தமிழை நேசித்தத் தலைவர் எம்.ஜி.ஆர்.!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழில் ஆழ்ந்த புலைமை கொண்டிருந்ததோடு தமிழ் மொழி மீது அதிக பற்றும் கொண்டவராகத் திகழ்ந்தார்.

தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும்தான் என்பதை தனது செயல்பாடுகள் மூலம் எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் நிலைத்து நிற்க பெரும் முயற்சி செய்தார்.

1974-ம் ஆண்டு பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றார். மாஹே என்ற இடத்தில் பிரசாரக் கூட்டம். அந்தப் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம். மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கினார். அவரது பேச்சை இடைமறித்து, மலையாளத்தில் பேசுமாறு கூட்டத்தில் இருந்த பலர் கேட்டுக் கொண்டனர்.

தமிழ் மீது பற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர் பொறுமையாக பதிலளித்தார். ‘‘எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி தமிழ் மட்டும்தான். சிறுவயதில் நாடக மேடை மூலம் தமிழ் கற்றுக் கொண்டேன். வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் தமிழில்தான் பேசுவேன்.

நான் வளர்ந்து, புகழ்பெற்று, இன்று உங்கள் முன் நிற்பதற்கு என்னை அரவணைத்து ஆளாக்கிய தமிழகம் தான் காரணம். எனவே, தமிழில்தான் பேசுவேன். விருப்பம் உள்ளவர்கள் என் பேச்சைக் கேட்கலாம்.’’ என்றார் புரட்சித் தலைவர். அங்கிருந்த கூட்டத்தினர் அவரது தமிழ் உணர்வைக் கண்டு வியந்தனர்.

தமிழுக்கு தொண்டாற்றி ‘முத்தமிழ் காவலர்’ என்று போற்றப்பட்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு என்று ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று விருப்பம்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். உடனடியாக அதற்கு எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

கி.ஆ.பெ.விசுவநாதத்தையே அதற்கான திட்டங்களை தயாரிக்கும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டதோடு, ஒரு குழுவை அமைத்து அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தார்.

அப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி உருவாக்கப்பட்டதுதான் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்.

தமிழறிஞர் டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு உண்டு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக்குப் பிறகு, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் அவரது திருவுருவச் சிலையை எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார்.

தனது இறுதிமூச்சு வரை தமிழுக்காகவே முழங்கியவர் தேவநேயப் பாவாணர். அவருக்கு எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு உண்டு. 1981-ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழுக்கு சிறப்பு சேர்த்தார் மக்கள் திலகம். மாநாட்டில் பாவாணரின் பேச்சை எம்.ஜி.ஆர். ஆர்வத்துடன் ரசித்தார். தேவநேயப் பாவாணர் தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்.

உலகில் உள்ள எத்தனை மொழிகளுக்கு தமிழ் மூலமொழியாக விளங்குகிறது என்பதையும் எத்தனை மொழிச் சொற்களுக்கு தமிழே வேர்ச் சொல்லாக விளங்குகிறது என்பதையும் ஆதாரபூர்வமான கருத்துக்களுடன் பாவாணர் சுவைபடப் பேசிக் கொண்டே போனார். சாப்பாட்டு நேரமும் கடந்துவிட்டது.

சாப்பாட்டையும் மறந்து அவரது பேச்சை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார். கூட்டமும் ஆர்ப்பரித்தது.

பாவாணரின் மறைவுக்குப் பிறகு, அவரது பெயர் நிலைத்து நிற்கும் வகையில் மாவட்ட நூலகங்களுக்கு பாவாணரின் பெயரை சூட்ட அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். இதேபோல், அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பம் இடவேண்டும் என்று ஆணையிட்தோடு, அதற்கு தானே முன்னுதாரணமாகவும் இருந்தவர் எம்.ஜி.ஆர்.

இதேபோல், மதுரையில் தமிழன்னைக்கு சிலை அமைப்பதில் தொடங்கி, தமிழ் மொழியை உலக அளவில் கொண்டு செல்வதற்கு அவர் எடுத்த பல முயற்சிகள் மூலம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருந்த தமிழ்ப் பற்றை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

You might also like