நூல் அறிமுகம் :
ஆறு மாதகால அலசல் – 2022 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான கல்விச் சூவலையைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக தமிழக கல்விச் சூழல் நூல் சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
தமிழ்நாட்டின் கல்விச்சூழலில் நிகழும் மாற்றங்கள், நிலவும் சி்ககல்கள் மற்றும் குழப்பங்கள் குறித்தும் அனைவருக்குமான கல்வி உரிமை குறித்தும் தொடர்ந்து குரல் எழுப்பிவரும் ஆசிரியர் உமா மகேஸ்வரி, பல்வேறு ஊடகங்களிலும் தமிழக கல்விச் சூழல் குறித்தான கருத்துகளைப் பகிர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்தக் கல்வியாண்டின் தொடக்கமான ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு” என்கிறது நூலின் பதிப்புரை.
வளமான வகுப்பறைகள் வசப்படட்டும் என்ற தலைப்பிலான முதல் கட்டுரை தொடங்கி, அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள் வரையில் 26 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கல்விக்கொள்கை குறித்தும், கல்விச்சூழல் குறித்தும் அனைவரும் தெளிவாக உணர்ந்துகொள்ளும் வகையில், உமாமகேஸ்வரி இந்நூலை எழுதியுள்ளார்.
பள்ளிக்கல்வி எதிர்கொள்ளும் அனைத்துச் சிக்கல்கள் குறித்தும் இச்சிறுநூல் பேசுகிறது.
ஆசிரியர்கள் பற்றாக்குறையிலிருந்து மாணவிகளின் பெருந்துயரம் வரை எத்தனையோ சிக்கல்களை இந்நூல் பேசுகிறது என்று சுட்டிக்காட்டுகிறார் அணிந்துரையில் பேராசிரியர் யோகராஜன் கந்தசாமி.
கல்வியாளர் ஆயிஷா இரா. நடராஜன், “பள்ளிகளில் மாணவர் – ஆசிரியர் பார்வையை உள்வாங்கிக்கொண்டு களத்தில் என்ன நடக்கிறது என்பதை ஒரு கல்வியாளரின் பார்வையில் விவரிக்கும் தோழர் உமாவின் பாங்கு பாராட்டத்தக்கது. அவர் இந்த நூலில் பள்ளிக்கல்வி குறித்து மட்டுமே எழுதவில்லை.
உயர்கல்வித்துறைச் சிக்கல்கள் ஆட்சிப் பணயில் அருகிவரும் தமிழர்கள் வாசிப்பு இயக்கம் இவற்றோடு பெண்களின் பாதுகாப்பு உட்பட பிற அம்சங்களையும் அவரது கட்டுரைகள் விரிவாக அலசுகின்றன” என்று குறிப்பிடுகிறார்.
முதல் கட்டுரையிலேயே நூலாசிரியர் சாட்டையைச் சுழற்றுகிறார்: “தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம் இருந்தால்தான் எல்லா குழந்தைகளும் தரமான கல்வியை, சமமாகப் பெறுவார்கள். ஆசிரியர் பற்றாக்குறைகளால் நிரம்பிவழிகின்றன அரசுப் பள்ளிகள்.
இந்த நிலை மாறவேண்டும். வகுப்பறைகள் எப்போதும் உரையாடல் இல்லாத அதிகார மையங்களாக இல்லாமல், உரையாடலுடன் கூடிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய குழந்தைகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய தளங்களாக மாறவேண்டும்.
திறன் சார்ந்த வகுப்பறைகளைத் திட்டமிடும் அரசு, உளவியல் சார்ந்த வகுப்பறைகளையும் திட்டமிடவேண்டும். ஆசிரியர் – மாணவர் உறவிற்குப் பள்ளிகள் முக்கியத்துவம் தரவேண்டும்.
பாடப் புத்தகங்கள் தாண்டிய வாசிப்பு அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய நிலைக்கு ஆசிரியர்கள் தங்களை உயர்த்திக்கொள்ளவேண்டும்.
அதற்காக அவர்களும் நல்ல நூல்களைத் தேடி வாசிக்கவேண்டும். அப்போதுதான், அறம் சார்ந்த வழியில் இந்தச் சமூகத்தைக் கட்டியமைக்கும் எதிர்காலச் சந்ததியை ஆசிரியர்களால் உருவாக்க இயலும்” என்கிறார்.
வாசிப்பு இயக்கத்தை ஆதரிக்கும் உமாமகேஸ்வரி, “பெரும்பாலும் பள்ளி நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை மாணவர்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டார்கள்.
அப்படிக் கொடுத்து அனுப்பினால், மாணவர்கள் தொலைத்துவிடுவார்கள் என்பதாலேயே பூட்டி வைத்திருப்பார்கள்.
அந்தச் சிந்தனையை உடைக்கும் விதமாக நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்துச் செல்லும் மாணவர்கள் அவற்றைத் தொலைத்துவிட்டால் ஒரு மாற்றையும் வைத்துள்ளார்கள்.
அந்த மாணவனின் பெற்றோரிடம் பள்ளி நூலகத்திற்குப் புதிதாக ஒரு புத்தகத்தை வாங்கித்தருமாறு கோரலாம்” என்று ஐடியா தருகிறார்.
***
தமிழக கல்விச் சூழல்: உமாமகேஸ்வரி
வெளியீடு: சுவடு பதிப்பகம்,
7 ஏ ரெங்கநாதன் தெரு,
சேலையூர்,
தாம்பரம், சென்னை – 73
விலை – ரூ.130
தொடர்புக்கு: 9791916936