இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் பெண்கள் எப்படி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் விதமாக ‘உன் தோழி’ என்ற தலைப்பில் கலைஞர் தொலைக்காட்சி சார்பில் மகளிர் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சைபர் க்ரைம் கூடுதல் காவல்துறை ஆணையர் ஷாஜிதா, தன்னம்பிக்கை பேச்சாளரும், நடிகருமான ஈரோடு மகேஷ், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர், வழக்கறிஞர், முனைவர் குமார் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்ற, கல்லூரி முதல்வர் முனைவர் மணிமேகலை சிறப்புரை ஆற்றினார்.
வரவேற்புரையுடன், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக் காலத்தில் மாணவிகள் எப்படி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதையும் விளக்கமாக எடுத்துக் கூறினார் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன்.
அப்போது பேசிய அவர், இன்றைக்கு பெரும்பாலானவர்களின் கைகளுக்கு போய் சேர்ந்திருக்கிற தொழில்நுட்பக் கருவியான செல்போனின் பயன்பாடு எந்தளவுக்கு அதிகரித்திருக்கிறதோ அந்த அளவுக்கு சைபர் குற்றங்களும் அதிகரித்திருக்கின்றன.
ஆண்டு ஒன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைபர் க்ரைம் குற்றங்கள் இந்தியாவில் மட்டும் பதிவாகியிருக்கின்றன என்பதை கவனித்தாலே சைபர் க்ரைமின் தீவிரத்தை நாம் உணர முடியும்.
செல்போன்களை பெரும்பாலும் வங்கிகளுடன் நாம் இணைத்திருப்பதால் அதை ஒட்டிய மோசடிகளும் நூதனத் திருட்டுகளும் அதிகப்பட்டிருக்கின்றன.
எங்கோ ஒரு நாட்டில் இருந்து கொண்டு செல்போன் வழியே நாம் சேமித்தப் பணத்தை யாரோ திருட முடிகிறது.
சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் 12-வது இடத்தில் இருக்கின்றது.
கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளும் ஏன், பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்கும் மாணவர்களும் கூட நாள் ஒன்றுக்கு 8-லிருந்து 12 மணி நேரம் வரை செல்போனில் செலவழிக்கிறார்கள்.
செல்போன்களில் ஆதிக்கம் பலருடைய பார்வைத் திறனை குறைத்திருக்கிறது. அதனைக் கையாள்பவர்களை தன்னுடைய அடிமையைப் போல மாற்றியிருக்கிறது.
அதை தடுக்கிற பெற்றோரை எதிரியாக பார்க்க கூடிய அளவிற்கு வந்துவிட்டார்கள் நம்முடைய மாணவ மாணவிகள்.
இதைவிட செல்போன் பயன்படுத்தும் மாணவிகளின் நிலைமை இன்னும் பரிதாபம். அவர்களுடைய “ப்ரைவஸி” காணாமல் போய்விடுகிறது.
எங்கேயோ இருந்து அவர்களுடைய செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.
அல்லது ஒட்டுக்கேட்கப்படுகின்றன.
அப்படி பதிவாகும் காட்சிகள் மூலம் சில கிரிமினல்கள் அவர்களை ப்ளாக்மெயில் செய்யும் அளவுக்கு இன்றைய நவீன தொழில்நுட்ப முகம் மாறியிருக்கிறது.
மற்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவியைவிட செல்போனை அதிகமாக பயன்படுத்தும் மாணவிகள் மிகமிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது.
அதற்காக செல்போன் பயன்பாட்டையே நாம் தவிர்த்துவிட முடியாது. அதை எப்படிப் பாதுகாப்பாக கையாள்கிறோம் என்பது தான் மிக மிக முக்கியம் என்றார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் மணிமேகலை மாணவிகள் தன்னம்பிக்கையோடு இருப்பதுடம் மிகவும் எச்சரிக்கையோடு இருப்பது தான் மிக முக்கியம் என்றார்.
சிறப்பு விருந்தினரான ஷாஜிதா, சைபர் க்ரைம் குற்றங்கள் எதனால் அதிகரிக்கிறது என்பது பற்றியும், அதை மாணவிகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மனிதன் பிறக்கும்போதே குற்றங்கள் பிறந்து விட்டதாகக் கூறிய அவர், தொழில்நுட்ப வளர்ச்சியோடே சேர்ந்தே சைபர் குற்றங்களும் வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறினார்.
காவல்துறையில் இருப்பதால் அவர் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்து விளக்கமாகக் கூறிய அவர், இன்றைய கால கட்டத்தில் மாணவிகள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கல்வியாளரும் சிறந்த பேச்சாளருமான ஜெயப்பிரகாஷ் காந்தி, மாணவிகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து சில உதாரணங்களோடு நகைச்சுவையுடன் எடுத்துரைத்தார்.
உலகில் 36 சதவிகித வேலைகள் நேரடியாக மனிதர்களின்றி ஆன்லைனில் நடைபெறுவதாகவும், 81 சதவிகிதம் பேர் படித்த படிப்புக்கு தொடர்பில்லாத வேலையில் இருப்பதாகவும் கூறினார்.
அடுத்ததாகப் பேசிய ஈரோடு மகேஷ் பெண்களின் மேம்பாடு குறித்துப் பேசினார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்ரிபாய் பூலே குறித்துப் பேசிய ஈரோடு மகேஷ், சாவித்ரிபாய் பூலேவை பெண்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் எத்தனைத் தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இன்றைய இளம் தலைமுறையினர் தவறான பாதைக்கு எளிதான சூழல் இருப்பதால் பெற்றோரின் துணையோடு, அவர்களுடைய அரவணைப்போடு இருப்பதுதான் பாதுகாப்பானது என்றும் மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதோடு, நேதாஜியின் தேசிய ராணுவப் படையில் இருந்த கேப்டன் லட்சுமி பற்றியும், 87 வயதிலும் கலாமை எதிர்த்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மன உறுதி பற்றியும் உதாரணம் கூறிய அவர், கேப்டன் லட்சுமி போன்ற அறியப்படாத பெண் ஆளுமைகளைப் பற்றியும் நேர்த்தியாக எடுத்துரைத்தார்.