“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’’ என சினிமாவில் பாடினார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அந்தப் பாடல், அவரது நிஜ வாழ்க்கையில் இன்றளவும் எதிரொலிக்கிறது.
மறைந்து 35 ஆண்டுகள் கடந்து விட்டாலும், தமிழர்கள் உள்ளங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் எம்.ஜி.ஆரை நினைவு கூறாத நாட்களே இல்லை என சொல்லலாம்.
அண்மையில் வெளியான இரண்டு செய்திகளை, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.
தினத்தந்தி:
’எம்.ஜி.ஆரின் வில்லன் அசோகன்’ எனும் தலைப்பில், அசோகனின் பிறந்த நாளையொட்டி, கடந்த 20 ஆம் தேதி (20-05-2023) ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியான செய்தி இது:
“தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியவர் எஸ்.ஏ. அசோகன்.
ஒரு படப்பிடிப்புத் தளத்தில் அசோகன் நடித்துக் கொண்டிருந்தார்.
அதே இடத்தில் நடந்த இன்னொரு படத்தின் ஹூட்டிங்கில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார்.
இதனை கேள்விப்பட்ட அசோகன், அங்கு சென்று எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். அவரிடம், நான் உங்கள் தீவிர ரசிகன். உங்களைச் சந்திக்க வீட்டுக்கு வரலாமா? எனக் கேட்டார்.
எம்.ஜி.ஆரும் வீட்டுக்கு வாருங்கள் எனக் கூறினார். அசோகன் எம்.ஜி.ஆரை அவர் வீட்டில் சென்று சந்தித்தபோது, எம்.ஜி.ஆர். தீவிர உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அசோகன் வந்ததை அறிந்ததும் அவரை வரவழைத்தார்.
எம்.ஜி.ஆரின் கட்டுமஸ்தான உடலைப் பார்த்ததும் அசோகன் மெய் சிலிர்த்து விட்டார். இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அசோகனிடம் எம்.ஜி.ஆர்., ‘உங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் மூலம் தான் நன்றாக படங்களில் நடிக்க முடியும்’ என்று அறிவுரை கூறினார்.
பின்னர் அசோகன் தனது படங்களில் நடிப்பதற்கு உதவி செய்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் பேராசிரியர் பைரவனாக வாழ்ந்து காட்டி இருப்பார்.
அன்பே வா படத்தில் சரோஜாதேவியை திருமணம் செய்து கொள்ள முன்வருவார்.
சரோஜாதேவி எம்.ஜி.ஆரை காதலிக்கிறார் என தெரிந்ததும், பெருந்தன்மையுடன் அந்த ஜோடியை சேர்த்து வைக்கும் காட்சியில் பிரமாதமாக நடித்து அனைவரையும் உருக வைத்து விடுவார் அசோகன்.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான அசோகன், எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாக வைத்து ‘நேற்று இன்று நாளை’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்’’ என குறிப்பிட்டுள்ளது தினத்தந்தி.
தினமலர்:
27-05-2023 அன்று வெளியான தினமலர் சிறுவர் மலரில் ‘பிளாரன்ஸ்’ என்பவர் ‘இளஸ் மனஸ்!’ எனும் தலைப்பில் சிறுவர்கள் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
“பழைய தமிழ்த் திரைக் காவியங்களை தியேட்டர்களில் பார்க்க வாய்ப்பு இல்லை. அவற்றை பார்த்து ரசிக்க ஒரு வழி சொல்லுங்கள்’’ என மழலை கேட்ட கேள்விக்கு பிளாரன்ஸ் அளித்துள்ள பதில் இது:
‘பழைய தமிழ் படங்களில் நல்ல கதை அம்சமும், அர்த்தபூர்வ பாடல்களும், மக்களை நல்வழிப்படுத்தும் நீதி போதனைகளும் நிறைந்திருக்கும்.
கீழ்க்கண்ட படங்களை, பெற்றோர் அனுமதியுடன் ‘யூடியூப்’ மீடியாவில் வாரம் ஒரு படமாய் பார்க்கலாம்’ என குறிப்பிட்டுள்ள அவர், பார்க்க வேண்டிய எம்.ஜி.ஆர். படங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
அவை:
ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், அலிபாபாவும் 40 திருடர்களும், உலகம் சுற்றும் வாலிபன், ஒளிவிளக்கு, குலேபகாவலி, அடிமைப்பெண், குடியிருந்தகோவில் ஆகிய எம்.ஜி.ஆர் படங்களை சிறார்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
யூடியூபில் உள்ள எம்.ஜி.ஆர். படங்கள், சிறார்களுக்கு புதிய ஒளியைப் பாய்ச்சும் என நம்பலாம்.
-பி.எம்.எம்.