தமிழ் சினிமாவை ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகிய இருவரும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த காலகட்டத்தில் ராதாரவி, நாசர், ரகுவரன், ஆனந்த்ராஜ், சரண்ராஜ் போன்றோர் வில்லன்களாக ஜொலித்தனர்.
அந்த நேரத்தில் புதிய சாயல் வேண்டும் என்பதற்காக இந்தி நட்சத்திரங்களை வில்லன்களாக களமிறக்கினர், சில இயக்குநர்கள். அந்த இறக்குமதி இன்றைக்கும் தொடர்கிறது. தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய சில வில்லன்கள் குறித்த ஒரு தொகுப்பு:
அம்ரிஷ்புரி
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரே படம் தளபதி. பான் இந்தியா படமாக இதனை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் பிரபலமான நடிகர்களை நடிக்க வைக்க முடிவு செய்தார் மணிரத்னம்.
கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை, ரஜினிக்கு இணையான பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.
தெலுங்கில் பிரபலமாக இருந்த ஹீரோவை கலெக்டர் வேடத்துக்கு பேசினார். ஆனால் அது ஈடேறவில்லை. இதனால் புதுமுக நடிகர் அரவிந்த்சாமிக்கு கலெக்டர் வேடம் கிடைத்தது.
இந்தியில் 450 படங்களில் நடித்த அம்ரிஷ்புரி, கலிவரதன் எனும் வில்லன் கேரக்டரில் நடித்தார். அவர் 5 நாட்கள் நடிப்பதற்கு பெரும் சம்பளம் கொடுக்கப்பட்டது.
தளபதி இமாலய வெற்றி பெறுவதற்கு ரஜினி, மம்முட்டி, இளையராஜா ஆகியோருடன் அம்ரிஷ்புரியும் ஒரு காரணமாக இருந்தார்.
அக்ஷய்குமார்
எந்திரன் படத்தில் நாயகன் மற்றும் வில்லன் வேடத்தை ரஜினிகாந்தே தோளில் சுமந்தார். அந்த படம் 2.0 என இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டபோது, வில்லன் பாத்திரத்துக்கு இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கொரோனா காலத்தில் கஷ்டப்பட்டோருக்கு உதவிகள் செய்து நிஜ கதநாயகனாக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்ட அக்ஷய்குமார், பறவைகள் நேசனாக பட்சிராஜன் என்ற கேரக்டரில் வாழ்ந்து காட்டி இருந்தார்.
2.0 அவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. அதன்பின் தமிழில் அவர் நடிக்காதது ஏன் என தெரியவில்லை.
நானா படேகர்
இந்தி சினிமாவின் தலை சிறந்த நடிகர்களுள் ஒருவர் நானா படேகர். ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்தவர்.
2008 ஆம் ஆண்டு வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் அவரை தமிழுக்கு அழைத்து வந்தவர் பாரதிராஜா. அந்த படத்தில் அவர் – கதாநாயகன். படம் நல்ல விமர்சனத்தை பெற்ற அந்த படம் பெரிதாக வசூல் குவிக்கவில்லை.
பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு (2018) நானாபடேகரை ரஜினியின் ‘காலா’ படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார், பா.ரஞ்சித்.
காலா படம் மும்பையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டதால், ஹரிதாதா வில்லன் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தினார் நானாபடேகர்.
வணிக ரீதியில் காலா ஜெயித்ததோடு நானா படேகரையும் தமிழ் மக்களுக்கு, கிராமங்கள் வரை கொண்டு சென்றது.
பேட்ட படத்தில் நவாசுதீன் சித்திக்கும், தர்பார் படத்தில் சுனில்ஷெட்டியும், வில்லன் பாத்திரத்துக்கு புதிய சாயம் பூசி இருந்தார்கள்.
விவேகத்தில் வில்லனாக அறிமுகமான விவேக் ஓபராய், அந்த படம் ஓடாததால் பெரிய அளவில் பேசப்படவில்லை.
அம்ஜத்கான்
முதல் படத்திலேயே இந்தியா முழுமைக்கும் அறியப்பட்ட ஒரே நடிகர் அம்ஜத்கான் என்று சொன்னால் தவறில்லை.
ஷோலே படத்தில் அவர் ஏற்ற கப்பார் சிங் வேடம், பெரியவர்களையும் மிரள வைத்தது.
அந்த படத்தின் இமாலய வெற்றிக்கு அம்ஜத்கான், பிரதான காரணம்.
அவரை, தமிழுக்கு விக்ரம் படத்துக்காக அழைத்து வந்தார், கமல்.
ஆனால் வில்லன் வேடம் அல்ல. நகைச்சுவை உணர்வு மிக்க மன்னர். அதிலும் அசத்தி இருந்தார் அம்ஜத்கான்.
சஞ்சய்தத்
விஜய் நடிக்க லோகேஷ்கனகராஜ் இயக்கும் ‘லியோ’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான சஞ்சய்தத், இதில் வில்லனாக அறிமுகம் ஆகிறார்.
இந்த படத்தில் அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் , ஆண்டணி என அரை டஜன் வில்லன்கள் இருந்தாலும், சஞ்சய்தத்தை பெரிதும் எதிர்பார்க்கிறது, கோடம்பாக்கம்.
– பி.எம்.எம்.