நடைமுறை விவகாரங்களை எழுதுவதில் உள்ள சிக்கல்!

– எழுத்தாளர் புதுமைப்பித்தன்

எழுத்தாளர்கள் புரியாத நடையில் எழுதுவது பற்றிச் சிலர் குறை கூறிக் கொண்டிருக்கும் சூழலில், எழுத்தாளர் புதுமைப்பித்தனிடம் இதே கேள்வி அன்றைக்கு கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு அவர் அளித்துள்ள பதில்….

“என் கதைகளின் தராதரத்தைப் பற்றி ‘எரிந்த கட்சி’, ‘எரியாத கட்சி’ ஆடுகிறார்கள்.
அதற்குக் காரணம், பலர் இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும். இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம்.

உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒரு விதமான சீலைப் பேன் வாழ்வு நடத்திவிட்டோம் சில விஷயங்களை நேர்நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம்.

அதனால்தான் இப்படிச் சக்கர வட்டமாகச் சுற்றி வளைத்துப் சப்பைக்கட்டு கட்டுகிறோம்.

குரூரமே அவதாரமான ராவணனையும் ரத்தக் களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால்,
ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப் போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப் போகிறதா?

மேலும், இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் –
இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்திரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர்முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை.
நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை.

கருத்தின் வேகத்தையே பிரதானமாகக்கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் கொண்டு, தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன்.

அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை, அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது. அதை கையாண்ட நானும் கல்வி கற்றதன் விளைவாக பாஷைக்குப் புதிது.

இதனால் பலர் நான் என்ன எழுதுகிறேன் என்பது பற்றிக் குழம்பினார்கள்.
சிலர் நீங்கள் எழுதுவது பொது ஜனங்களுக்குப் புரியாது என்று சொல்லி அனுதாபப்பட்டார்கள்.

அந்த முறையை நானும் சிறிது காலத்திற்குப் பிறகு கைவிட்டு விட்டேன்.
காரணம், அது சௌகரியக் குறையுள்ள சாதனம் என்பதற்காக அல்ல, எனக்குப் பல முறைகளில் கதைகளைப் பின்னிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் அதைக் கைவிட்டு வேறு வழிகளைப் பின் பற்றினேன். “

‘என் கதைகளும் நானும்’- கட்டுரையில் புதுமைப்பித்தன்.

You might also like