தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியம்!

தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று நடிகர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மையமாக விளங்குகிறது.

ஆல்போல் தழைத்து நிற்கும் சங்கத்தை 1952 இல் முதன்முதலில் நிறுவியவர்களில் முக்கியமானவர் இயக்குனர் கே.சுப்பிரமணியம்.

1904 ஏப்ரல் 20 ஆம் நாள் அவர் பிறந்தார். இன்று அவருக்கு 118 வது பிறந்தநாள். கே.சுப்பிரமணியத்தின் சினிமா வாழ்க்கை பல ஆச்சரியங்களை கொண்டது. பல விஷயங்களில் அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார்.

அந்நாளில் நஷ்டத்தில் இயங்கிய அசோஸியேட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கே.பி.வெங்கடராம அய்யர் என்பவர் ஏற்று நடத்திய போது, கும்பகோணத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி சுப்பிரமணியத்தை உதவிக்கு வைத்துக் கொண்டார்.

வழக்கறிஞரான அவரும் சினிமா மீதிருந்த ஈடுபாட்டால் வக்கீல் தொழிலைவிட்டு சினிமாவுக்கு வந்தார்.

அவர்தான் பிற்காலத்தில் இயக்குனராக புகழ்பெற்ற கே.சுப்பிரமணியம். இவரது தந்தை சி.எஸ்.கிருஷ்ணசாமி, தாய் வெங்கலட்சுமி.

கே.பி.வெங்கடராம அய்யரின் தயாரிப்பு நிறுவனத்தைப் பார்த்து வந்த கே.சுப்பிரமணியம் பிறகு அவரது மகள் மீனாட்சியை திருமணம் செய்து தயாரிப்பு நிறுவனத்தின் மொத்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

ராஜா சான்டோவை மும்பையிலிருந்து அழைத்து வந்து அனாதைப் பெண், பேயும் பெண்ணும், உஷா சுந்தரி போன்ற மௌனப்படங்களை தயாரித்தார்.

இந்தப் படங்களில் கே.சுப்பிரமணியம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இயக்கத்தின் நுட்பங்களை கற்றுக் கொண்டார்.

1934 இல் பவளக்கொடி திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை கே.சுப்பிரமணியம் அறிமுகப்படுத்தினார்.

நாடகங்களின் வழியாக அறிமுகமான நடிகையும், பாடகியுமான எஸ்.டி.சுப்புலட்சுமியையும் இந்தப் படத்தில் கே.சுப்பிரமணியம் அறிமுகப்படுத்தினார்.

பவளக்கொடி வெளிவந்த போது எஸ்.டி.சுப்புலட்சுமியை தனது முதல் மனைவியின் அனுமதியுடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

பவளக்கொடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து சாரங்கதாரா படத்தை எடுத்தார். அதுவும் வெற்றி. பணம் புரண்டது.

அதை வைத்து மனைவி எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் இணைந்து மெட்ராஸ் யுனைட்டெட் ஆர்டிஸ்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நவின சதாரம், பாலயோகினி, பக்த குசேலா, மிஸ்டர் அம்மாஞ்சி, கௌசல்யா கல்யாணம் ஆகிய படங்களை எடுத்தார்.

1938 இல் இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியை ஸேவாஸதனம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்.டி.சுப்புலட்சுமி. அவரது தோழியின் மகள்தான் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

கும்பகோணம் மகாமக திருவிழாவின் போது நடந்த கச்சேரியில், கே.சுப்பிரமணியத்துடன் இருந்த நட்பைப் பயன்படுத்தி 1932 இல் எம்.எஸ்.சுப்புலட்சுமியை மேடையில் கச்சேரி செய்ய வைத்ததும் எஸ்.டி.சுப்புலட்சுமிதான்.

அதுதான் அவரது முதல் மேடைக் கச்சேரி. பிறகு 1938 இல் அவர் சினிமாவில் அறிமுகமாகவும் காரணமாக இருந்தார்.

சினிமா குறித்த அறிமுகம் இல்லாதிருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு எஸ்.டி.சுப்புலட்சுமியே வழிகாட்டியாகவும் இருந்தார்.

எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகியை அவரது 13 வது வயதில் தனது இன்பசாகரன் படத்தில் அறிமுகப்படுத்தினார் கே.சுப்பிரமணியம். ஆனால், எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது ஸ்டுடியோ முற்றிலும் எரிந்து சாம்பலானது.

அதோடு இன்பசாகரன் படத்தின் பிலிமும் கருகி சாம்பலாயின. நஷ்டம் காரணமாக ஸ்டுடியோவை ஏலம்விட, எஸ்.எஸ்.வாசன் அதனை வாங்கி புனரமைத்து மூவிலேண்ட் ஜெமினி ஸ்டுடியோவை ஆரம்பித்தார்.

கல்கி எழுதி ஆனந்த விகடனில் தொடராக வந்த தியாக பூமியை கே.சுப்பிரமணியம்தான் சினிமாவாக எடுத்தார். காங்கிரஸ் பிரச்சாரப் படம் என்று பிரிட்டிஷ் அரசு படத்தை தடை செய்தது. தமிழ்நாட்டில் அரசால் முதன்முதலில் தடை செய்யப்பட்ட படம் இதுவாகும்.

பின்னாளில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம்வந்த டி.ஆர்.ராஜகுமாரியை கச்ச தேவயானி படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரும் இவரே. 1952 இல் தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்கப்பட இவரே காரணமாக இருந்தார்.

அதேபோல் தென்னிந்திய பிலிம் சேம்பரை உருவாக்கியவரும் இவரே. இவரது முதல் மனைவி மீனாட்சிக்கு பிறந்தவர்கள் எட்டு பேர். அதில் ஒருவர்தான் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம். இரண்டாவது மனைவி எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு பிறந்தவர், அபஸ்வரம் ராம்ஜி.

தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனைகள் படைத்த கே.சுப்பிரமணியம் 1971 ஏப்ரல் 7 ஆம் நாள் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கில் சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்ட அனைத்து திரையுலக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

ஆரம்பகால தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முன்னோடி கே.சுப்பிரமணியம்.

நன்றி: நியூஸ்-18 தமிழ்

You might also like