தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அ.தி.மு.க தலைமை மீது வைத்த விமர்சனம் பொறியைக் கிளப்பியிருக்கிறது.
வழக்கம்போல இதற்குப் பதில் அளிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சூடாகப் பதில் அளித்த பிறகு பா.ஜ.க. தரப்பில் முகநூல் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
எப்போதும் கொதிநிலையில் பேசும் முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம் அண்ணாமலையை வறுத்தெடுக்கிற விதமாகப் பேசியதும், எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸூம் கூடப் பதில் சொன்னார்கள்.
பா.ஜ.க துணைத் தலைவரான கரு.நாகராஜன் “உண்மை சுடும்” என்று பதிவிட. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று வியப்புக்குரிய விதமாகப் பதில் அளித்திருக்கிறார் ஓ.பி.எஸ்.
“அண்ணாமலையை தமிழக பா.ஜ.க தலைமைப் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும்” என்கிற குரல்கள் அ.தி.மு.க தரப்பில் வலுத்திருக்கின்றன.
கட்சித்தலைமையின் அனுமதியோடு செய்தியாளர்களைச் சந்தித்த கரு.நாகராஜன் அ.தி.மு.க மீதான விமர்சனத்தை வெளிப்படையாகவே முன் வைத்திருக்கிறா்ர், “கூட்டணியில் பெரியண்ணன் எல்லாம் இல்லை” என்றும் சொல்லியிருக்கிறார்,
சமீபத்தில் தான் மத்திய அமைச்சரான அமித்ஷா தமிழகத்திற்கு வந்தபோது, அவரைச் சந்திக்க அலை மோதிய தலைவர்கள் தான் தற்போது அண்ணாமலையைக் கண்டித்துத் தீர்மானம் போடும் அளவுக்குச் சென்றிருக்கிறார்,
ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசிய பேச்சு தான் அனலை உருவாக்கியிருக்கிறது.
“அ.தி.மு.க தலைவர்கள் அண்ணாமலையைத் தனிமைப்படுத்திவிட முடியாது” என்று பா.ஜ.க தரப்பு சொல்ல, “அண்ணாமலையை நீக்காவிட்டால், பா.ஜ.க கூட்டணி பற்றியே மறு பரிசீலனை பண்ண வேண்டியிருக்கும்” என்று தன் பங்கிற்குக் கொளுத்திப் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
“அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும். அவரை பா.ஜ.க தலைமை கண்டிக்க வேண்டும்” என்றிருக்கிறார் பொன்னையன்.
எந்த உண்மை சுடப்போகிறது? யார் மாற்றப்படப் போகிறார்கள்?
‘திராவிடம் இல்லாத தமிழகம்’ என்ற முழக்கத்தை பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த காலத்தில் முழங்கிய முழக்கத்தை மறுபடியும் அண்ணாமலை தலைமையில் முழங்க ஆரம்பித்திருக்கிறதா பா.ஜ.க.
– யூகி