கட்சிகள் தாவி உயரம் தொட்ட நடிகைகள்!

அரசியலில், திரைப்பட நட்சத்திரங்களின் பங்களிப்பு நாடு முழுவதும் விரிந்து கொண்டே செல்கிறது. நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் அரசியலில் குதித்து வருகிறார்கள்.

கட்சி மாறுவதிலும், நடிகர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து, தங்கள் இருப்பை பதிவு செய்த பிரபல நடிகைகள் குறித்த தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

விஜயசாந்தி:

35 ஆண்டுகளுக்கு முன்பு ‘லேடி சூப்பர்ஸ்டார்’, ’லேடி அமிதாப்’ என புகழப்பட்டவர் விஜயசாந்தி. 190 படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபோது அரசியலுக்கு வந்தார்.

1998-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தார்.

அவரை எதிர்த்து விஜயசாந்தி நிற்பார் என பா.ஜ.க. மேலிடம் அறிவித்தது. சோனியா கடப்பாவில் போட்டியிடவில்லை. இதனால் விஜயசாந்தியும் தேர்தலில் நிற்கவில்லை.

கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க.வில் இருந்து விலகி ‘தள்ளி தெலுங்கானா’ எனும் கட்சியை ஆரம்பித்தார். வரவேற்பு இல்லை. இதனால் கட்சியை கலைத்து விட்டு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியில் கலந்தார்.

அந்த கட்சியின் சார்பில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். டி.ஆர்.எஸ்.சிலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

காங்கிரசில் சேர்ந்தார். அங்கு தனக்கு எதிர்காலம் இல்லை என உணர்ந்ததால், மீண்டும் பா.ஜக.வில் ஐக்கியமானார். இப்போது அந்தக் கட்சியில் தான் இருக்கிறார்.

ஜெயப்பிரதா:

இவரும் விஜயசாந்தி போன்று பல கட்சிகளுக்கு சென்றுவிட்டு இப்போது பா.ஜ.க.வில் ஐக்கியமாகி இருக்கிறார்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே, என்.டி.ராமராவால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். ஆம். தெலுங்குதேசம் கட்சியில் தான் ஜெயப்பிரதாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது.

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அந்தக் கட்சியை என்.டி.ஆர். மருமகன், சந்திரபாபு நாயுடு, கைப்பற்றியபோது அவருடன் பயணித்தார். கொஞ்ச நாட்களில் கருத்து மோதல் உருவாகி அங்கிருந்து விலகினார்.

முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சியின் வேட்பாளராக உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

முலாயம் சிங்குடன் வேறுபாடு ஏற்பட்டதால், சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவர் அமர்சிங் அங்கிருந்து விலகினார்.

ராஷ்டிரிய லோக் மோர்ச்சா எனும் புதிய கட்சியை ஆரம்பித்தார். ஜெயப்பிரதாவும் அந்தக் கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சி போணி ஆகவில்லை,.

இதனால் சரண்சிங்கின் ஆர்.எல்.டி. கட்சியில் சேர்ந்தார். அதிலிருந்து 2019-ம் ஆண்டு விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டார். இப்போது காவிக் கட்சியில் தான் ஜெயப்பிரதாவின் காலம் ஓடுகிறது.

ரோஜா:

பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகமாக இருந்தவர். இதனால், தனது ராசியான ‘ஆர்’ இனிஷியலில் ரோஜா என பெயர் சூட்டினார் பாரதிராஜா.
ஆனால், அவரால் அறிமுகமாகவில்லை.

பிற்காலத்தில் ரோஜாவை திருமணம் செய்து கொண்ட ஆர்.கே.செல்வமணி, தனது ‘செம்பருத்தி’ படம் மூலம் ரோஜாவை அறிமுகம் செய்தார்.

90-களில் உச்சத்தில் இருந்த ரோஜா, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

பின்னர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சியின் சார்பில் நகரி தொகுதியில் இருமுறை போட்டியிட்டு வென்றவர்.

அரசியலில் ரோஜாவின் முன்னோடிகளான விஜயசாந்தியும், ஜெயப்பிரதாவும் எம்.பி.ஆக மட்டுமே இருந்த நிலையில், இவர் ஆந்திர மாநில அமைச்சராக உயர்ந்தார்.

இப்போது ரோஜா, ஆந்திர மாநிலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

குஷ்பு:

10 வருடத்தில் 3 கட்சிகள் மாறியவர் குஷ்பு. பூர்வீகம் மும்பையாக இருந்தாலும், தமிழகம் தான் இவருக்கு கோயில் கட்டியது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என அனைத்து பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த ஒரே நடிகை குஷ்பு மட்டுமே.

கலைஞர் கருணாநிதியின் மீதான அன்பினால் 2010-ம் ஆண்டு தி.மு.க.வில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார். கட்சி தோற்றது.

2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பிரதமர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சித்த குஷ்பு, 2020-ம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்ததை காலத்தின் கட்டாயம் என்றே சொல்ல வேண்டும்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனாலும், அரசியலில் முழு ஈடுபாட்டோடு இருக்கிறார்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. குஷ்புவுக்கு சீட் கொடுக்கலாம். மற்ற நடிகைகள் எம்.பி., அமைச்சர் என உயர்ந்த நிலையில், குஷ்பு அந்த உயரங்களை எட்டவில்லை என்பது வருத்தமான விஷயமே.

– பி.எம்.எம்.

You might also like