தயாள குணம் கொண்ட எம்.கே.தியாகராஜ பாகவதர்!

* தன் வசீகரக் குரலால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர், ‘எம்.கே.டி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம் இன்று (மார்ச் 1).

* மாயவரத்தில் (1910) பிறந்தவர். தந்தை கிருஷ்ணமூர்த்தி. இவரது சிறு வயதிலேயே குடும்பம் திருச்சியில் குடியேறியது. இவருக்கு இசையில்தான் ஆர்வம் அதிகம் இருந்தது.

* 10 வயதில் திருச்சி ரசிக ரஞ்சன சபாவில் அரிச்சந்திரன் நாடகத்தில் நடித்தார். இவரது குரல் வளத்தைக் கண்ட வயலின் வித்வான் மதுரை பொன்னு ஐயங்கார், இவருக்கு கர்நாடக இசை கற்றுத் தந்தார். நாடக ஆசான் நடராஜ வாத்தியாரிடம் நடிப்புப் பயிற்சி பெற்றார்.

* 6 ஆண்டுக்குப் பிறகு, எம்.கே.டி.யின் மேடைக் கச்சேரி அரங்கேறியது. 4 மணி நேரம் நடந்த அந்த கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது.

‘‘தியாகராஜன் ஒரு பாகவதர்’’ என்று விழாவில் மிருதங்க வித்வான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார். அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்துகொண்டது.

* 1926-ல் திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக நடித்தார். 1934-ல் இந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக வந்தது.

படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார். படம் 9 மாதங்கள் ஓடியது. இதையடுத்து, தமிழ்த் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.

* இவரது வெற்றிப் பயணத்தில் 1944-ல் ஒரு தடங்கல் ஏற்பட்டது. லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலை வழக்கில் எம்.கே.டி.க்கும் அவரது நண்பர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

* நீண்ட விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். 1948-ல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனாலும், இவரது பாடல்கள் பிரபலமடைந்தன.

* எம்.கே.டி. மனித நேயம், தயாள குணம் கொண்டவர். மற்றவர்களின் உதவியை விரும்பாத அவர், வாழ்க்கையின் நெருக்கடிகளை கம்பீரமாக எதிர்கொண்டார்.

* அவரது பாடல்கள், பாமரர்களும் ரசிக்கும் விதமாக இருந்தன. பல கோடி மக்களின் இதயங்களில் அப்பாடல்கள் இன்னமும் எதிரொலிக்கின்றன. இவரது சிகையலங்காரம் ‘பாகவதர் கிராப்’ என்று புகழ்பெற்றது.

* தமிழ்த் திரையுலகின் முதல் ‘சூப்பர் ஸ்டாராக’ பாகவதர் கருதப்படுகிறார். 1944-ல் வெளிவந்த இவரது ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, ‘3 தீபாவளி கண்ட திரைப்படம்’ என்ற சாதனையைப் படைத்தது.

* தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர், ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் 49 வயதில் உடல்நலக் குறைவால் (1959) மறைந்தார்.

You might also like