– ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ்
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ், அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய-இந்தியா கல்வி உறவு திட்டத்தில் உரையாற்றினார்.
இந்த உரையில், ”இரு தரப்பு கல்வி உறவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளோம் என்பதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் கூறுவேன். ஆஸ்திரேலியாவுடன், இந்தியா மேற்கொண்ட மிக விரிவான மற்றும் லட்சிய ஏற்பாடு இதுவாகும்.
இதன்மூலம் நீங்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கும் அல்லது படித்த இந்திய மாணவராக இருந்தால், உங்களது கல்லூரிப்பட்டம் இந்தியா திரும்பியதும் அங்கீகரிக்கப்படும். நீங்கள் ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களில் உறுப்பினராக இருந்தால் உங்கள் இந்தியர் என்ற தகுதி ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படும் என்பதை அதிக நம்பிக்கையுடன் உணருவீர்கள்.
மேலும் இந்த திட்டத்தின்மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு, இந்திய மாணவர்களுக்கு புதுமையான மற்றும் அணுகக்கூடிய கல்வியை வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது” எனக் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு புதிய உதவித்தொகையையும் அவர் அறிவித்தார்.
இந்த உதவித்தொகையானது ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கலாச்சார, கல்வி மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்தும் விரிவான மைத்ரி திட்டத்தின் ஒரு பகுதியாகும், என்று அல்பானீஸ் கூறினார்.