அண்ணாவின் சிகிச்சைக்கான செலவை ஏற்ற எம்ஜிஆர்!

அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தபின் 1968-ல் சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்த நேரம். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த அனந்த நாயகி கேள்வி நேரத்தின்போது அண்ணா அவர்களை நோக்கி, “முதல்வர் அவர்களே, நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியதில் எவ்வளவு பணம் செலவானது. அது உங்கள் சொந்தப் பணமா? அல்லது அரசு பணமா? அல்லது உங்கள் கட்சி செலவா?” என்று கேட்டார்.

அதற்கு அண்ணா அவர்கள் சபையைச் சுற்றிப் பார்த்து, “உங்களுடைய இந்தக் கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்கிறேன்” என்றவுடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாக சிரித்தனர்.

மறுநாள் சட்டப்பேரவைக் கூடியதும் அதே கேள்வி நேரத்தில், “நேற்று நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்” என்று அவர் மீண்டும் கேட்டார்.

அண்ணா அவர்கள், “எனது சிகிச்சை முழு செலவையும் நானும் கொடுக்கவில்லை. தமிழக அரசும் கொடுக்கவில்லை. எங்கள் கட்சியும் அந்தச் செலவை ஏற்கவில்லை.
செலவான தொகை ஒரு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாய். அதை மொத்தமும் இங்கே, இதோ சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்திருக்கிற என் அன்புத் தம்பி எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், அவரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை, எனக்காக, என் சிகிச்சைக்காக அவரே ஏற்றுக் கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் இதோ.

நேற்று அவர் அவைக்கு வரவில்லை. அவர் முன்னால் இந்த விளக்கத்தைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியே நேற்று நான் பதில் சொல்லவில்லை” என்றவுடன் சட்டமன்ற அவையில் எழுந்த கரவொலி கட்டடம் தாண்டிக் கேட்டது.
வாழ்க்கையின் அனைத்து விநாடிகளையும் செதுக்கிச் செதுக்கி தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டவர் எம்.ஜி.ஆர்.

பட்டினியில் கிடந்தபோதும் சரி, பணம் மழைபோல அவர் வாழ்வில் கொட்டிய போதும் சரி தன்னிலை தவறாதவர் எம்.ஜி.ஆர்.

அண்ணா அவர்களுக்கான சிகிச்சை தொகையை எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொண்டதாக ஒரு நாளும், ஒரு இடத்தில் கூட அவர் சொன்னதில்லை. அண்ணா அவர்கள் சொன்ன பிறகே இந்த உண்மை நாட்டுக்குத் தெரிந்தது.

– நன்றி முகநூல் பதிவு

You might also like