வாழ்க்கையைக் கொண்டாடி மகிழுங்கள்!

நூல் அறிமுகம் :

வாழ்க்கையை அதன் இயல்பில் சவால்களோடும், பிரச்னைகளோடும், மகிழ்வோடும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை அனுபவங்களுடன் எழுதியிருக்கிறார் ஜான்ஸி ஷஹி.

நம் எல்லோருக்குமே வாழ்க்கை சில நேரங்களில் கடினமானதாகவும், மிகவும் சிரமமானதாகவும் இருக்கிறது. ஏனென்றால், ஒருசில நேரங்களில் நாம் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.

இழப்பதற்கு என்ன இருக்கிறது என்ற கட்டுரை தொடங்கி, எப்போதும் பாசிட்டிவ்வாக இருக்கலாமே என்ற கட்டுரை வரையில் 23 கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு கட்டுரையும் பல்வேறு வகைப்பட்ட அனுபவங்களை தோள்மீது கைபோட்டு தோழமையுடன் பேசுகின்றன.

ஒவ்வொரு நாளும் 86, 400 நொடிகள் நமக்குப் பரிசாகக் கிடைக்கின்றன. இரவில் தூங்கச் செல்லும்போது மீதம் வைத்த நொடிகள் திருப்பித் தரப்படமாட்டாது.

எந்த நேரத்திலும் இந்த விளையாட்டு முன்னறிவிப்பின்றி முடிவுக்கு வரலாம். எனவே ஒவ்வொரு நாளையும் எவ்வளவு கொண்டாட்டமாக வாழமுடியுமோ, அவ்வளவு கொண்டாட்டமாக வாழலாம் என்கிறார் ஜான்ஸி.

அணிந்துரையில் கவிஞர் சல்மா, “பேசப்படாத விஷயங்களைப் பேசுவது என்பதுதான் இன்றைக்கு மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒன்றாகத்தான் உளவியல் சார்ந்து எழுதப்படக்கூடிய இதுபோன்ற கட்டுரைகள் இந்தத் தருணத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன. அதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ள தோழர் ஜான்ஸிக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிடுகிறார்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் உளவியலாளர் ஒருவர் அன்றாட நிகழ்வுகளை, பிரச்சனைகளை, அதற்கான காரணங்களை நாம் தேடிச் செல்வதற்கும் சரி செய்வதற்கும் நமது கைவிரல்களை பற்றிக்கொண்டு நடந்துசெல்வதைப் போல அமைந்துள்ளது.

அலெக்ஸ் பால் மேனன் ஐஏஎஸ், “எளிமைக்கு அடுத்த நிலையில் குறிப்பிடத்தக்கது எடுத்துக்கொண்ட கருப்பொருள் குடும்பம், திருமணம் உள்ளிட்ட உறவுகள், குழந்தைகள் என தினசரி வாழ்வைக் கடக்க உதவும் எளிய வாழ்க்கைத் தத்துவங்கள் புத்தகம் முழுக்க விரவிக் கிடக்கின்றன” என்று மதிப்பிடுகிறார்.

இந்த வாழ்க்கையில் அன்பைப் பெறுவதற்கும் எல்லா இன்பங்களை அனுபவிப்பதற்கும் இந்த வாழ்வைக் கொண்டாட்டமாக வாழ்வதற்கும் நான் போதுமானவளாகவோ, போதுமானவனாகவோ இருக்க விரும்புகிறேன் என்று சொல்லிப் பழகுங்கள் என்று ஆலோசனை சொல்கிறார் ஜான்ஸி. மாற்றம் முதலில் உங்களிடமிருந்து தொடங்கட்டும் என்கிறார்.

நான் எனும் பேரதிசயம்:
ஜான்ஸி ஷஹி

வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ்,
15, மகாலெட்சுமி அபார்ட்மென்ட்ஸ்,
1, ராக்கியப்பா தெரு,
மயிலாப்பூர்,
சென்னை – 4
விலை ரூ. 160

You might also like