நினைவில் நிற்கும் வரிகள்:
***
குட்டி ஆடு மாட்டிக்கிட்டா
குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா
கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடி தான் சொந்தம்!
(உனக்கு)
கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா!
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோடே சொந்தம் மாறுமடா! – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா
(உனக்கு)
பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலை செய்த பகல் வேஷக்காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா
அவரு வந்தார் இவரு வந்தார் ஆடினார் – முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் – மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்.
(உனக்கு)
செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்த பின்னே அத்தனைக்கும்
சொந்தக்காரன் யாரு? – நீ
துணிவிருந்தா கூறு!
ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு!
(உனக்கு)
பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை
பொறந்தது எத்தனை எறந்தது எத்தனை
வம்பிலே மாட்டிப் போனது எத்தனை
மானக் கேடாய் ஆனது எத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு – இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்!
(உனக்கு)
– 1956-ல் வெளிவந்த ‘பாசவலை’ திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரிகள். இது எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மிக பிடித்த பாடல். எம்.எஸ்.விஸ்வநாதனும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் நெருக்கமாவதற்கு காரணமாக இருந்த பாடலும் இதுவே.