இயல்பான நடிப்பால் ஈர்க்கும் தேவயானி!

சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் அற்புதமான நடிப்பை வழங்கியவர நடிகை தேவயானி. கவர்ச்சி காண்பிக்காமல் நடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

சினிமாவுக்காக தேவயானி என பெயர் மாற்றிக்கொண்ட இவரின் உண்மையான பெயர் சுஷ்மா ஜெயதேவ். கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். இவரின் தாய் மலையாளி.

வீட்டிற்கு முத்த மகளான இவர், குடும்பத்துடன் மும்பைக்கு சென்றதால் படித்தது, வளர்ந்தது என அனைத்துமே மும்பையில் தான். இவருக்கு இரண்டு தம்பிகள். அதில் ஒருவர் தான் நகுல்.

பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்த காரணத்தினால் நிறைய ஆடிஷன்கள் சென்றிருக்கிறார்.

இறுதியாக அவருக்கு இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு மலையாளத்திற்கு சென்றுவிட்டார்.

எந்த ஒரு ஆடிஷனும் இல்லாமல் இவரை பார்த்தவுடன் நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் பிரியதர்ஷன் அவரின் வீட்டிற்கே சென்று பேசி உள்ளார்.

கின்னரிபுழையோரம் படம் தான் அவரின் முதல் மலையாள படம்.

தமிழில் கே.எஸ் அதியமான் இயக்கத்தில் தொட்டாச்சிணுங்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தேவயானி. ரேவதியின் தங்கையாக அவர் நடித்து இருந்தார்.

சூர்ய வம்சம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த ராஜகுமாரனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த நேரங்களில் நீ வருவாய் என ஒரு படமும் தேவயானியை வைத்து இயக்கினார் ராஜகுமாரன்.

அது மட்டுமில்லாமல் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தையும் ராஜகுமாரனே இயக்கினார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காமல் இருந்த நிலையில் எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போதும் தேவையானி பல படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வேந்தர், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, நீ வருவாய் என, என் உயிர் நீ தானே, செந்தூரம், தொடரும், கும்மிப் பாட்டு, புதுமைப் பித்தன், பாட்டாளி என பல வெற்றி படங்களில் நடித்தார்.

தேவயானி கோலங்கள் சீரியல் மூலம் பெண்களை கவர்ந்தார். பெண்கள் வீட்டில் வாழ்ந்தார் என்றே சொல்லாம். படங்களை விட சீரியல் தான் அவரை இன்னும் எளிதாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அற்புதமான நடிகையான தேவயானி இன்று (ஜூன் – 22) தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

– நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ் இதழ்

You might also like