அதிமுக வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார்!

ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அதிமுக-பாஜக இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளநிலையில், காலை 8 மணிக்கு இதுதொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கலும், மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

இந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அதிமுக போட்டியிடும் சூழல் உள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக-பாஜக இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மாலை 4 மணிக்கு பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், “அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி, பா.ம.க., த.மா.கா., புரட்சி பாரதம் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த கூட்டணி சகோதரர்களிடம் நாங்களே சென்று ஆதரவு கேட்போம்.

பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டு அவர்கள் விருப்பத்தை எங்களிடம் தெரிவித்தால் உறுதியாக ஆதரவளிப்போம்.

தேசிய கட்சியாக வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருப்பதால் அவர்களுக்கு நல்வாய்ப்பாக இருக்கும் என்று கருதி ஆதரவு தெரிவிப்போம். இரட்டை இலை சின்னத்தை பெற எங்களுக்கே முழு உரிமை உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

2026 வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்தெடுத்துள்ளனர். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்தள்ளார்.

You might also like