சென்னை புத்தகக் காட்சிக்கு எதிரே புத்தகக் கடை!

பபாசி அமைப்புக்கு எதிர்ப்பு

சென்னை புத்தகக் காட்சியில் இடம் வழங்காததைக் கண்டித்து புத்தகக் கண்காட்சிக்கு எதிரே பிளாட்பாரத்தில் புத்தகங்களை விற்பனைக்கு வைத்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது சால்ட் பதிப்பகம்.

இதுபற்றி பதிப்பாளரும் எழுத்தாளருமான நரன் எழுதியுள்ள பதிவு.

புத்தகக் கண்காட்சியில் பபாசி (BAPASI) சால்ட் பதிப்பகத்திற்கு ஸ்டால் தராததற்கு எதிர்ப்புணர்வை பதிவு செய்யும் வகையில் கண்காட்சியின் வெளியே நடைபாதையில் கடை விரித்தோம்.

உண்மையில் மிக நல்ல விற்பனை. வாசகர்கள், நண்பர்களின் பேராதரவோடு 17400/- ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மீண்டும் அதே நடைபாதையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஒன்று கூடுகிறோம்.

இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு சர்வதேச கண்காட்சி நடத்துவதால் இந்த கடைவிரிப்பு நிகழ்வு அரசுக்கு எதிரானதாக ஒரு பிம்பத்தை உருவாக்கிவிடும்.

நிச்சயமாக இது பபாசிக்கு எதிராக மட்டுமே நடத்தப்படும் எதிர்ப்புணர்வு செயல்பாடு. குறிப்பாக பபாசியின் செயலாளர் முருகனுக்கு எதிரான செயல்பாடு.

பபாசி நிர்வாகிகள் சால்ட்க்காக பரிந்துரை செய்யும் அரசு தரப்பு நண்பர்களிடம் மீண்டும் மீண்டும் ஒரு பொய்யை சொல்கிறது. நாங்கள் கடைசி நேரத்தில் தான் ஸ்டால் கேட்டு வந்து நின்றோமென… நாங்கள் முதன் முதலாக ஸ்டால் கேட்டுப் போனது டிசம்பர் 23.

பபாசியில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு டிசம்பர் 26-க்கு மேல்தான் அப்ளிகேஷன் ஃபார்ம் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் அவர்கள் எந்த ஃபார்மும் கொடுக்கவில்லை.

கண்காட்சிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து மீடியா நண்பர்கள் கேள்வி எழுப்பியபோது அந்த பதிப்பகம் 15 டைட்டில் தான் வைத்திருக்கிறார்கள். அதனால் தரவில்லை என்று காரணம் சொன்னார்கள.

அதுவும் பொய்தான். சால்ட் பதிப்பகம் இதுவரை 41 Tittles பதிப்பித்திருக்கிறது.
பபாசி அமைப்பு அரசிடமிருந்து உதவி தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு அரசே அறம் பதிப்பகத்திற்கும் வேறு சில பதிப்பகத்திற்கும் ஸ்டால் வழங்க சொல்லியும் அரசை மதிக்காத அமைப்பு.

அந்த அமைப்பில் எந்த ஜனநாயக முறையும் பின்பற்றபடுவதில்லை. புதியதாக யாரையும் உறுப்பினராக சேர்ப்பதில்லை.

சேர்க்கப்பட்ட சில உறுப்பினர்களும் அவர்களுக்கு மிகவும் வேண்டபட்டவர்கள். ஏற்கனவே 400 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதிலும் நிறைய பேர் இரண்டு மூன்று பெயரில் அதே ஆட்களேயிருக்கிறார்கள்.

ஒரே பதிப்பகங்கள் வெவ்வேறு பெயர்களில் அரங்கத்தை ஆக்ரமித்திருக்கின்றன. ஒரே ஆட்கள் 12 ஸ்டால்கள் வரை எடுத்துள்ளார்கள். இதெல்லாம் வெளிப்படையான ஊழல்.

பபாசிக்கு எதிரான இந்த முன்னெடுப்பு நிச்சயமாக தொடரும். இது சால்ட் பதிப்பகத்திற்காக மட்டுமேயான முன்னெடுப்பு இல்லை.

இதன்மூலம் அடுத்த ஆண்டுகளில் புதிய பதிப்பகங்கள் நிறைய கண்காட்சியில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகுமென நம்புகிறோம்” என்று கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

You might also like