2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை கைப்பற்றி இமாலய சாதனை நிகழ்த்தியது.
அப்போது ஜெயலலிதா சொன்ன வாசகம்: “கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளைக் காணவில்லை’’.
அந்த வார்த்தைகளை தனக்கானதாக தி.மு.க. இப்போது எடுத்துக்கொண்டு விட்டதாகச் சொல்லலாம்.
தொடர் வெற்றிகள்:
கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க. வெற்றி மேல் வெற்றியை ருசித்து வருகிறது.
2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தை மட்டும் (தேனி) அ.தி.மு.க.வுக்கு கொடுத்து விட்டு, எஞ்சிய அனைத்து இடங்களையும் தி.மு.க. கூட்டணி அள்ளியது.
கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. வாகை சூடி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் (பிப்ரவரி) நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க.வின் வெற்றி தொடர்ந்தது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி பிடித்தது.
132 நகராட்சி, 435 நகரப் பஞ்சாயத்துகளையும் கைப்பற்றியது.
இன்னும் ஒன்றே கால் ஆண்டுகளில் நடைபெறப்போகும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகிவிட்டது தி.மு.க.
“வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டும்.
அதற்காக இப்போதே தேர்தல் பணிகளை தொடங்குங்கள்’’ என சென்னையில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின், வேண்டுகோள் வைத்துள்ளார்.
தங்கள் அணியில் புதிதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அந்தக் கூட்டணி பலம் பொருந்திய அணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மு.க.ஸ்டாலின், தனிப்பட்ட முறையிலும், முணுமுணுப்புகள் இல்லாமல், மற்றொரு வெற்றியை அடைந்துள்ளார்.
அது – தனது மகன் உதயநிதியை அமைச்சரவைக்குள் கொண்டு வந்து சேர்த்தது.
வருட ஆரம்பத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.கொடி உயரப்பறந்தது.
ஆண்டின் இறுதியில் கட்சிக்குள் ஸ்டாலின் கொடி உயரப்பறந்துள்ளது.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக இருந்த உதயநிதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு, மூத்த அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அடுத்த உயரத்துக்கு அவரை தயார் படுத்தி விட்டார் ஸ்டாலின்.
இல்லாது போன எதிர்க்கட்சிகள்:
தி.மு.க. ஒவ்வொரு தேர்தலிலும், தனது பலத்தை படிப்படியாக அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன?
சட்டமன்றத்தில் அ.தி.மு.க.தான் பிரதான எதிர்க்கட்சி.
தலைவர்களிடையே எழுந்துள்ள ஈகோ யுத்தத்தால், அந்தக் கட்சி இப்போது சிதறுண்டு கிடக்கிறது.
ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்சும் ஒன்றாக இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தலை சந்தித்தனர்.
தேர்தலில் தோற்றாலும், கணிசமான எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தார்கள்.
வாக்குவங்கியும் சொல்லும்படியாக இருந்தது.
சிறிது அசந்தாலும் அ.தி.மு.க. மக்கள் நம்பிக்கையை பெற்று தி.மு.க.வுக்கு சவால் விடும் நிலைக்கு உயர்ந்துவிடும் என ஸ்டாலின் உணர்ந்திருந்த தருணத்தில், கட்சியை கூறுபோட்டு விட்டனர் தலைவர்கள்.
சோதனைக் காலத்தில் தாக்குப் பிடித்து நிற்கும் கட்சியே மீண்டும் ‘பீனிக்ஸ்’ பறவையாக எழுந்து வர இயலும் என்பது அரசியல் வரலாறு.
தமிழகத்தில் அதற்கு உதாரணம் தி.மு.க. ஆனால் தோல்விகளால், துவண்டு போயிருக்கும் இந்தத் தருணத்தில் அ.தி.மு.க. வலிந்து பிளவுகளை உண்டாக்கி இருப்பது எம்.ஜி.ஆர். ஆன்மாவுக்கு செய்யும் பச்சை துரோகம் என்பதில் சந்தேகமில்லை.
ஜுலை மாதத்தில் இபிஎஸ், தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக முடி சூடிக்கொண்டு, ஓபிஎஸ்சை கட்சியை விட்டே விலக்கினார்.
அ.தி.மு.க. கொடி , இப்போது இருவர் கையிலும் சிக்கி படாதபாடு படுகிறது.
“ஒன்று பட்டால் மட்டுமே வாழ்வு என்பது’’ அ.தி.மு.க. தொண்டர்களின் குரல் மட்டுமல்ல, அரசியல் நோக்கர்களின் கருத்தும் ஆகும்.
6 பேர் விடுதலை:
இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாக 6 பேர் விடுதலையைச் சொல்ல வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு இளமைக் காலத்தை சிறையில் கழித்த நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை உச்சநீதிமன்றம் விடுவித்ததால் 6 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்து நவம்பரில் சுதந்திரக் காற்றை சுவாசித்தனர்.
கொரோனா பீதி:
ஆண்டு தொடக்கத்தில் முழுதாக ஓய்ந்திருந்த கொரோனா தொற்று உருமாறி மீண்டும் பீதியை கிளப்பியுள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்தத் தொற்று ஏற்கனவே பரவி விட்டது. இதனால் தமிழகமும் அரண்டு போய் நிற்கிறது. மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் 2022 ஆம் வருடம் கடந்து செல்கிறது.
– பி.எம்.எம்.