சேர நாடு வேழமுடைத்து; சோழ நாடு சோறுடைத்து; பாண்டிய நாடு முத்துடைத்து; தொண்டை நாடு சான்றோருடைத்து எனச் சிறப்பிக்கப்படுகிறதென்பது நாமெல்லாம் அறிந்ததே!
தமிழ்மொழி வரலாற்றில் கி.மு 500 முதல் கி.பி.200 வரை உள்ள காலக்கட்டத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலமே தமிழ்மொழியின் பொற்காலம் எனச் சிறப்பிக்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் எழுந்த இலக்கியங்களே சங்க இலக்கியங்கள் ஆகும்.
சங்க இலக்கியங்கள் என்று சிறப்பிக்கப்படுபவைப் பாட்டும் தொகையும். தமிழின் தொன்மைக்கும் தமிழினத்தின் பண்பாட்டு நாகரிக வளர்ச்சிக்கும் சங்க இலக்கியங்களே முதன்மையான ஆதாரங்கள்.
அகமும் (காதல்) புறமுமே (வீரம்) தமிழினத்தின் வாழ்வியல் கூறுகள் என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. அதை இப்படிக் கூடச் சொல்லலாம்,
“அந்தி சாய்ந்தால் கட்டிலில்
பொழுது விடிந்தால் போர்க்களத்தில் “
தமிழினத்தின் வாழ்வியலைச் (அகம், புறம்) சுவைபட விளக்கும் சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு என்பது பத்து சங்க நூல்களின் தொகுப்பு.
இப்பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படை நூல்களும், ஆறு புறத்திணைச் சார்ந்த நூல்களும் (ஆற்றுப்படை நூல்கள் ஐந்து + மதுரைக் காஞ்சி), இரண்டு அகத்திணைச் சார்ந்த நூல்களும், இரண்டு அகம் புறம் சார்ந்த நூல்களும் அமையப் பெற்றுள்ளன.
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்”
மேற்காண் நூற்பா ஆற்றுப்படைக்குத் தொல்காப்பியர் வகுக்கும் இலக்கணம்.
ஆற்றுப்படை என்பதற்குப் பரிசில் பெற்ற ஒருவர் பரிசில் பெற எதிர்வருவோரை வழிப்படுத்துதல் என்பது பொருள்.
பத்துப்பாட்டில் செம்பாதி ஆற்றுப்படை நூல்களே. திருமுருகாற்றுப்படை (புலவராற்றுப்படை), பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை).
இவ்வாற்றுப்படை நூல்களில் மலைபடுகடாம் என்பது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் எனும் சங்கப் புலவர், தொண்டை நாட்டில் வேள்குடி மரபில் வந்த பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 583 அடிகளில் பாடியச் சங்க நூலாகும்.
மலைபடுகடாம் என்ற சொல்லிற்கு மலையில் எழுந்த ஓசைகளின் தொகுப்பு என்பது பொருள்.
தொண்டை நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போதுள்ள செங்கம் எனும் சிற்றூரே சங்க காலத்தில் செங்கண்மா மூதூர் என்றழைக்கப்பட்டது.
செங்கண்மா மூதுரைத் தலைமையிடமாகக் கொண்டு நவிர மலையில் ஆட்சிப் புரிந்து வந்தவன் நன்னன் சேய் நன்னன் எனும் மன்னன்.நவிரமலை தற்போது ச(ஜ)வ்வாது மலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்நன்னன் சேய் நன்னனிடம் பரிசில் பெற்ற ஒருவர் பரிசில் பெற எதிரே வரும் கூத்தர்களை ஆற்றுப்படுத்துவதாக மலைபடுகடாம் அமைந்துள்ளமையால், இச்சங்கநூல் கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது.
இனி, நவிரம் நாவலுக்குள் வருவோம்.
சங்க நூலான மலைபடுகடாம் எனும் கூத்தராற்றுப்படையைத் தழுவி நம் ஆரணி மண்ணின் எழுத்தாளர் இளையதமிழன் அவர்கள் எழுதியதே நவிரம் எனும் இக்குறுநாவல்.
“முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி”
_ பனம்பாரனார்
(தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்)
இவ்வரிக்கேற்பத் தன் தொடர் வாசிப்பின் ஊடாக எழுத்தாளர் இளையதமிழன் அவர்கள் நவிரம் நாவலை எழுதியுள்ளாரென்பது, நாவலினை வாசிக்கையில் உணர முடிகிறது.
எழுத்தாளரின் கற்பனை வளத்தால் நவிர மலையே நனைந்து விட்டது எனலாம்.அப்படியானதொரு கற்பனை வளம்!
பதின்மூன்று அத்தியாயங்கள் கொண்ட இந்நாவலில் ஆற்றுப்படை எனும் அத்தியாயம் மட்டுமே மூல நூலான மலைபடுகடாம் எனும் சங்க நூலில் சொல்லப்பட்டக் கருத்துகளை அடியொற்றியதாக அமைகிறது.மீதமுள்ள பன்னிரு அத்தியாயங்களும் எழுத்தாளரின் கற்பனை நீரோட்டமே.
ஒவ்வொரு அத்தியாயங்களையும் விளக்கும் வகையிலான ஓவியங்கள் நாவலில் இடம்பெற்றுள்ளமை அழகியல்.
நவிரம் நாவலில் இடம்பெறும் கதை மாந்தர்களுக்கு ஆசிரியர் இளையதமிழன் அவர்கள் பெயர் சூட்டியுள்ள விதம் சிறப்புக்குரியது.
உதாரணம் : இருவாளன், அரப்பளி
*நன்னனிடம் பரிசில் பெற நவிர மலையில் பயணிக்கும் கூத்தர்கள் அம்மலைப்பாதைகளில் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை விளக்கும் மலைத்துன்பம் எனும் அத்தியாயத்தில் இந்நாவலின் கதைத் தொடங்குகிறது.
கூத்தர்கள் சுமந்து வரும் இசைக்கருவிகள் தமிழர் தம் பண்பாட்டுக் கூறுகளில் இசையின் இன்றியமையாமையை எடுத்துரைக்கின்றன.
மறுபக்கம் நவிர மலையில் நடைபெறவிருக்கும் காரி உண்டி விழாவிற்கு வருமாறு தன்னுடைய நண்பர் முதுவாணருக்கு ஒற்றன் மூலம் ஓலை அனுப்பும் அரசர் நன்னன் சேய் நன்னன். மன்னனின் ஆணையைச் சிரமேற்கொண்டுப் பயணமாகும் ஒற்றன்.
கூத்தர்களின் மலை வழிப் பயணத்தில் கொற்றவைப் போன்ற ஒரு பெண்ணின் காட்சி இடம்பெறுதல் குறிப்பிடத்தகுந்தது.
தமிழர் தம் திணை வாழ்க்கையில் பாலை நில ஆரணங்கு கொற்றவையை இக்காட்சி நினைவூட்டுகிறது.
ஒற்றன் தனக்கு வழங்கப்பட்ட ஆணையின் நிமித்தமானப் பயணத்தில் வழிப்போக்கர் மண்டபத்தில் ஓய்வெடுத்தல், அரசு ஒற்றனாக இல்லாமல் சாதாரண ஒருவனாக இருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகளைத் தன்னுடைய பயணத்தின் போது கவனித்தல்,
அரசர் நன்னன் சேய் நன்னனின் ஆட்சிக் குறித்து மக்களிடையே இருக்கும் கருத்துகளை அறிதல், பின் வாள் பயிற்சி ஆசான் மூலம் நாட்டில் பரவிய வதந்தியை அறிதல்,
பரிசில் பெற எதிர்வரும் கூத்தர்கள் மீது ஒற்றனுக்கு எழும் ஐயம் ஆகியவை நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் எடுத்துரைக்கப்படுகின்றன.
கூத்தர்களின் மலை வழிப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கையில், கூத்தர்களுக்கு மலை வாழ் மக்கள் செய்த உதவிகள், விருந்தோம்பல், நடுகல் வழிபாடு குறித்தச் செய்திகள்,
அடர்ந்த காட்டு வழிப் பாதைக் குறித்த வர்ணனைகள், கூத்தர்கள் நவிர மலையை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் நன்னனிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய புலவரொருவரால் ஆற்றுப்படுத்தப்பட்டு, நவிர மலையிலுள்ள நன்னன் சேய் நன்னனின் அரண்மனையை அடைகின்றனர்.
அதே சமயம் தன் பணியை முடித்து ஒற்றனும் அரண்மனை வந்து விடுகிறான்.
அரண்மனை வந்த கூத்தர்கள் கொண்டு வந்த அரசு அந்தரங்கச் செய்தி, தன் பணியை முடித்து அரண்மனை திரும்பிய ஒற்றன் கொண்டு வந்த செய்தி என இவ்விரண்டுமே கதைக்குத் திருப்புமுனையாக அமைகிறது.
அரண்மனை வந்த ஒற்றன் செய்தது என்ன? நன்னனிடம் கூத்தர்கள் பரிசில் பெற்றார்களா? நாவலின் இறுதியில் விளக்கப்படுகின்றன.
ஆகா, மலைபடுகடாமைக் கதைக் களமாகக் கொண்டு, கற்பனை நடையிலமைந்த இந்நவிரம் எனும் குறுநாவல் வெறும் கற்பனை வர்ணனைகள் நிரம்பியதாக மட்டுமன்றி, சங்கக் காலத் தமிழர் தம் பண்பாட்டுப் பழக்கவழக்கக் கூறுகளை விளக்கும் நவீனத்தில் ஒரு சங்க நூலாகத் திகழ்கிறது.
எழுத்தாளருக்கு வாழ்த்துகள்!
எழுத்தாளர் இளையதமிழன்
வெளியீடு : சுவடு பதிப்பகம்
கவிஞர். ஜா.பாலாஜி,
ஆரணி.