பாலகுமாரன்: திரையுலகம் தவறவிட்ட படைப்பாளி!

எழுத்தாளர் பாலகுமாரனின் நாவல்கள் வாசித்திருக்கிறேன். அவர் வசனம் எழுதிய திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன்.

நாவலுக்கும் திரைக்கதைக்குமான செய்திறனை நன்றாக அறிந்த எழுத்தாளர் என்றால் அவர் பாலகுமாரன்தான்.

அவரது நாவலின் முத்திரை திரைப்பட வசனங்களிலும் இருக்கும். ஆனால் தனியாக உறுத்திக் கொண்டு நிற்காது என்று பாலகுமாரனின் நினைவுகளை முகநூலில் பகிர்ந்துள்ளார் எழுத்தாளர் ஜா. தீபா.

தீபா

‘உல்லாசம்’ படத்தில் அஜித் ஒரு போட்டியில் ஜெயிக்க வேண்டுமென அவர் காலில் எரிகிற சிகரெட்டைப் போட்டு மிதிப்பார் ரகுவரன். அஜித் ஜெயித்துவிடுவார்.

“ஏன் அப்படி பண்ணீங்க.. வலிக்குதுல்ல” என்றவுடன் “வலிச்சா ஜெயிக்கறல்ல.. வலி தாங்கிப் பழகு” என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போவார் ரகுவரன்.

இந்த வரிகளை அவர் பல்வேறு நாவல்களில் வெவ்வேறு விதமாக பயன்படுத்தியிருக்கிறார்.

ஆனால் திரைப்பட வசனமாக வரும்போது நீட்டிமுழக்காமல் தெறிக்கவிடுவது போல சொல்ல அவருக்குத் தெரியும்.

“அபிராமி அந்தாதி நூறு பாட்டு கத்துகிட்டேல்ல.. அபிராமிக்கு லெட்டர் எழுதனுங்கற..ஏன் எழுதக் கத்துக்கக்கூடாது”

“அபிராமி உள்ள இருக்கு.. எழுத்தெல்லாம் வெளில இருக்கு”

இதில் அபிராமி உள்ள இருக்கா என்பதாக இல்லாமல் உள்ள இருக்கு…என்பது திட்டமிட்டு எழுதப்பட்டதாகவே நினைக்கிறேன்.

“நீ மறுபடியும் கார் திருடினியா?”

“இல்ல.. கதவ மாத்திரம் திறந்து விட்டேன்”

குணா படத்தினை ஒவ்வொரு முறையும் பார்க்கையில் பாலகுமாரனின் மேல் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்துக்கு வசனம் எழுதுவதே ஒரு கஷ்டம்.

புத்திசாலித்தனமான, பிடிவாதமான மனநல பாதிப்பு உள்ள ஒருவருக்கு எழுதுவதென்பது கயிற்றுக்கு மேல் நடப்பதற்கு சமமானது.

கொஞ்சம் கூடினாலும் குறைந்தாலும் கதாபாத்திரத்தின் மீதான நம்பகத்தன்மை போய்விடும்.

“கண்மணி அன்போட காதலன்… நாக்கு தடிச்சு போச்சா?” என்று தொடர்பில்லாமல் அதே நேரம் தொடர்போடும் பேச வேண்டும்.

மற்றொன்றும் என் அனுமானம். ஒரு நடிகருக்கு முக்கியமானது எந்த இடத்தில் வசனத்துக்கு இடைவெளி விடவேண்டும் என்பது.

ஒருவருக்கு பதில் கூறும் முன்பு இடைவெளி விடுகிறார் என்றால் நாம் என்ன சொல்லப் போகிறார் என்று கூர்ந்து கவனிப்போம். அப்படி இடைவெளிக்குப் பின் சொல்லப்போகிற வசனம் கூர்மையாக வலிமையாக இருக்க வேண்டும்.

பாலகுமாரனின் வசனங்களை சரியாக புரிந்து கொண்டு பேசிய நடிகர்களாக கமல், ரகுவரன், ரஜினியை சொல்ல முடியும். சில நேரங்களில் வசனத்துக்கு பதிலாக சிறு உடலசைவில் வெளிப்படுத்தி விட முடியும்.

“இது தீப்பெட்டி.. கீழே போட்டா கீழே விழும்.. நீயும் அப்படித் தான் சாதாரண மனுஷன்.. உன்னால மேலே பறக்கவே முடியாது” என்றதும் குணா அதே தீப்பெட்டியில் இருந்து தீக்குச்சியை உரசுவார்.. நெருப்பு மேலே எழும்..” இது தான் நான் என்பதை சைகையில் காட்டுவார்.

“தீப்பெட்டி கீழ விழும்.. ஆனா அதே தீப்பட்டியில் உரசின தீக்குச்சியோட நெருப்பு மேலே எழுந்து நிக்கும்.. நான் நெருப்புடா” என்று பக்கம் பக்கமாகப் பேசியிருந்தால் அந்தக் காட்சி இப்போது வரை நினைவில் நின்றிருக்காது.

ஒருமுறை மட்டுமே பாலகுமாரன் அவர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன்.

தன்னை கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டால் மட்டுமே அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் வரும் என்றார்.

அப்படியெனில் அவர் குணா கதாபாத்திரத்துக்கு எழுதும்போது எப்படியான மனநிலையில் இருந்திருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

வெகுஜன இலக்கியமும், தீவிர இலக்கியமும் அவரைத் தவறவிட்டதைவிட திரைப்பட உலகம் அவரை நிச்சயம் இழந்துவிட்டது.

அந்த வெறுமையை இன்னும் எந்த எழுத்தாளரும் நிரப்பவில்லை என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்லமுடியும்.

You might also like