உடலுறுப்பு தானம் செய்ய உறுதியேற்போம்!

மண்ணும் நெருப்பும் தின்னும் உடலைத் தேவையுள்ளோர்க்குத் தந்து மனிதம் காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் நூற்றாண்டையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் முரளி, தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 5 பேருடன் உடல் உறுப்பு தானம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்தச் செய்தியை டிவிட்டரில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்கும் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞரின் திட்டங்களால் இப்போதும் பல கோடிப் பேர் பயனடைந்து வருகின்றனர்.

இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக அவர் அறிமுகப்படுத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எண்ணற்ற ஏழை எளியோர் உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ளனர்.

அத்தகைய தாயுமான தலைவரது நூற்றாண்டில் தனது குடும்பத்துடன் உடலுறுப்புத் தானம் செய்ய முடிவெடுத்த சேலத்தைச் சேர்ந்த இந்தக் கழக உடன்பிறப்பின் செயலால் நெகிழ்கிறேன்.

கடந்த 2009-ம் ஆண்டே எனது துணைவியாரும் நானும் உடலுறுப்புகளைத் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துக் கையொப்பமிட்டுள்ளோம். 

இதேபோல் அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம். மண்ணும் நெருப்பும் தின்னும் உடலைத் தேவையுள்ளோர்க்குத் தந்து மனிதம் காப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like