சென்னை 46 ஆவது புத்தகக் காட்சியானது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 6-ம் தேதி முதல் தொடங்கி நேற்று வரை கோலாகலமாக நடைபெற்றது.
17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக காட்சியில் சுமார் 16 கோடி அளவிலான புத்தக விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், 15 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 46-வது சென்னை புத்தக காட்சியில் தமிழ்நாடு சிறைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 286-வது அரங்கமானது அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் தொடர்ந்து வாசகர்கள் வரை அனைவரையும் கவனிக்க வைக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு சிறை துறையின் சார்பில் ’கூண்டுக்குள் வானம்’ என்கின்ற அரங்கின் மூலம் புத்தகங்களை தானமாக பெறப்பட்டு, அதன் மூலம் சிறைவாசிகளுக்கு மனரீதியான மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த புதிய முயற்சியில் இதுவரை 35000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறைவாசிகள் படிப்பதற்காக தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், சைலேந்திரபாபு, பேரறிவாளன் தொடங்கி பதிப்பாளர்கள், வாசகர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த புத்தகங்களை சிறைவாசிகளுக்கு வழங்கியுள்ளனர்.