மஞ்சள் கயிறு மேஜிக்: உண்மையா?

வட அமெரிக்காவில் நான் முதலில் பணிபுரிந்த வேலைக்கு, தினமும் Business உடையில் செல்ல வேண்டும்.

கனமான தாலி அந்த உடையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவே கணவருடன் கலந்தாலோசித்து மெல்லிய சங்கிலியில் கோர்த்துப் போட்டுக்கொண்டேன்.

பிறகு Taekwondo பயிற்சி, யோகப் பயிற்சி, கால்பந்து பயிற்சி எனச் செல்லும் பொழுதெல்லாம் கழுத்தில், காதில் எதுவும் போடக்கூடாது என்பதால் கழட்டி வைப்பதும், பிறகு போட்டுக்கொள்வது பழகவும், சில நேரங்களில் கழட்ட மறந்து பயிற்சிக்குச் சென்ற பிறகு அதனைக் கழட்டி வைக்க, தொலைந்து போகும் வாய்ப்புகளும் இருந்தன.

திருமணம் ஆனவர்கள் என்பதைப் பிறருக்குத் தெரிவிக்க இங்கு, ஆண்(Wedding Band type Ring), பெண் பேதமில்லாமல் Wedding Ring அணியும் பழக்கம் உள்ளது. நானும் Wedding Ring அணிவதால் தாலி அணிவது பெரிய விடயமாகத் தெரியவில்லை.

ஊருக்கு வரும்பொழுது தாலி அணிந்து வருவது கூட அங்கு நமது கலாச்சாரத்தில் திருமணம் ஆனவர்கள் என அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே.

சமீபத்தில் குடும்ப நண்பர் ஒருவர் ஏன் தாலி அணிவதில்லை என என்னிடம் கேட்க, நான் மேலே சொன்ன காரணங்களையும், பரஸ்பரம் நம்பிக்கை கணவன் மனைவிக்கு இடையில் இருக்கையில் தாலி அவசியம் இல்லை என விஜய்யும் கூறினோம்.

தமிழகத்தின் தாலி செண்டிமெட்டும், அதனை வைத்து பெண்கள் எவ்வாறு கணிக்கப்படுகிறார்கள் என்றும், மஞ்சள் தாலி மாஜிக் பற்றி பல்வேறு திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் விடயங்களும் குடும்பங்களில் பரவியிருக்கும் நிலையில் உங்கள் இருவரின் புரிதல் போற்றாதலுக்குரியது எனப் பாராட்டினார்.

இந்த உரையாடல் சில மாதங்களுக்கு முன் எங்கள் சைவ சித்தாந்தம் வகுப்பில் தாலி குறித்து உரையாடிய பொழுதில் நான் சில கட்டுரைகளில் படித்து, பகிர்ந்து கொண்ட சங்கப் பாடல்களை நினைவுக்குக் கொண்டுவந்தன.

சங்க நூல்களிலிருந்துதான் நமது முன்னோர்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்கிறோம். சங்க காலத்தில் பெண்கள் தாலி அணிந்திருந்தார்களா என முதலில் பார்க்க வேண்டும்.

இக்காலத்தில் புனித சின்னமாகக் கருதப்படும் தாலி குறித்தான எந்த தகவல்களும் சங்க இலக்கியங்களில் இல்லை.

ஏன்.. கற்புக்கரசி எனப் போற்றப்படும் கண்ணகி தாலி அணிந்திருந்தாளா எனப் பார்த்தால் இல்லை என்றே தெரிகிறது.

பூம்புகாரில் வாழ்ந்த ‘ஏசாச்சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசத்துவான் மகன்’ கோவலன், மாநாய்க்கன் மகள் கண்ணகி. இவர்கள் மணவிழா பற்றியும், மணச்சடங்குகள் பற்றியும் சிலப்பதிகாரத்தில் விரிவான விளக்கம் உள்ளது.

திருமணப் பந்தலில் சந்திரனும் உரோகிணியும் கூடிய நல்லோரையில் மாமுது பார்ப்பான் வேதநூல் வழிப்படி கோவலன் கண்ணகி இணையரைத் தீ வலம் வரச் செய்தான். பெண்டிர் பலர் மணப் பொருள்களை ஏந்தி நின்றனர்.

சிலர் உரையால் வாழ்த்தச் சிலர் பாடலால் வாழ்த்தினர். சிலர் பலவகைச் சாந்துகளை ஏந்தி நின்றனர். மற்றும் சிலர் மாலைகளை ஏந்தி நின்றனர்.

சிலர் விளக்குகளையும், வேறு சிலர் முளைப் பாலிகையையும் ஏந்தி நின்றனர். கொடி போலும் மகளிர் “இக்கண்ணகி தன் தலைவனைப் பிரியாதவள் ஆகுக! இவள் காதலன் இவளைத் தழுவிய கை நெகிழாமல் சேர்ந்திருப்பானாக! இருவரும் அன்புடன் தீதற்று விளங்குக” என்று தம் வழிபடு கடவுளை வணங்கினர். சிலர் மலர்களைத் தூவி வணங்கினர்.

இங்குப் பார்ப்பனர் இடம்பெற்றுள்ளார். அவர் வேத முறைப்படி திருமணம் நடத்துகிறார். மணமக்கள் தீவலம் வருகிறார்கள். ஆனால் தாலி இடம்பெறவில்லை.

அப்பாடல்..

“மறுவில் மங்கல அணியே அன்றியும்
பிறதணி அணியப் பெற்றதை எவன்கொல்”
– மனையறம் படுத்த காதை
“மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்”
                    (அந்திமாலைச் சிறப்புசெய் காதை)
                    – இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்
போன்ற குறிப்புகளைக் கொண்டு கண்ணகியும் தாலி அணியும் வழக்கத்தைக் கைக்கொண்டாள் இல்லை என்று அறிகிறோம்.

தொல்காப்பியரும் கணவன், மனைவி இருவரும் இணையும் இல்லறம் பற்றி இலக்கணம் வகுத்துள்ளார்.

’கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே!’
                               – தொல்காப்பியம், கற்பியல்-1

பொய்யும் தவறுகளும் ஏற்பட்ட பிறகுதான் மேலோர் இல்லற ஏற்பில் பல சடங்குகளை ஏற்படுத்தினர் என்றும் தொல்காப்பியம் கூறும். அங்கும் தாலி பற்றிய குறிப்பு இல்லை.

‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப’
                                  – கற்பியல்-4

அகநானூற்றிலும், திருமணத்தில் முதல் நிகழ்வாக விருந்து நடைபெற்றது. மணப்பந்தலின் கீழ் ஒரு பகுதியில் மணலைப் பரப்பி வைத்து அதன்மீது விளக்கை ஏற்றியிருந்தனர்.

இளங் காலைப் பொழுதில் திங்கள் உரோகிணியுடன் கூடிய நல்லோரையில், முதுமகளிர் மணமகளை நீராட்ட நீர்க் குடங்கள் ஏந்தி வந்தனர்.

அந்தத் தண்ணீர்க் குடங்களில் மலரும் நெல்லும் தூவிப் பிள்ளை பெற்ற பெருமாட்டியர் நால்வர் மணமகளைக் கற்பு நெறியினின்றும் வழாஅமல் நலம் பல ஆற்றிக் கணவன் விரும்பத்தக்க மனைவி ஆகுக” என வாழ்த்தி மணிநீராட்டினர். இவற்றுடன் வதுவை நன்மணம் நிறைந்தது. அப்பாடலின் சில வரிகள்..

“உழுந்துதலைப் பெய்த கொமுங்களி மிதவை
பெருஞ்சோற்று மலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனை விளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென..”

-நல்லாவூர் கிழார், அகநானூறு 86

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் இடம்பெறாத தாலி, பெரியபுராணம், கம்பராமாயணம் முதலிய பிந்தைய கால இலக்கியங்களில் தான் இடம்பெற்றது.

ஆதலால் திருமணம் ஆனவள் என மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் அடையாளமாகத் தாலி அணியப்பட்டிலிருக்கலாம்.

அப்படி அணிவது அவரவர் விருப்பம். அணிந்தால் அவள் போற்றுதலுக்குரியவள் என்றும், அணியவில்லை என்றால் அவளைத் தூற்றுவதிலும் உடன்பாடு இல்லை.

திருமணப் பந்தம் எளிதில் உடைந்துபோகும் மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் ஆண் பெண் திருமணம் ஆனவர்கள் என்பதை மோதிரம் அணிந்து சமுதாயத்திற்குத் தெரிவிக்கும் வழக்கம் உள்ளபோது, நமது கலாச்சாரத்தில் பெண் தாலி அணிய ஏன் ஆண் மட்டும் அதைச் செய்வதில்லை..

‘தாமிரபரணி’ படம் என நினைக்கிறேன்.. அதில் நடிகர் பிரபு மெட்டி அணிந்திருப்பார் (ரொம்ப பிடித்த காட்சி), அதனைத் தவிர்த்து எங்கும் நான் பார்த்ததில்லை ஓர் ஆண் தான் திருமணம் ஆனவன் என்பதைப் பறைசாற்ற.. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” எனச் சொல்லும் ஆண் ஆதிக்கமா இது.. இல்லை வேற என்னவாக இருக்கும்.. அதற்குள் சென்றால் மீண்டு வர இயலாது..

சமீபத்தில் அன்புத் தோழி கவிஞர் Savitha அவர்களின் முகநூல் பதிவில் தாலி குறித்தான பின்னோட்டத்தில் நான் சொன்ன அதே கருத்தைத்தான் இப்பொழுதும் சொல்கிறேன். கயிறால மட்டும் எந்த மேஜிக்கும் வந்துவிடாது.

அன்பு, காதல், விருப்பம் எல்லாம் உள்ளம் சம்பந்தப்பட்டது.. தாலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், கணவன் மனைவிக்கிடையே புரிதலும், தெளிவும் இருந்தால் மேஜிக் வேலை செய்யும்.. அதுதான் கணவன் மனைவிக்கிடையேயான அன்பையும் காதலையும் உயிர்ப்பித்து வைத்திருக்கும்..
கணவர் இனிது.. புரிதல் வரம்.

You might also like