சாதி மறுப்பு திருமணம் செய்த சரோஜினி!

சரோஜினி நாயுடு 1879 பிப்ரவரி 13 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார். மிகவும் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் பாடலாசிரியராக இவரை அனைவருக்கும் அடையாளம் காட்டியது இந்திய சுதந்திர போராட்ட களம்தான்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் போது சரோஜினி நாயுடு, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். அதன்பின் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியுடன் இணைந்து உப்புச் சத்தியாகிரகப் போராட்டமான தண்டி யாத்திரையில் ஈடுபட்டார்.

இப்படியான வரலாற்றுகுச் சொந்தக்காரரான சரோஜினி நாயுடு இந்தியாவின் நைட்டிங்கேல் என்று கூறப்பட்டார்.

சரோஜினி நாயுடு குழந்தைகளுக்காக தேசபக்தி, காதல் உள்ளிட்ட உணர்வுகளை உள்ளடுக்கும் வகைகளில் கவிதைகள் எழுதியுள்ளார்.

நாட்டில் பலரால் விரும்பப்பட்ட மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் இருந்துள்ளார்.

தன் உணர்வுகளை கவிதைகள் மூலம் வெளிப்படுத்தி 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரானார்.

சரோஜினி நாயுடு இலக்கியத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கியபோது அவருக்கு 12 வயது.

அவர் “மஹேர் முனீர்” என்ற நாடகத்தை எழுதி பாராட்டு பெற்றார். உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இதற்காக சரோஜினியை பாராட்டத் தொடங்கினர்.

சரோஜினி நாயுடு தனது 16-வது வயதில் ஹைதராபாத் நிஜாமிடம் உதவித்தொகை பெற்று லண்டன் கிங்ஸ் கல்லூரிக்குச் சென்று படித்தார்.

கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போது முத்யாலா கோவிந்தராஜூலு என்ற மருத்துவரை இரண்டு வருடங்களாக காதலித்து, தனது 19ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் சாதி மறுப்பு திருமணம் ஆகும். அந்த காலத்தில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது சவாலான விஷயம்.

ஆனால், இந்த திருமணம் சரோஜினியின் தந்தையின் சம்மதத்தோடு சென்னையில் உள்ள அவரது நண்பரின் உதவியோடு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் முன்னேற்றமும் சரோஜினியும்

சரோஜினி தனது கல்வி மூலம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த காலத்தில் இந்தியாவில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.

சரோஜினி கல்வி பெறவும் சாதனைகள் படைக்கவும் அவரது தந்தை உட்பட பல்வேறு நபர்கள் உறுதுணையாக இருந்தனர்.

ஆனால் நாட்டில் கோடிக்கணக்கான பெண்கள் அடிமைப் பட்டுக்கிடப்பதைக் கண்டு சரோஜினி மிகுந்த கோபத்துடன் வெகுண்டெழுந்தார். இந்தியப் பெண்களை சமையலறையில் இருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களை விழித்தெழச் செய்யக்கூடிய பணிகளை தொடர்ந்து செய்தார்.

பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கக் கோரி, நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

முதல் பெண் ஆளுநர்

இந்தியாவிற்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தப் பின்னர், சரோஜினி நாயுடு, உத்தர பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதனால் ‘சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்’ என்ற பெருமைக்குச் சொந்தகாரரானார்.

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • நன்றி : ஏபிபி இதழ்
You might also like