மறைந்திருக்கிற தமிழ் மரபைப் பேசி வந்த நெல்லைக் குரல்!

-மணா

டிசம்பர் 24 – தொ.பரமசிவன் நினைவு நாள் – மீள் பதிவு

தொ.பரமசிவன். பாளையங்கோட்டையிலும், மதுரையிலும் எத்தனையோ முறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.

நண்பர் நிஜ நாடக இயக்க மு.ராமசாமி மூலம் தான் எனக்கு அறிமுகமானார். சிலரை முதல் சந்திப்பே நெருக்கமாக உணர வைத்துவிடும். அப்படி இருந்தார் தொ.ப.

ஆழ்ந்த வாசிப்பும், தனித்த பார்வையும் இருந்தாலும், பழகுகிற போது எல்லாவற்றையும் ஓரம் கட்டி வைத்துவிட்டு அந்நியத்தன்மையை உணர வைக்காதபடிப் பேசுவார்.

பேராசிரியப் பின்புலம் உள்ளவர்களிடம் இயல்பைப் போலிருக்கும் இறுக்கம் இவரிடம் இல்லை. பேசுகிற விஷயத்திற்கேற்ப உற்சாகம் கொப்பளிக்கும் அவரிடம்.

‘அறியப்படாத தமிழகம்’ என்ற அவருடைய நூல் அப்போது வெளிவந்திருந்து கவனம் பெற்றிருந்தது. அவருடைய ஆய்வேடான ‘அழகர்கோவில்’ பல முனைவர் பட்ட ஆய்வேடுகளிலிருந்து தனித்திருந்தது.

நான் பணியாற்றிய பல பத்திரிகைகளில் அவர் பங்கேற்றிருக்கிறார். எழுதியிருக்கிறார். குமுதம் வார இதழில் நான் எழுதி வந்த பிரபலான ‘தமிழகத் தடங்கள்’ நூலுக்காகத் தமிழகம் முழுக்க வரலாற்று எச்சமான பல இடங்களுக்குப் போயிருந்தேன்.

திருநெல்வேலிக்குப் போனபோது தகவலைச் சொன்னதும், போனில் சொன்னார்.
“நேரே நம்ம வீட்டுக்கு வந்துருங்க.. போயிறலாம்’’ பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்குப் போனதும், உபசரித்துவிட்டு, டி.வி.எஸ்-50 வாகனத்தில் உட்கார வைத்து அவரே ஓட்டிக் கொண்டு போனார்.

ரெய்னீஸ் அய்யர் தெருவுக்கு முதலில் போனோம். வண்ணநிலவனை நாவல் எழுத வைத்த தெரு அது.

தெருவின் நடுவில் இருந்தது ரெய்னீஸ் அய்யரின் கல்லறை.

அவர் மதப்பாகுபாட்டை மீறிச் செய்த செயல்களால் சர்ச் தலையிட்டு அவருடைய மரணம் கூடப் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவருடைய சடலத்தைத் தெருவில் அடக்கம் செய்ய வேண்டியிருந்த அன்றைய சமூகச் சூழலைப் பற்றி உணர்ச்சிபூர்வமாகச் சொல்லிக் கொண்டு வந்தார் தொ.ப.

அடுத்து என்னை பாளையங்கோட்டையில் உள்ள கிளாரிந்தா சர்ச்சுக்கு அழைத்துப் போனார். தமிழகத்தின் தொன்மையான ஆலயங்களில் அதுவும் ஒன்று.

எளிமையான அழகுடன் இருந்தது அந்த சர்ச். பக்கத்தில் இன்னும் ‘பாப்பாத்தியம்மா கிணறு’ என்றழைக்கப்பட்ட கிணறு. தண்ணீர்ப்பஞ்சம் நிலவிய காலத்தில் அந்தக் கிணற்றை உருவாக்கியவர் கிளாரிந்தா.

மாதவய்யா கிளாரிந்தாவைப் பற்றி ஒரு நாவல் எழுதியிருந்தாலும், தொ.பா கிளாரிந்தாவின் கதையைச் சொல்லிக் கொண்டு போன விதம், ஒரு தேர்ந்த கதைசொல்லிக்கான சொல்லாடல்களுடன் நேர்த்தியாக இருந்தது.

சதி என்கிற உடன்கட்டை ஏறும் வழக்கம் உச்சத்தில் இருந்தபோது, கிளாரிந்தாவின் கணவர் இறந்தபோது, உறவினர்கள் அவரை கணவரின் உடலுடன் சேர்ந்து உடன்கட்டை ஏறி உயிரிழக்க வைக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். கிளாரிந்தா மன்றாடியும் விடவில்லை.

அந்தச் சமயத்தில் ஆங்கிலேய அதிகாரி தலையிட்டு கிளாரிந்தாவை எதிர்ப்புகளை மீறி மீட்டுச் செல்கிறார். நேரே நெல்லைக்குப் போகிறார்கள். இளம் விதவையான கிளாரிந்தாவை மணக்கிறார் அந்த அதிகாரி.

மதம் மாறிய கிளாரிந்தா நெல்லையில் ஆலயம் கட்டி, கிணறு வெட்டி தன்னுயிரை மீட்டுக் கொடுத்த நெல்லைக்கு உதவி அங்கேயே இறக்கிறார்.

இதை திருநெல்வேலிக்கான வட்டார வழக்கில் தொ.ப விறுவிறுவென்று சொல்லி முடித்தபோது அடைமழை பெய்து ஓய்ந்ததைப் போலிருந்தது.

அருகில், வாஞ்சிநாதனால் சுட்டுக் கொலப்பட்ட ஆங்கிலேய அதிகாரியான ஆஷ்துரையின் அழகான சலவைக் கல்லினால் ஆன கல்லறையைச் சுட்டிக்காட்டி விட்டு தொ.ப சொன்னார்.

“பாருங்க.. இங்கே ஆங்கிலேயங்க ஆட்சியில் இருந்தப்போ அவங்களுக்காக உயிரிழந்தவர்களை வரலாற்றுக்குக் காட்டுவதற்காக எப்படி எல்லாம் நினைவுச் சின்னம் எழுப்பியிருக்காங்க.. வாஞ்சிநாதன் அடக்கம் செய்யப்பட்ட இடம் நமக்குத் தெரியலை.. கட்டபொம்மனைக் கூட தூக்கிலே போட்ட இடம் தெரியுது. அவரை அடக்கம் பண்ணிய இடம் தெரியலை.. நம்மோட வரலாறு எப்பேர்ப்பட்ட மூளித்தனங்களோட இருக்கு.. பார்த்தீங்களா?’’

பெருமூச்செறிந்தபடி தொ.ப சொன்னபோது, அவருடைய முகத்தில் தேங்கியிருந்த உணர்வு இப்போதும் நினைவில்.

குமுதம் நிறுவனத்தில் இருந்து ‘தீராநதி’ இலக்கிய இதழைக் கொண்டு வருவதாக முடிவானதும், பாளையங்கோட்டையிலிருந்த தொ.ப.வைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதல் இதழில் அவருடைய விரிவான நேர்காணல் வெளிவரவேண்டும். எப்போது வரலாம்? என்று கேட்டபோது, நேரே மதுரைக்கு வரச்சொன்னார்.

மதுரையிலுள்ள விடுதி ஒன்றில் இரண்டு அமர்வுகளாக ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாகப் பேசினோம். பதிவு செய்து கொண்டபிறகு விடுதியிலுள்ள மாடிக்கு அழைத்துச் சென்று புகைப்படங்கள் எடுத்தபோது, அதில் அவர் ஆர்வம் காட்டவில்லை.

தமிழகத்தின் தொன்மை, மக்கள் சார்ந்த சாமிகளின் மரபு, பெரியாரின் தாக்கம், மார்க்சீயப் பின்புலம், திருவிழாக்கள், சடங்குகள் என்று பல்வேறு திசைகளில் பயணப்பட்ட தொ.ப.வின் நேர்காணல் தீராநதி இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்ற நேர்காணலாக வெளிவந்து, முப்பதாயிரம் பிரதிகள் வரை சென்றடைந்தது.

எழுத்தாளர் சுஜாதா மனம்விட்டுப் பாராட்டினார். கமலஹாசனை நேரில் அப்போது சந்தித்தபோது, தொ.ப.வின் நேர்காணலின் சில பகுதிகளை பிரதியைப் பார்க்காமலே வேகமாகச் சொல்லி வியந்தார்.

தீராநதி இதழை எடுத்துக்காட்டி அதில் அடிக்கோடிட்டிருந்த பகுதிகளை எடுத்துக் காட்டினார்.

வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், சலனத்தையும் ஏற்படுத்தியது தொ.ப.வின் நேர்காணல்.

தீராநதி நேர்காணல் வெளிவந்து சில நாட்களுக்குப் பிறகு மன நெகிழ்ச்சியுடன் “எப்படிச் சொல்றதுன்னு தெரியலை.. நமக்குக் கோபத்தைக் காட்டத் தெரியுது. எரிச்சலைக் காட்டத் தெரியுது. ஆனா.. நன்றி சொல்றது நமக்கு இயல்பாக இல்லை.. மணா.. நிறையப் பேருக்கு என்னைக் கொண்டுபோய்ச் சேத்திருக்கீங்க.. அதுக்கு நன்றி’’ என்று சிரிப்புடன் சொன்னார்.

நண்பர் பாமரனின் மகன் திருமணத்திற்கு நீரிழிவின் அவதிக்கிடையிலும் கோவைக்கு வந்திருந்தார் தொ.ப. அங்கு பார்த்ததும் அருகில் அழைத்தவர் தன்னுடைய கஷ்டத்தைக் கூடக் கேலி படரச் சொல்லிக் கொண்டிருந்தவர், நீரிழிவு பற்றிப் பரிவுடன் எனக்கு அறிவுரைகளைச் சொன்னார்.

“முதல்லே வாயைக் கட்டுங்க.. வயிறும் கட்டுக்குள் வந்துரும்.. என்னால் முடியாமப் போனதாலே தான் இப்படி இருக்கேன். நீங்க எல்லாம் கவனமா இருக்கணும்.. என்ன?’’

அன்பும், பரிவுமான அந்தக் குரல் மறைந்திருக்கிறது.

You might also like