பெண்களின் அந்தரங்க உரிமைக்கு மதிப்பளிக்கும் தீர்ப்பு!

2012 நிர்பயா சம்பவத்தையொட்டி அமைக்கப்பட்ட ஜே.எஸ்.வர்மா தலைமையிலான குழுவும் இரு விரல் பரிசோதனை குரூரமானது என்று தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, 2013-ல் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம் (2013)-ன்படி இரு விரல் பரிசோதனை சட்டவிரோதமானது என மாற்றப்பட்டது.

‘பாலினரீதியான வன்முறையைப் பரிசோதிப்பதற்கான மருத்துவ நடைமுறை குரூரமாகவும் மனிதத்தன்மையற்ற வகையிலும் இருக்கக் கூடாது’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், கலிஃபுல்லா அமர்வு 2013-ல் தெரிவித்ததோடு, பாலியல் வல்லுறவை உறுதிப்படுத்த முறையான மருத்துவப் பரிசோதனையைப் பரிந்துரைக்கும்படியும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

மத்திய சுகாதார அமைச்சகம் 2014-ல் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், ‘பாலியல் வல்லுறவை உறுதிசெய்ய இரு விரல் பரிசோதனை பயன்படுத்தப்படக் கூடாது’ எனக் குறிப்பிடப்பட்டது.

ஆனால், அதை முழுமையாகத் தடைசெய்யும் சட்டம் இல்லாததால், இரு விரல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. ஜார்க்கண்ட் வல்லுறவு வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டது.

இவ்வளவுக்குப் பிறகும் இரு விரல் பரிசோதனைகள் தொடர்வதைக் கண்டிக்கும் வகையில்தான் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சிலவற்றை வலியுறுத்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளின் பாடப்புத்தகங்களில் இருந்து இரு விரல் பரிசோதனை குறித்த பகுதியை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பெண்களுக்கு எதிரான இந்த நடைமுறை அனைத்து வகையிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே.

சட்டம் இயற்றுவோரும் அதைச் செயல்படுத்துவோரும் இதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

– நன்றி : இந்து தமிழ் 

You might also like