பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78.
1974-ல் முதல் முறையாக ‘தீர்க்க சுமங்கலி’ ௭ன்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான அவர், மல்லிகை என் மன்னன் மயங்கும், நித்தம் நித்தம் நெல்லு சோறு உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம்.
கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர்.
அபூர்வ ராகங்கள், சங்கராபரணம், ஸ்வாதி கிராணம் ஆகிய படங்களில் பாடி 3 முறை தேசிய விருது வென்றுள்ளார்.
*மல்லிகை என் மன்னன் மயங்கும் (தீர்க்கசுமங்கலி)
*ஏழு ஸ்வரங்களுக்குள் (அபூர்வராகங்கள்)
*மேகமே மேகமே(பாலைவனச் சோலை)
இவரின் இனிமை பாடல்களை நினைத்தால் உடனடியாக நினைவில் வருவவை.
வாணி ஜெயராம் தனித்துவமே ஆலாப் தான். ஹிந்துஸ்தானி உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கான் அவர்களிடம் துமிரி கஜல் பஜன் ஆகியவற்றை முறையாக பயின்றவர்.
இதனால் அவரிடம் இயல்பாக ஆழ்மன தேடல் வெளிப்பாடு சிறப்பாக இருந்தது.
குறிப்பாக பெண்ணின் ஏக்கங்கள், உள்மனக் கனவுகள் ஆகியவை அவரது குரலில் மெல்லிய சோகத்துடன் சிறப்பாக வெளிப்பட்டன.
அண்மையில் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. அவரது தலையில் அடிபட்ட காயம் இருப்பதால் இந்த சந்தேகம் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.