரும் சூரியன் அவர்” என்று அவரைக் குறித்துப் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியிருக்கிறார் உயர்க்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. 

“சனாதன தர்மத்தைக் கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். சனாதனத்திற்கும், சன்மார்க்க நெறிக்குமான வேறுபாடு கூட ஆளுநர் ரவிக்குத் தெரியவில்லை.

சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியைக் கொண்டு செல்லப் பார்க்கிறார் ஆளுநர். அவருடைய கருத்து நிராகரிப்புக்குரியது’’ என்று தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார் அமைச்சரான தங்கம் தென்னரசு.

“இந்து மத‍த்தைப் போற்றுகிறவர்கள் தான் வள்ளலாரையும் போற்றுகிறார்கள்’’ என்று பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்டாலும், சமூக வலைத் தளங்களில் விமர்சனங்கள் அதிகப்பட்டிருக்கின்றன.

இந்தச் சமயத்தில் வள்ளலாரின் ‘சமரச சன்மார்க்கச் சங்கம்’ பற்றிச் சில செய்திகள்:

அன்பு, அருள், சமரசம், உயிர் இரக்கம் என்கிற நான்கையும் வலியுறுத்தி 1867 ஆம் ஆண்டு வடலூரில் வள்ளலாரால் துவக்கப்பட்டது தான் சமரச சன்மார்க்கச் சங்கம். வடலூரில் அன்னதானத்திற்காகவே தருமசாலை உருவானது.

1872 ஆம் ஆண்டில் சத்திய ஞான சபையைத் துவக்கினார் வள்ளலார்.

தீண்டாமைக்கு எதிரான மனோபாவத்தை அவர் “சாதிகளில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் இல்லை’’ என்பதைத் தீவிரமாக வலியுறுத்தினார்.

மதவாத‍த்திற்கும் எதிராக எழுந்த அவருடைய குரல் முக்கியமானது.

“மதித்த சமய மத வழக்கெல்லாம் மாய்ந்தது. வருணாசிர‍ம‍ம் எனும் மயக்கமும் சாய்ந்தது’’ என்ற வள்ளலார் இன்னொன்றையும் சொன்னார்.

“பெரு நெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் கிடியாதிருக்க வேண்டும்’’
ராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட வள்ளலார் “சன்மார்க்க விவேக விருத்தி’’ என்ற இதழை நடத்தியிருக்கிறார்.

ஐயாயரத்திற்கும் மேற்பட்ட அருட்பாக்களை இயற்றினார். உருவ வழிபாட்டுக்கு எதிராக “அருட் பெருஞ் ஜோதியே கடவுள்’’ என்றார்.

அவருடைய வாத‍த்தை அப்போதைய இந்துமதவாதிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருடைய அருட்பாக்கு எதிராக மருட்பா எழுதினார்கள். கடலூரில் வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

“கருணையே என் உயிர்’’ என்று வாழ்ந்த வள்ளலார் 1874 ஆம் ஆண்டு தை மாதம் வெள்ளிக்கிழமையன்று மறைந்து போனார்.

“பசித்திரு.. தனித்திரு.. விழித்திரு’’ என்று சொல்லிவிட்டு கருணை நிறைந்த உள்ளத்தோடு மறைந்த வள்ளலாரின் எழுத்துக்கள் இப்போதும் உயிர்ப்போடு இருக்கின்றன. அவர் பேசியவற்றைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

வடலூரில் அவர் ஏற்றிய ஜோதி இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள அன்னதானக் கூடத்தில் ஏராளமானவர்கள் இப்போதும் பசியாறிக் கொண்டிருக்கிறார்கள்.

“அறிவொன்றே தெய்வம்’’ என்ற முழக்கத்துடன் வாழ்ந்தவரை நிகழ்கால அரசியல் நோக்கங்களுக்குள் சிக்க வைக்க வேண்டாம். அவர் சொன்னதற்கு மாறான அர்த்தங்களைப் புகுத்தவும் வேண்டாம்.

– யூகி

You might also like