இலக்கியம் கொண்டாடும் இந்திரன்!

கலை இலக்கிய விமர்சகர், கவிஞர் இந்திரன் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கலை இலக்கியச் செயல்பாடுகளில் பங்காற்றி வந்திருக்கிறார்; பன்முகப்பட்ட இலக்கிய முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

ஜுன் 11 ஆம் நாள் தனது எழுபத்தைந்தாம் ஆண்டினை நிறைவு செய்கிறார். அவரது 75 வது பிறந்த நாள் விழாவை ஓர் இலக்கிய சங்கமமாக வடிவமைத்திருக்கிறார்கள் இலக்கிய நண்பர்கள்.

சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது 2012, லலிதகலா அகாடமி ஆய்வு உதவி நிதி 2018, ஒரிசா அரசு படச்சித்ரா ஓவிய ஆய்வுக்கு உதவி நிதி 2003, திருப்பூர் சங்கம் மொழிபெயர்ப்பு விருது 2012 உட்பட பல விருதுகளை அவர் பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் இலக்கியத்தில் அவரது வாழ்நாள் சாதனைப் பங்களிப்புக்காகவும், விளிம்புநிலை மக்களின் விழிப்புணர்வு இலக்கியச் செயல்பாட்டுக்காகவும் வானம் வேர்ச்சொல் இலக்கிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

இதுபற்றிப் பேசிய கவிஞர் நா.வே. அருள், “இலக்கிய உலகின் இப்படியான சாதனைகளை நிகழ்த்துவது போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது என்றாலும் அதனைப் பிரதானப்படுத்தாமல் இந்த எளிய இலக்கிய நிகழ்வு இலக்கியச் சாதனையாளர்கள், வாசகப் பெருமக்கள், இளைய இலக்கிய சக்திகள் அனைவரின் கூடுகையாக இருக்கக் கூடாதா என்கிற பெருவிருப்பு கொள்கிறோம்.

ஓவிய அரங்கு, சிற்ப அரங்கு, உரையாடல் அரங்கு, உணவு அரங்கு என்று அனைவரும் கூடி இந்திரனுடனும் உரையாடுவோம்.

ஓவியர் முருகேசன் வழிகாட்டுதலில், டாக்டர் சுதாமன் அவர்களின் ஒருங்கிணைப்பில் “இலக்கியம் கொண்டாடும் இந்திரன்” என்கிற ஓர் எளிய கலை இலக்கியக் கூடுகையைக் கனவு காண்கிறோம்.

நா.வே.அருள்

இந்த இனிய கலை இலக்கியச் சங்கமத்தில் நீங்கள் இல்லாமலா? உங்கள் வருகையை உறுதி செய்தால் உள்ளம் குளிர்வோம்” என்று வரவேற்கிறார்.

இது ஒரு தனி நபரின் பிறந்தநாள் என்பதைவிடவும் இலக்கியத்தில் இளைய சக்திகளின் எழுச்சி நாள் என்று சொல்லுமளவுக்கு விழாவினைத் திட்டமிட்டிருக்கிறோம்.

நிகழ்ச்சியில் புத்தக வெளியீடுகள், ஓவிய அரங்கு, சிற்ப அரங்கு, இசை அரங்கு, நாடக அரங்கு, புத்தக அரங்கு என பல கலை இலக்கிய நிகழ்ச்சிகளின் சங்கமம் எனலாம் என்றும் குறிப்பிடுகிறார் விழா ஒருங்கிணைப்பாளர் நா.வே.அருள்.

You might also like