இளம் பிராயத்தில் இருந்தபோதே தனது ரத்தத்தில் அரசியல் கலந்திருந்ததால், புரட்சித்தலைவர், தனிக்கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனார்.
அதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, வெள்ளித்திரையில் முகம் காட்டும் பல நடிகர்களுக்கு நாற்காலி கனவுகள் உருவாகிறது. அவர்களில் ஒருவர் சரத்குமார்.
ரஜினிகாந்துக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததால் அரசியல் ஆசை துளிர் விட்டது. தப்பில்லை. விஜயகாந்துக்கும் மக்கள் ஆதரவு கொடுத்தார்கள்.
கூட்டணிகளை மாற்றி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி பெரும் வீழ்ச்சியை சந்தித்தார். விஜயகாந்தின் உடல்நலக்குறைவு அவரது தே.மு.தி.க.வையும் முடக்கிப்போட்டு விட்டது.
சரத்குமார் ஏன் அரசியலுக்கு வந்தார்?
நிர்ப்பந்தங்களால் அவர் அரசியலுக்கு வர நேரிட்டது.
ஆரம்பத்தில் சரத்குமார் பத்திரிகைத்துறையில் இருந்தார். சினிமா கனவுகள் நிறைய இருந்தன.
சிறு சிறு வேடங்களில் நடித்தார். பின்னர் வில்லன் வேடம் பூண்டார். இதன் மூலம் மக்களுக்கு ஓரளவு பரிச்சயம் ஆனார்.
கே.எஸ்.ரவிகுமார், மணிவாசகம் போன்றோர், பெரிய நடிகர்கள் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால், சரத்குமாரை தங்கள் படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தனர். போட்ட முதலீட்டை தயாரிப்பாளர்களால் எடுக்க முடிந்தது.
பவித்ரன் இயக்கிய ‘சூரியன்’ சரத்குமாருக்கு, பெரிய வணிகச் சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது. 2 ஆண்டுக்கு ஒரு முறையாவது ஹிட் படம் கொடுத்து விடுவார். (நாட்டாமை, சூர்ய வம்சம், நட்புக்காக, ஐயா போன்ற படங்களைச் சொல்லலாம்)
சரத் அரசியலுக்கு வந்த கதை
தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நாட்டாமை படத்தை ஜெயா டிவி ஒளிப்பரப்பியதால், சரத்துக்கு பிரச்சினை உருவானது.
இதனால் 1996 ஆம் ஆண்டு, ஒரு பாதுகாப்பு கருதி, அவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார்.
1998 ஆம் ஆண்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் கலைஞர்.
அந்த தொகுதியிலிருந்த மூத்த தலைவருக்கு கோபம். சரத் வளர்ந்தால், தனக்கு போட்டியாக வந்து விடுவாரோ என கலக்கம் அடைந்தார். திட்டமிட்டு அந்த தேர்தலில் சரத் தோற்கடிக்கப்பட்டார். வெறும் 6,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
இதனால் நிலைகுலைந்து போயிருந்த சரத்குமாருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளித்தார், கலைஞர். அதன்பின் தி.மு.க.வுக்குள் தோன்றிய பிணக்குகளால், அங்கிருந்து வெளியேறினார்.
2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். அரசியலில் தனித்து உலா வந்தால் கரை சேர முடியாது என்பதை உணர்ந்த சரத், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தார்.
அவரது கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா.
நாங்குநேரியில் அந்த கட்சியின் வேட்பாளர் எர்ணாவூர் நாராயணன் ஜெயித்தார்.
தென்காசியில் நின்ற சரத்குமார், தி.முக.வின் வலிமை வாய்ந்த தலைவர் கருப்பசாமி பாண்டியனை 22 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கருப்பசாமி பாண்டியன், ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர்.
எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரிய தளகர்த்தராக விளங்கியவர். வெளியூர்க்காரரான சரத்குமார், கருப்பசாமி பாண்டியனை தோற்கடித்தது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.
தேர்தலில் நின்று மக்களை நேரடியாக சந்தித்து சரத், முதலாவதாகவும் கடைசியாகவும் வென்றது இந்தத் தேர்தலில்தான்.
தென்காசி வெற்றிக்கு பிறகு சரத்குமார், தொடர் தோல்விகளையே எதிர்கொண்டார். அவரது நெருங்கிய சகாவான, எர்ணாவூர் நாராயணன், சரத்திடம் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தார்.
கட்சி பிளவுபட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வந்தது.
அந்தத் தேர்தல் அவரது அரசியல் எதிர்காலத்தையே நிலைகுலையச்செய்து விட்டது எனலாம்.
கடந்த முறை தென்காசியில் வென்ற சரத்குமாருக்கு 2016 ல் திருச்செந்தூர் சட்டசபை தொகுதி கொடுக்கப்பட்டது.
திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணனின் கோட்டை. தனியாக நின்றாலும் ஜெயிக்கும் அளவுக்கு செல்வாக்குள்ள அனிதாவிடம் (திமுக), சரத் தோற்றுப் போனார். 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, சுத்தமாக கரைய நேரிட்டது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்து 33 தொகுதிகளில் அந்த கட்சி களம் இறங்கியது.
ஒரு இடமும் கிடைக்கவில்லை.
துவக்கப்பட்டபோது பெரும் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கிய சமத்துவ மக்கள் கட்சி, தற்போது நிலையில் இருந்து எதிர்காலத்தில் எப்படி உருமாறும் என்பதை கணிக்க முடியவில்லை.
-பி.எம்.எம்.