“தமிழகத்தில் ஒருமுறை பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துங்கள்” – என்று தமிழகத்திற்கு வந்திருந்த மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத்சிங் பேசியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
அடுத்த ஆண்டில் நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல் தான். அமித்ஷா பேசியதைப் போல, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளில் தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி பெறும்” என்று பேசியதைப் போல, ராஜ்நாத்சிங் பேசவில்லை.
தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி வர வேண்டும் – என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
அதற்கு என்ன அர்த்தம்?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில ஆண்டுகள் இருக்கின்றன.
இந்த நிலையில் – அதை உணர்த்தும் விதத்தில், அதிலும் மத்திய அமைச்சர் ஏன் தமிழ்நாட்டிற்கு வந்து பேச வேண்டும்?
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோதும், அவர் தொடர்புடைய இடங்களில் சோதனையிட்ட நிலையிலும், தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி” என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்தி, தி.மு.க.வுடன் அ.தி.மு.க.வையும் சேர்த்துக் குற்றம் சாட்டியதைப் போலவே, ராஜ்நாத்சிங்கும் செய்திருக்கிறார். “ஊழலற்ற ஆட்சி” என்பதை வழிமொழிந்திருக்கிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தற்போது கடிவாளம் போட்ட மாதிரியான நிலை, அ.தி.மு.க முன்னாள் மாண்புமிகுகளுக்கும் வரலாம் அல்லது வர வைக்கலாம்.
எண்ணிக்கையில் அதிகமிருக்கிற தமிழ்நாடு எம்.பி.க்களின் எண்ணிக்கை மீது பா.ஜ.க ஒரு கண்ணை வைத்திருப்பது செங்கோல், தமிழின் தொன்மையைப் போற்றுவது என்றெல்லாம் பல உபாயங்களைக் கையாண்டாலும், தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டை அடுத்தடுத்துச் சுமத்தும் வேலையை பா.ஜ.க செய்ய நிறையவே வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.க.வைக் கட்டாயப்படுத்தி ஒருங்கிணைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தச்சொல்லி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் டெல்லிக்குச் சென்று முன்வைத்த கோரிக்கையையும் இத்தருணத்தில் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கையில், தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பற்றி மத்திய அமைச்சர் ஒருவர் பேசுவதை வேறு எப்படித்தான் எடுத்துக் கொள்வது?
– யூகி