ராகுல்காந்தி நெகிழ்ச்சி
நூறு நாள்களைக் கடந்து தொடரும் ராகுல் காந்தியின், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில், கடந்த டிசம்பர் 24-ம் தேதி அன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ராகுலுடன் இணைந்து பங்குபெற்றார்.
அப்போது எடுக்கப்பட்ட ராகுல், கமல் உரையாடலின் காணொளி தற்போது ராகுல் காந்தியின் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது.
அப்போது அவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற தனிப்பட்ட கலந்துரையாடலின்போது, தமிழ் மக்கள் தன் மீது உணர்ச்சிகரமாக அன்பு செலுத்துவதற்கானக் காரணம் என்னவென்று ராகுல்காந்தி, கமல்ஹாசனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு, தமிழ் மக்கள் தங்களுக்கு பிடித்த தலைவரை காணும்போது, உற்சாகமடைவதாக கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
அதோடு, நாட்டின் தற்போதைய நிலை குறித்து கமல்ஹாசனும், ராகுல் காந்தியும் உரையாடியுள்ளனர்.
அப்போது ‘ஹே ராம்’ பற்றியும் திரைத்துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் கமல்ஹாசன் பேசியிருந்தார்.
“என் அப்பா காங்கிரஸ் கட்சியிலிருந்தார். காந்தியை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், நான் இளம்வயதில் காந்தியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இருப்பினும் என் அப்பா என்னோடு ஏதும் வாதம் செய்யமாட்டார், வரலாற்றைப் படி என்று எனக்கு அறிவுரைச் சொல்வார். அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தபோதும் இது குறித்து என்னுடன் வாதம் செய்யமாட்டார்.
என் 24, 25 வயதுகளில் காந்தியைப் பற்றி நானாக அறிந்துகொண்டேன். பின்னர், இத்தனை வருடப் புரிதலில் அவரது ரசிகனாக மாறிவிட்டேன். இதுதான் நான். இதன் காரணமாகத்தான் ‘ஹே ராம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தேன். அதில் காந்தியைக் கொல்லத் திட்டமிடும் ஒரு கொலையாளிகளில் ஒருவனாக நானும் நடித்திருந்தேன்.
அத்திரைப்படத்தில் நான் அவரை (காந்தி) நெருங்கி நெருங்கி உண்மைக்கு அருகில் செல்ல செல்ல மொத்தமாக மாறிவிடுவேன். ஆனால் அது தாமதமான மாற்றம். எனவே அவன் செய்ய நினைத்ததை வேறொருவன் செய்துவிடுகிறான்.
இருப்பினும் காந்தியைத் தவறாக நினைத்த எனது கதாபாத்திரம் மனம் மாறிவிடுகிறது. அதுதான் ‘ஹே ராம்’ படத்தின் கதை” என்றார்.
அதைக் கேட்ட ராகுலும் “காந்தியைப் புரிந்துகொள்ள நீங்கள் கையாண்ட இந்த யுக்தி அற்புதமானது” என்று பெருமைப்பட்டார்.
மேலும் வேலைவாய்ப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என இருவரும் உரையாடினர்.
அப்போது திரைத்துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றிப் பேசிய கமல்,
“ஒரு திரைப்படத்தின் மூலம் 200 பேருக்கு வேலை கிடைக்கும். ஆனால் அதற்கான பயிற்சி மையங்கள் மிகக்குறைவு. அதற்கென ஒரு ஐடிஐ கூட இங்கு இல்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.
இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி, கமலுக்கு புலி ஓவியத்தைப் பரிசாக அளித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.