எங்கள் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவனும் என் வகுப்பு மாணவனுமான பிரதாப் இன்று 19-12- 2022 அரையாண்டு தேர்வெழுத ஏனோ பள்ளிக்கு வரவில்லை.
மாணவர்கள் எவரேனும் வரவில்லை அல்லது உடல்நலமில்லை எனத் தெரிந்தால் முடிந்தவரை நானே அவர்களின் வீட்டிற்குத் தேடிப் போய்விடுவேன்.
அப்போதுதான் அவர்களின் உண்மையான நிலவரம் தெரியவரும் என்பதோடு அது என் பணி சார்ந்த கடமையும் என்பதால் பிற மாணவர்களை விசாரித்ததில் வீட்டில்தான் இருக்கிறான் என்றார்கள்.
எனவே இன்று மாலை பள்ளி விட்டபின் இன்னொரு மாணவன் ராஜேஷ் வழி காட்டலுடன் நான் அவனது வீட்டிற்குச் சென்றேன்.
என்னை எதிர்பாராத அவனுக்கு தாளாத மகிழ்ச்சி. மிகச்சிறய வீட்டில் வசிக்கிறான் பிரதாப்.
மாதம் இரண்டாயிரம் வாடகையாம் கரண்ட்பில்தான் அதிகமாக வாங்குகிறார்களாம்.
நாளை நிச்சயமாக வந்துவிடுகிறேன் டீச்சர் என்றான். பின்னர் தனியாக நடந்த என்னுடன் வழியனுப்பலாக இருவரும் கொஞ்சதூரம் கூட நடந்து வந்தார்கள்.
வழியில் புறாகுளம் என்ற பெயர்ப்பலகைப் பார்த்தேன். அதன் அருகிலிருந்த பெரிய கட்டிடத்தை ‘கப்பல் காலேஜ்’ என்றார்கள்.
சென்னை -செம்மஞ்சேரி பாண்டிச்சேரி பாட்டை சாலையிலுள்ள அந்த குளத்தை பார்க்கலாமா’ என்றதும் அழைத்துச் சென்றார்கள்.
ஒரு குறுகலான அகல சந்துபோன்ற வழியில் கொஞ்சம் நடந்ததும் ஏரிபோல் பெருங்குளம் பெரிய உற்சாகத்தை தந்ததெனக்கு.
படித்துறையில் சற்று நேரம் அமர்ந்திருந்தேன் அவர்களுடன் என் இளம்பிராய குளக்கரை நினைவுகளுடன். குளத்தில் இறங்கி நீச்சல் தெரியாமல் இறந்தவர்களின் கதைகளை எல்லாம் எனக்குச் சொன்னார்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஓர் அம்மா வந்து கரையில் உட்கார்ந்து அழுதுவிட்டுப்போவார்களாம். ஏனெனில் அந்த அம்மாவின் மகன் ஒரு சனிக்கிழமைதான் நீச்சல் தெரியாமல் இந்தக் குளத்தில் இறங்கி மூழ்கி இறந்துபோனாராம்.
அவர்கள் சொன்ன ஒவ்வொரு கதையும் ஒரு பெருந்துயராக இருந்தது. இவர்கள் இந்த குளத்திற்கு அடிக்கடி வருவதாக கூறினார்கள். ஆபத்தான குளம் இனிமேல் நீங்கள் வரக்கூடாது என்றதும் சரியென்றார்கள்.
குளத்தை சுற்றி மூவரும் நடந்தோம். ஓர் ஏரிபோல் அத்தனை பெரிதாக அழகாக இருந்த புறாகுளத்தை அறிமுகம் செய்து கதைகள் கூறிய மாணவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பிவிட்டு நான் வீடு வந்து சேர்ந்தும் ஒய்வதாய் இல்லை புறாக்குளத்தின் மாலை நேர குளிரலைகள் என் மனதின் அலைகளாக நண்பர்களே.