தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர், சிறந்த இதழியலாளரான ‘சாவி’யின் (சா.விஸ்வநாதன் – Sa.Viswanathan) நினைவுநாள் இன்று (பிப்ரவரி-09). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் (1916) பிறந்தார். 4-ம் வகுப்பு வரைதான் படித்தார். சிறிது காலம் விளம்பரப் பலகை எழுதிவந்தார்.
எழுத்தாளராக வேண்டும் என்பது இவரது கனவு. அதை நிஜமாக்கிக்கொள்ள, கடுமையாக உழைத்தார்.
* தன் ஊரில் இருந்துகொண்டே ‘விடாக்கண்டர்’ என்ற பெயரில் எழுதிவந்தார். பின்னர் ‘கல்கி’ ஆசிரியர் சதாசிவம் இவரை அழைத்து, உதவி ஆசிரியராக நியமித்தார்.
காந்திஜியின் நவகாளி யாத்திரைக்கு நேரில் சென்று கண்டு, அதுகுறித்து எழுதினார்.
தந்தை சாமா சுப்ரமணியன் மற்றும் தனது பெயரின் முதல் எழுத்துகளை இணைத்து ‘சாவி’ என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டார்.
* தொடர்ந்து கல்கியில் இவர் எழுதிய ‘மாறுவேஷத்தில் மந்திரி’, ‘சூயஸ் கால்வாயின் கதை’ உள்ளிட்ட நகைச்சுவைக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
பின்னர் ‘ஆனந்த விகடன்’ இதழ் ஆசிரியராகி, ‘வாஷிங்டனில் திருமணம்’ என்ற நகைச்சுவைத் தொடரை எழுதினார். இது இவருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது.
* இவரது பல படைப்புகள் பிரபலமாயின. ‘வெள்ளிமணி’, ‘சாவி’, ‘பூவாளி, ‘திசைகள்’, ‘மோனா’ ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார்.
பெரியார், காமராஜர், ராஜாஜி, கல்கி உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகினார். கட்சி வேறுபாடின்றி அனைவரின் அன்பை யும் ஆதரவையும் பெற்றிருந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்தார்.
* கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.
பின்னர் ‘சாவி’ என்ற பெயரில் வார இதழைத் தொடங்கிப் பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
* இளம் வயதில் போதுமான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்தவர் என்பதால், எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களிடம் அவருக்கு இயல்பான பரிவு இருந்தது.
சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், மாலன், பாலகுமாரன் என பல எழுத்தாளர்களை ஊக்குவித்து வளர்த்தவர்.
* புதுமை விரும்பி என்பதால் தன் பத்திரிகைகளில் ஏதாவது புதுமையாகப் புகுத்திக் கொண்டே இருப்பார்.
நல்ல ஆலோசனைகளை யார் கூறினாலும், அதை உடனடியாக அமல்படுத்திவிடுவார். அவர்களை மனதாரப் பாராட்டுவார்.
* சில நண்பர்களுடன் சேர்ந்து ‘ஞானபாரதி’ என்ற அமைப்பைத் தொடங்கி, கலைத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் முத்திரை பதிப்பவர்களுக்கு ‘ஞானபாரதி’ விருதும் பொற்கிழியும் அளித்து கவுரவித்து வந்தார்.
* இவரது படைப்புகளில் நகைச்சுவையுடன் கருத்துச் செறிவும் இணைந்தே காணப்படும். நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர். பழக இனியவர். பத்திரிகை தர்மம், தனது கொள்கைகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதவர்.
கல்கியைத் தன் குருவாக மதித்துப் போற்றியவர். காஞ்சிப் பெரியவரிடம் பக்தி கொண்டவர். ‘சாவி-85’ என்ற இவரது வாழ்க்கை வரலாற்று நூலை ராணி மைந்தன் எழுதியுள்ளார்.
* 60 ஆண்டுகளுக்கு மேல் எழுதி வந்த சாவியின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டன.
தனது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சாதித்துக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம், எழுத்தாற்றலால் சிறந்த எழுத்தாளராக உயர்ந்து, தமிழ் இதழியலில் தனிமுத்திரை பதித்த ‘சாவி’ 85-வது வயதில் (2001) மறைந்தார்.
-நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்